முரசொலி தலையங்கம்

“இதற்கும் காரணம் நேருவா? ஏழைகளை மிகவும் ஏழைகளாக்கிய மோடி அரசு” - முரசொலி தலையங்கம் சாடல்!

ஐந்து ஆண்டுகளுக்குள் பத்துக் கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று சொன்னவர் பிரதமர். அது தொடர்பான புள்ளிவிபரத்தை வெளியிட பிரதமர் தயாரா?

“இதற்கும் காரணம் நேருவா? ஏழைகளை மிகவும் ஏழைகளாக்கிய மோடி அரசு” - முரசொலி தலையங்கம் சாடல்!
News Laundry
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 10, 2021) தலையங்கம் வருமாறு:

ஏழைகள் பற்றி பிரதமர் பேசத் தொடங்கி இருக்கிறார் முதன்முதலாக! அதுவும் பேச மட்டுமே தொடங்கி இருக்கிறார். அவர்களுக்காகச் செயல்பட அவர் இன்னமும் தொடங்கவில்லை!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன்பிறகும் ‘காங்கிரஸ் ஆட்சியில் இருப்பது போலவே' நினைத்து பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருக்கிறார். அவரை ஏதாவது குற்றம் சொன்னால், அவர் பிறப்பதற்கு முன்னால் ஆளத் தொடங்கிய பிரதமர் நேருவையே குறை சொல்வார் மோடி. அந்தளவுக்கு நேருவை எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பவர் மோடி.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி பலன் பெற்ற மத்திய பிரதேசமக்களுடன் காணொலிக் காட்சி மூலமாகப் பேசிய பிரதமர் மோடி ஏழைகளுக்காக அதிகமாகக் கண்ணீர் சிந்தி இருக்கிறார். தனது ஏழாண்டு கால ஆட்சியில் ஏழைகளுக்காகச் செய்த திட்டங்கள் என்ன என்பது குறித்தோ, ஏழைகள் துயர் துடைக்க தனது அரசு எடுத்த முயற்சிகள் குறித்தோ, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது குறித்து புள்ளி விபரமோ என எதையுமே சொல்லாமல், மீண்டும் மீண்டும் முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீதே விழுந்துபிராண்டி இருக்கிறார்.

“ஏழைகள் விவகாரத்தில் போலித்தனத்தையே காங்கிரஸ் கடைப்பிடித்தது. ஏழைகளுக்கு எந்த வசதியும் செய்து தராமல் அவர்களிடம் இருந்து அனுதாபம் பெறும் வகையில் மட்டும் காங்கிரஸ் நடந்து கொண்டது” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. இப்படிச் சொல்பவர் ஆளும் தேசத்தின் நிலைமை என்ன?

உலக அளவில் பட்டினியோடு வாழும் மக்கள் கொண்ட 117 நாடுகளில், இந்தியா 102 ஆவது இடத்தில் உள்ளது. இதுதான் உண்மையான நிலைமை. இதனைப் போக்குவதற்கு மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகி இருக்கிறது. வறுமை 23 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட நேரடி நிதி உதவிகள் என்ன? கடன் கொடுக்கச் சொல்லி இருக்கிறோம் என்பது தீர்வு அல்ல. ஒன்றிய அரசு எந்த நிதியும் தராமல், வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பது அந்த மக்களை மேலும் மேலும் கடன்காரர்களாகத்தானே ஆக்கும்? ‘நான் உனக்கு100 ரூபாய் கடனாகத் தருகிறேன், நீ எனக்கு சோறு வாங்கிக் கொடு' என்பது போன்ற சாமர்த்தியவாதம் தானே இதுவும்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கறுப்புப் பணத்தை மீட்போம் என்றார் மோடி. மீட்கப்பட்டு விட்டதா? அத்தோடு சேர்த்து இன்னொன்றையும் சொன்னார். அப்படி மீட்கப்பட்ட பணத்தை வைத்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்றார். செலுத்தப்பட்டதா?

விவசாயிகள் விளைவிக்கும் பொருளுக்கு லாபம் என்பது இரட்டிப்பு ஆகும் என்று சொன்னதும் அவர்தான். இரட்டிப்பு ஆனதா? இல்லை. இருந்த வருமானமும் போனதுதான் உண்மை. வருமானம் மட்டுமல்ல; அந்த விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பறிக்கும் தந்திரமாக, அவர்களை விளைநிலத்தில் இருந்தே துரத்தும் தந்திரமாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது யார்? இதே ஏழைப் பங்காளர்தானே? கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தலைநகர் டெல்லியில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களைச் சந்திக்க, அழைத்துப் பேச இரக்கம் வந்ததா பிரதமருக்கு?

போராடுபவர்கள் இந்தியர்கள்தானே? அந்நியர்களா அவர்கள்? அவர்களை அழைத்துப் பேசுவதால் இந்த பா.ஜ.க ஆட்சிக்கு என்ன குறைவு வந்துவிடப்போகிறது? ஏன் அழைத்துப் பேச மனமில்லை? அழைத்துப் பேசினால், யாருக்குச் சாதகமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறதோ அந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கோபித்துக் கொள்வார்களே? அந்த அச்சம்தான் காரணம். அதுதான் விவசாயிகளைச் சந்திக்க பிரதமர் தவிர்க்கிறார். இத்தகைய எண்ணம் கொண்டவர் ஏழைகளைப் பற்றி பேசலாமா?

ஐந்து ஆண்டுகளுக்குள் பத்துக் கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று சொன்னவர் பிரதமர். அது தொடர்பான புள்ளிவிபரத்தை வெளியிட பிரதமர் தயாரா?

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன்கள் அதிகமாகத் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே கொடுத்த கடன்கள், வராக்கடன்களாக ஆக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்வதற்கான துளி யோசனையும் இல்லை. இத்தகைய பிரதமர் ஏழைகளைப் பற்றி பேசலாமா? கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்த நன்கொடையில் 93 சதவிகிதம் பா.ஜ.க.வுக்குத் தான் தரப்பட்டதாக புள்ளிவிபரம் சொல்கிறது. அப்படியானால் அவர் அவர்களுக்குச் சாதகமாகத்தானே இருப்பார்?

பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. நிதிப்பற்றாக்குறை அதிகமாகி வருகிறது. வருவாய் கூடவில்லை. அரசின் கடன் சுமை அதிகமாகி வருகிறது. - இதுதான் மோடி அரசின் சாதனைப் பட்டியல். இதுபற்றிய விளக்கத்தை அவர் அளித்ததாகத் தெரியவில்லை.

ஒரு தனிநபரின் செலவுத் திறனை வைத்துத்தான் வறுமைக்கோடு கணக்கிடப்படுகிறது. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 32 ரூபாயும், நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் செலவிடமுடியாத சூழலில் இருக்கும் நபர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவராக அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த நுகர்வுத் திறன், 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017 இல் குறைந்துவிட்டதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.

தனி நபர், 2011-12ஆம் ஆண்டில் மாதம் சராசரியாக ரூ.1,501 செலவிடும் திறனுடையவராக இருந்தநிலையில், 2017-18-ல் அது ரூ.1,446-ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட இந்த 7 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 3 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்றுள்ளனர். இத்தகைய சூழலில் பிரதமர் மோடி, தனது ஆட்சிக் காலத்து ஏழைகளை முன்னேற்றுவதற்காகப் பேச வேண்டும்!

banner

Related Stories

Related Stories