தமிழ்நாடு

“இனி கோயில்களில் தமிழ் மந்திரம் ஒலிக்கும்” : மயிலாப்பூர் கோயிலில் தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு.

“இனி கோயில்களில் தமிழ் மந்திரம் ஒலிக்கும்” : மயிலாப்பூர் கோயிலில் தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர்கள் மற்றும் எண்களின் பதாகைகள் கோயிலில் வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது முதல் இந்துசமய அறநிலையத்துறையில் பல்வேறு கள ஆய்வுகளை அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு மேற்கொண்டு வருகிறார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அகற்றம், கோவில் சொத்துகள் குறித்த அரசு இணையதளங்களில் வெளியிடுதல் போன்ற சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்து சமய அறநிலையத்துறை.

இந்நிலையில் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற புதிய திட்டத்தை அண்மையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ விவரம் குறித்த பதாகையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் முதல்கட்டமாக அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 கோவில்களில் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல. 1971ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக் காலத்தில் அப்போது இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிட்டார்.

1974ஆம் ஆண்டு, இதுதொடர்பான சுற்றறிக்கை இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரும்புகிறவர்கள் மட்டுமே தமிழில் அர்ச்சனை மேற்கொள்ளலாம். இதர மொழிகளில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளை இத்திட்டம் தடுக்காது என்பதனை 1998ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தின் போது கலைஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பக்தர்கள் தங்கள் வழிபாடுகளுக்கு உகந்த மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில், இருவேறுபட்ட கருத்துகளுக்கு இடமில்லை. பெரும்பான்மை மக்களின் விருப்பம் எதுவோ, அப்படியே அரசு செயல்படும். அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவதே அரசின் கடமை. சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல், எந்த மதத்தினரின் மனமும் புண்படாமல் முதலமைச்சர் முடிவெடுப்பார்.

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர்கள் மற்றும் எண்களின் பதாகைகள் கோயிலில் வைக்கப்படும். 536 கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்படும்.

அடுத்தக்கட்டமாக 536 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் இந்த திட்டம் கொண்டுவரப்படும். விரைவில் அனைத்து கோயில்களுக்கும் தமிழில் 14 போற்றி புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதனை, முதலமைச்சர் அவர்களே வெளியிடுவார். திருக்கோயில்கள் தாங்கள் விரும்பும் போற்றி புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories