தமிழ்நாடு

80வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'முரசொலி' : “கலைஞர் ஈன்றெடுத்த மூத்த பிள்ளை” - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

முத்து விழா காணும் ‘முரசொலி’யை வாழ்த்தி தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மடல் வரைந்துள்ளார்.

80வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'முரசொலி' : “கலைஞர் ஈன்றெடுத்த மூத்த பிள்ளை” - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முத்து விழா காணும் ‘முரசொலி’யை வாழ்த்தி தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

முத்தமிழறிஞர் கலைஞர் இளமைக் காலத்திலேயே இலட்சிய தாகத்துடன் ஈன்றெடுத்து, எந்நாளும் தோளிலும் இதயத்திலும் சுமந்து, வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணியென வளர்த்தெடுத்த, அவரது ‘மூத்த பிள்ளை‘ என்ற பெருமை கொண்டது முரசொலி ஏடு. அது வெறும் அச்சிட்ட தாள் அல்ல, நம் கொள்கைப் போராட்டத்திற்கான கூர்வாள். அறவழிக் களத்தின் அச்சேறிய ஆயுதம். தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலிக்கு, இன்று (ஆகஸ்ட் 10) பிறந்தநாள். 1942-இல் தொடங்கப்பட்டு, 79 ஆண்டுகளை நிறைவு செய்து, 80-ஆம் ஆண்டில் அடிவைத்து, முத்து விழா காணும் முரசொலிக்கு தமிழ் இதழியல் வரலாற்றில் எப்போதுமே முக்கியமான - தனிச் சிறப்பான இடம் உண்டு.

திருவாரூரில் துண்டு அறிக்கையாக தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட முரசொலி பின்னர், வார ஏடாக - நாளிதழாக வெளியானது. அதனை வாடிவிடாமல் வளர்த்தெடுப்பதற்காகத் தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர் தலைவர் கலைஞர். அவருக்கு உறுதுணையாக - அவரது மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன் அவர்களும், ஆசிரியர் முரசொலி செல்வம் அவர்களும் மற்றும் முரசொலி குழுவினரும் இருந்து, திராவிடத்தின் சீரிய முழக்கமாகத் திக்கெட்டும் ஒலிக்கச் செய்தனர்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா ஆகியோரின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் சுடரொளியாக - திராவிடச் சூரியனாக முரசொலி கடந்து வந்த போராட்டப் பாதை, இயக்கத்தின் இன்றைய தலைமுறை கற்க வேண்டிய இன்றியமையாத பாடமாகும். தேர்தல் களங்களில் முரசொலியின் வாசகங்கள் வாக்குபலத்தைப் பன்மடங்கு பெருக்குகின்ற வலிமை கொண்டவை. கழகம் கண்ட போராட்டங்களின் போது முரசொலியின் முழக்கங்கள் களத்தில் பலத்தைப் பெருக்கி முறுக்கேற்றும். கழக ஆட்சி அமையும் போதெல்லாம் அரசின் கெஜட் போல மக்களுக்கான திட்டங்களின் பலன்களை விரிவாக விளக்கி எடுத்துச் செல்லும்.

80வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'முரசொலி' : “கலைஞர் ஈன்றெடுத்த மூத்த பிள்ளை” - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

எதிர்க்கட்சியாக கழகம் இருந்தபோதும், மக்களின் பக்கம் நின்று ஒரு புலனாய்வு ஏடுபோல முரசொலி செயல்பட்டதும், அது ஓங்கி ஒலித்த உண்மைகளைத் தாங்க முடியாமல் அன்றைய ஆட்சியாளர்கள் சட்டமன்றத்தில் கூண்டு அமைத்து, முரசொலி ஆசிரியரை அதில் நிறுத்தி குதூகலம் கொண்டாடினார்கள் என்பதும், அப்போதும் தன் இதழியல் அறவழித் துணிவுடன் நிமிர்ந்து நின்றது என்ற பெருமைமிகு வரலாறு முரசொலிக்கு உண்டு. நெருக்கடி நிலைக் காலத்தில் முரசொலியைத் தலைவர் கலைஞர் பயன்படுத்திய சாதுரியமிக்க முறைகள், இதழியல் தொடர்பான முனைவர் பட்ட ஆய்வுகளுக்குரியவை.

செய்திகளுக்குத் தணிக்கை முறை இருந்த அந்தக் காலத்தில், உங்களில் ஒருவனான நான் உள்பட “மிசா” சிறையில் இருந்த கழகத்தினரை நேரடியாகச் சுட்டிக்காட்ட முடியாது என்பதால், ‘அண்ணா துயிலுமிடத்தில் அஞ்சலி செலுத்த இயலாதோர் பட்டியல்’ என வெளியிட்ட அவரது நுணுக்கமான சிந்தனையும், செறிவான எழுத்தாற்றலும் எக்காலத்திற்கும் நின்று நிலைத்திருப்பவை. இன்றுபோல தகவல்தொழில் நுட்ப வசதிகள் – அலைபேசிகள் – சமூக வலைதளங்கள் இல்லாத அந்தக் காலத்தில், தன் உடன்பிறப்புகளுடன் அன்றாடம் உரையாடுவதற்கும் உரமேற்றுவதற்கும் உரிய ஊடகமாக முரசொலியைப் பயன்படுத்தியவர் தலைவர் கலைஞர். அவருக்கும் அவரது உடன்பிறப்புகளுக்கும் ஒவ்வொரு நாள் பொழுதும் ‘முரசொலி’யுடன்தான் விடியும்.

