
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அமைதிப் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையிலிருந்து தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை சென்றது.
பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் கலைஞர் நினைவிடத்திலும் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
முதற்கு முன்பாக, பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், ” பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!
நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் Get Out-தான்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!” என குறிப்பிட்டுள்ளார்.






