தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு ஓரணியில் நிற்கிறது என்பதை கர்நாடகாவுக்கு உணர்த்துவோம்!

காவிரி நீர் பங்கீட்டை பொறுத்தவரை தமிழகத்தை எப்போதுமே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது கர்நாடக ஆட்சியாளர்களின் பழக்கம் என ‘தினகரன்’ நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு ஓரணியில் நிற்கிறது என்பதை கர்நாடகாவுக்கு உணர்த்துவோம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க சட்டமன்ற கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். இதில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் தமிழகம் கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நிற்கிறது என்பதை கர்நாடகாவுக்கு உணர்த்த வேண்டும் என ‘தினகரன்’ நாளிதழ் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

‘தினகரன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

காவிரி நீர் பங்கீட்டை பொறுத்தவரை தமிழகத்தை எப்போதுமே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது கர்நாடகா ஆட்சியாளர்களின் பழக்கம். அதிலும், பா.ஜ.க ஆட்சி என்றால் நிலைமையை சொல்லவே வேண்டாம். தங்களுடைய அணைகளையெல்லாம் முழுவதுமாக நிரப்பிவிட்டு அதன் பிறகு வெள்ள வடிகால்வாயிலாகவே தமிழகத்துக்குள் பாயும் காவிரியை கர்நாடகா அரசு பயன்படுத்தி வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அளவுக்கதிகமான மழை பெய்ததால் தமிழகத்துக்கு அதிகமான தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டது. தமிழகத்தில் காவிரியில் மேட்டூரை தவிர வேறு பெரிய அணை கிடையாது. மேட்டூரை தாண்டி அணை கட்டுவதற்கான நில அமைப்பு வேறு எங்குமே கிடையாது. கட்ட வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் சிறுசிறு தடுப்பணைகளையும் தமிழகம் கட்டிவிட்டது.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு ஓரணியில் நிற்கிறது என்பதை கர்நாடகாவுக்கு உணர்த்துவோம்!

இது தெரியாமல் தமிழகம் தண்ணீரை கடலுக்குள் வீணாக திறந்துவிட்டுவிட்டது என்று கூப்பாடு போட்டது கர்நாடகா. காவிரி அன்னை தமிழகத்துக்குள் நுழையும் பகுதிக்கு அருகிலேயே மேகதாது பகுதியில் புதிதாக அணை கட்டுவது கர்நாடகாவின் நீண்ட கால திட்டம். பெங்களூர் மாநகரத்தின் 4.75 டி.எம்.சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 67.16 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதை ஏற்க முடியாது.

இந்த திட்டம் நிறைவேறினால், தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். காவிரி நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட நகரங்களில் தவித்த வாய்க்கு கூட தண்ணீர் கிடைக்காது. இதையெல்லாம் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

துரைமுருகனிடம் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேததாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஆனால், மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா அமைச்சர்கள் கொக்கரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க சட்டமன்ற கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். இதில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் தமிழகம் கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நிற்கிறது என்பதை கர்நாடகாவுக்கு உணர்த்த வேண்டும். அது அவர்களின் கடமையும் கூட? செய்வார்களா?”.

banner

Related Stories

Related Stories