‘உடன்பிறப்பே’ என்று தொடங்கும் தலைவர் கலைஞரின் கடிதங்களும் அதில் உள்ள கருத்துகளும் தொண்டர்களை நேரில் சந்தித்து உரையாடுகின்ற உணர்வைத் தரக் கூடியவை. ஒரு தலைவருக்கும் அவரது இயக்கத்தின் இலட்சோப இலட்சம் தோழர்களுக்குமான கெட்டியான உறவுப் பாலமாகத் திகழ்ந்தது முரசொலி. பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது, வளர்த்தெடுத்தது முரசொலி. பல கவிஞர்களுக்கு பாடிவீடாக முரசொலி தளம் அமைத்துத் தந்தது. பல பேச்சாளர்களுக்கு அன்றாடம் அரசியல் கருத்துகளை அள்ளி வழங்கும் அமுதசுரபியாக முரசொலி திகழ்ந்தது; இன்றும் அது தொடர்கிறது. முரசொலி வெளியிடும் பொங்கல் மலர், அண்ணா பிறந்தநாள் மலர், தலைவர் கலைஞர் பிறந்தநாள் - நினைவு நாள் மலர் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு வெளியீடுகளும் திராவிடக் கருவூலங்கள்.

காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் அழகிய அச்சமைப்பில், வண்ண வண்ணப் பக்கங்களுடன், வலிமையான கருத்துகளுடன், புதிய - புரட்சிகரமான சிந்தனைகளுடன், முத்தமிழறிஞர் கலைஞர் பொறித்தபடி, ‘இன்றைய செய்தி -நாளைய வரலாறு’ என்ற முகப்புடன் முரசொலி நாள்தோறும் முழங்கிக் கொண்டிருக்கிறது. உயர்தமிழ்மொழி - இன மீட்சி, உலகத் தமிழர்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் முன்னேற்றம் இவையே ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்கிற இலச்சினையைக் கொண்ட முரசொலியின் இலட்சியம். அத்தகைய இலட்சியப் பாதையில், முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்த வழியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்து, அவரது உடன்பிறப்புகளாம் உங்களின் ஒத்துழைப்புடன், உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் பொறுப்பினை சுமந்திருக்கிறேன். உங்களைப் போலவே எனக்கும் முரசொலி எப்போதும் வாளும் கேடயமுமாகத் திகழ்கிறது.

அனைவருக்கும் அனைத்தும் பாகுபாடின்றிக் கிடைத்திட உறுதிபூண்டு, சமூகநீதிக் கொள்கை வழி - சமத்துவத்தை நிலைநாட்டிட என் தலைமையிலான உங்கள் அரசு – தமிழ்நாட்டு மக்களின் அரசு உறுதி பூண்டிருக்கிறது. வளம் மிக்க - வளர்ச்சி மிகுந்த – அமைதி நிறைந்த -முன்னேறிய தமிழ்நாட்டை உருவாக்கும் ‘திராவிட மாடல்’ அரசை ‘முரசொலி’க்கும் காலம் இது. அதனை நினைவுபடுத்தும் வகையில், ஓய்வின்றி உழைத்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில் அன்றாடம் அவரது மூத்த பிள்ளையாம் முரசொலி வைக்கப்படுகிறது. தலைவர் கலைஞரின் ஓய்விடத்திற்கு வரும் உடன்பிறப்புகள் அனைவரின் பார்வையையும் அது ஈர்க்கிறது. உயிர்நிகர் தலைவர் கலைஞருடன் உடன்பிறப்புகள் உரையாடுவது போன்ற உணர்வை அது ஏற்படுத்துகிறது. தலைவர் கலைஞர் நம்மிடையே இல்லை என்கிற எண்ணம் சிறிதளவிலும் தோன்றாதவாறு, முரசொலியின் இலட்சியப் பயணம் தொடர்கிறது.

அந்தப் பயணத்தில் துணை நிற்கும் ஆசிரியர் முரசொலி செல்வம் அவர்கள், பொறுப்பாசிரியர் சேது அவர்கள், தலையங்க ஆசிரியர்கள், துணையாசிரியர்கள், ஆசிரியர் குழுவினர், அச்சுப்பணி – விநியோகம் - விளம்பரம் உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த உடன்பிறப்புகளும் பாராட்டுக்குரியவர்கள். முத்துவிழா காணும் முரசொலியின் பயணத்தில் உங்களில் ஒருவனான எனக்கும் பங்கு இருக்கிறது என்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். முரசொலியின் வெற்றியில் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் பங்கு இருக்கிறது. அந்த வெற்றி தொடர்ந்திட, இலட்சியப் பயணம் நீடித்திட முரசொலியின் முழக்கம் எந்நாளும் இப்பாரதிரத் தொடரட்டும் என உடன்பிறப்புகளுடன் இணைந்து உங்களில் ஒருவனான நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories