தமிழ்நாடு

100 நாளில் வரலாறு காணாத சாதனை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்; அறநிலையத்துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

தமிழ்நாடு முதல்வரின் 100 நாள் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் என்னென்ன குறித்த செய்தி தொகுப்பு.

100 நாளில் வரலாறு காணாத சாதனை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்; அறநிலையத்துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்று நூறாவது நாளை எட்டி உள்ளது. இந்த 100 நாட்களில் தமிழ்நாட்டில் பலதரப்பட்ட மாற்றங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்தியுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்த வகையில் இந்து அறநிலையத்துறை சார்பில் இதுவரையில்லாத மிகப்பெரிய மாற்றங்களை தமிழ்நாடு முதல்வர் நிகழ்த்தியுள்ளார்.

கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தினார்.  காலப்போக்கில் கோவில்களில் வட மொழிகளில் அர்ச்சனை செய்வது அதிகரித்து வந்த நிலையில் அதனை குறைத்து அனைவருக்கும் புரியும் வகையில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப் பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு அதற்கான பதாகைகளையும் வெளியிட்டார். முதல்வரின் இந்த உத்தரவு தமிழ் அறிஞர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இது ஒருபுறமிருக்க இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் கட்டிடங்கள், மனைகள் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி இன்று வரை 187.91 ஏக்கர் நிலமும் 161 கிரவுண்ட் மனைகளும் 1887.13 சதுரடி கட்டடங்களும் 15 கிரவுண்ட் 597 சதுர அடி  குளக்கரைகளும் திருக்கோவில் வசம் மீட்க்கப்பட்டுள்ளது.  இதன் மொத்த மதிப்பு சுமார் 625 கோடியே 83 லட்சம் ஆகும்.

"அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்னும் திட்டத்தின் மூலம் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கோவில்களில் நிலைமையை ஆய்வு செய்து குடமுழுக்கு நடைபெறாத கோயில்களில் விரைந்து குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காலத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் பூசாரிகள் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித் தொகையாக 4000 ரூபாய் ரொக்கமும் 10 கிலோ அரிசி உட்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் முதல்வரால் செயல்படுத்தப்பட்டது.

பேரிடர் காலங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 11,065 பணியாளர்கள் பயன்பெற்றனர். மேலும் பணியாளர்களின் அன்றாட பசியினை போக்கும் வகையில் கோவில்களில் தினம்தோறும் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டு வந்தது. கோயில்களுக்கு வரும் பொதுமக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் பதிவு செய்யும் வகையில் "கோரிக்கையை பதிவிடுங்கள்" என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு பெறப்படும் குறைகள் மற்றும் கோரிக்கைகள் 30 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பக்ரீத்ஸ்வரர் ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை திருவிழாவினை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தர விட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மாவட்ட அளவில் கொண்டாடப்படுகின்ற இவ்விழாவினை அரசு விழாவாக கொண்டாட வழிவகை செய்த முதல்வருக்கு வரலாற்று அறிஞர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து துறைகளிலும் மதிப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் அவர்களின் ஆட்சிக்காலம் 100 நாட்களை தொட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். கலைஞர் செய்திகளுக்காக செய்தியாளர் சிவக்குமார்

banner

Related Stories

Related Stories