தமிழ்நாடு

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட முதல் பெண் ஓதுவார் : சுஹாஞ்சனாவுக்கு குவியும் பாராட்டுகள்!

தமிழ்நாட்டில் முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்ட சுஹாஞ்சனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட முதல் பெண் ஓதுவார் : சுஹாஞ்சனாவுக்கு குவியும் பாராட்டுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் கடந்த 1970ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரால் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை 51 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நிறைவேற்றியுள்ளார். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது.

இதையடுத்து தி.மு.க அரசின் 100வது நாளான நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உட்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இதில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பலரும் சுஹாஞ்சனாவுக்கும், முதலமைச்சருக்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சுஹாஞ்சனா தேனுபுரீஸ்வர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்து தனது பணியைத் தொடங்கினார். இவர் தமிழில் 'சைவ திருமுறைகள்' பாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து சுஹாஞ்சனா, “ஓதுவார் பணி ஆணை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இறைவன் முன்பு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் விருப்பப்பட்டு ஓதுவார் பயிற்சி பெறவேண்டும். இது குழந்தைகள் பக்தி நெறியுடன் வளர தூண்டுதலாக இருக்கும். எனக்கு ஓதுவார் பணி வழங்கி பக்தி நெறியைப் பரப்பும் வாய்ப்பு அளித்த அரசுக்கு நன்றி. என்னைப்போல் உள்ள பல பெண் ஓதுவார்களுக்கும் பணி ஆணை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories