உக்ரைன் நாட்டில் ஒலித்த ஒரு இளைஞனின் குரல்; அது குரலல்ல, நன்றி மறவாத் தமிழினத்தின் நாடித் துடிப்பு! ஐரோப்பா கண்டத்தின் கிழக்கு திசையில் இருக்கும் ஒரு நாட்டில், ஆசியக் கண்டத்தின் கடைக் கோடியில் உள்ள ஒரு மாநிலத்திலிருந்து சென்ற இளைஞன், தன் தாய்மொழி தமிழில் கர்ஜிக்கிறான். தமிழினத் தலைவர் கலைஞரின் தமிழெடுத்து அந்த இளைஞன் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும், அரங்கத்தில் கூடியிருந்த இளைஞர்களின் ஒருமித்த வரவேற்பையும் ஆரவாரத்தையும் பெற்றது!
விழா அரங்கில் தமிழர்கள் மட்டும் கூடியிருக்கவில்லை! உக்ரைன் நாட்டின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் அமர்ந்திருந்த அவையில், அந்த இளம்சிங்கம், கூடியிருந்தோரின் ஆர்ப்பரிப்புகளிடையே மேடையேறியது! அவர் மேடை ஏறச் செல்லும் போதே, ஏன் இத்தனை ஆரவாரம்.. கரவொலி.. அந்தக் காணொலிக் காட்சியைக்காண முற்பட்டபோது நமக்கு விளங்கவில்லை !
அந்த இளைஞர் ஆரவாரம் எழுப் பியவர்களுக்கு கையசைத்து நன்றி கூறியவாறு, ஒரு திரைப்பட இளம் கதாநாயகன் போல கம்பீர நடைப்போட்டு அரங்க மேடை ஏறுகிறார். அவர் ‘மைக்’ முன் நின்று ஆங்கிலத்தில் பேசத்துவங்குகிறார்!
அவரைப் போன்று மருத்துவப் படிப்பு படித்து பட்டமளிப்பில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறார். அதுவரை ஆங்கில உரை நிகழ்த்திய அவர், திடீரென “ஈராயிரம் ஆண்டுகள் நம் அன்னைத் தமிழகம் தவம் இருந்து பெற்ற தலைமகன், சிங்க நடையும், சிங்காரத் தென்றல் நடையும், பொங்கு கடல் நடையும், புரட்சிக் கவி நடையும் பெற்ற பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!” - எனத் தமிழில் முழங்குகிறார்.
அவையில் இருந்த தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். தமிழ் புரியாதவர்கள்கூட அந்த சரளநடை கேட்டு தங்களை அறியாதுகையொலி எழுப்புகின்றனர்! மருத்துவப் படிப்பு முடித்த அந்த இளைஞர் அத்தோடு விடவில்லை.. அடுத்துத் தொடர்கிறார். “உள்ளம் கவர் ஓவியமே; உற்சாகக் காவியமே; ஓடை நறுமலரே... அன்பே, அமுதே, அழகே, உயிரே, கனியே, பழரசச் சுவையே, மரகத மணியே, மாணிக்கச்சுடரே.. என அழைத்து நம் உயிர்த் தமிழை பாராட்டிப் புகழ்ந்து பேசினாரே; அவர் யாரென்று கேட்டால், “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” என கழகத் தோழர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கக் கூடிய நம் தலைவர் கலைஞர், கட்டிக் காப்பாற்றி வைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தினை நாம் எல்லாம் நினைத்துப் பார்க்கிறோம்.. தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் கொரோனா காலத்தில் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நம் நாட்டின் தளபதியாரை.. தங்கத் தளபதியாரை!”- இப்படி முழங்குகிறார் அந்த இளைஞர்!
அவர் நடை, உடை பாவனைகளில் ஒரு இளம் ‘சூப்பர் ஹீரோவின்’ தோற்றம் காணப்படுகிறது! கண் டம் விட்டுக் கண்டம் வந்து படித்துப் பட்டம் பெற்றாலும், தன் தலைமுறை தமிழகத்தில் தலையெடுக்கக் காரண, காரியமாக இருந்த தமிழினத் தலைவர்களுக்கு, திராவிட இயக்கத்திற்கு நன்றி கூறிட அவர் தயங்கிடவில்லை!
அவர் உச்சரித்த ஒவ்வொரு சொல்லுக்கும் அந்த அரங்கத்தில் உற்சாக வரவேற்பு! அவர் பேசிய மொழி புரியாது அங்கே அமர்ந்திருந்த அந்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் கூட அந்தப் பேச்சின் சந்தம் கேட்டு பிரமித்துக் கேட்டனர்!
தமிழ் மண்ணில் உட்கார்ந்து கொண்டு சில தற்குறிகள் திராவிட இயக்கத்தை விமர்சித்துக் கொண்டிருக்கும் போது, அதன் பெருமை, அருமை உணர்ந்த அந்த இளைஞன், கண்டம் தாண்டி அந்த இயக்கத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறான்!
“அண்ணனே; எங்கள் ஆசானே! நீங்கள் உயர்த்திய கொடி, உணர்த்திய உணர்வு ஒரு போதும் மங்காது; நாடுகள் கடந்தாலும், தாயகம் திரும்பும் போது அந்த உணர்வோடுதான்திரும்புவோம்” என்ற உறுதி அந்த இளைஞனிடம் தெரிந்தது.
கலைஞரே! ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்பே!’ என ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் உடன்பிறப்பாகப் பாவித்து, அவர்கள் நல்வாழ்வுக்கும் ஏற்றத்துக்கும் வாழ்நாட்களை அர்ப்பணித்தவரே!
நீங்கள்என்றென்றும் நன்றியுள்ள தமிழர்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் என நன்றி காட்டும்உணர்வின் வெளிப்பாடு, அந்த இளைஞனின் வார்த்தைகளில் தெளிவானது. தமிழினம் தழைக்க தந்தைவழியில் போராடும் தளகர்த்தரே!
எங்கள் தளபதியே!
நாடுகள் கடந்தாலும் தமிழர்களின் இதயங்களில் கொலுவுற்று, கோலோச்சிக் கொண்டிருப்பவரே! எங்களின் வாழ்வுக்கும் வளத்துக்கும் வழிவகுத்து ஏற்றத்துக்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர்களின் அடியொற்றிப் பயணிக்கச் சூளுரைத்து, ஆட்சிக் கட்டிலினை அலங்கரிப்பவரே; எங்கள் நம்பிக்கை நட்சத்திரமே; உங்கள் பின்னால் அணிவகுக்க, உக்ரேனில் பயின்று பட்டம்பெற்ற தமிழ் இளைஞர்களும் தயாராக இருக்கிறோம் என்ற உறுதி அவரது பேச்சில் மிளிர்ந்தது.
உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்து - நன்றியுரை ஆற்றிய அந்த இளைஞரின் பேச்சும், அது பெற்ற வரவேற்பும், மொழி புரியாதவரையும் மோகிக்க வைக்கும் ஈர்ப்பு தமிழுக் குண்டு என்பதை உணர்த்துவதாக இருந்தது. கண்டம் கடந்து அந்த இளைஞர் ஆற்றிய உரை; திராவிட இயக்கத்தை அழித்து விடலாம் எனக்கனவு காண்போரின் எண்ணத்தில் விழுந்த பேரிடி!
- சிலந்தி