அரசியல்

‘ஒன்றியம்’ என்ற சொல்லை எதிர்ப்பது; குன்றிய அறிவின் வெளிப்பாடே - முரசொலியில் ‘சிலந்தி’ கட்டுரை! 

‘ஒன்றியம்’ என்பது தவறான சொல் அல்ல மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் அதனுடைய பொருள். ஒன்றியம் எனும் வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை.

‘ஒன்றியம்’ என்ற சொல்லை எதிர்ப்பது; குன்றிய அறிவின் வெளிப்பாடே - முரசொலியில்  ‘சிலந்தி’ கட்டுரை! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியம் - எனும் உயர்தமிழ்ச் சொல் இன்று பலரை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அது என்னவோ தெரியவில்லை; தாய்மொழியில், அதன் தனிச்சுவை குன்றாது அழைக்கப்படும் சொல், பலரை கலக்கிப்போட்டுள்ளது! தமிழகச் சட்டப்பேரவையில் இதுகுறித்து விளக்கமளித்த நமது முதல்வர்கூட,‘இந்தச் சொல் கேட்டு யாரும் மிரள வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்! ‘ஒன்றியம்’ எனும் தாய்த்தமிழ்ச்சொல் கேட்டு, ஏதோ பேயைக் கண்டது போல சிலர் பயந்து சாகத் தேவையில்லை என்று, பரிவுடன் விரிவான விளக்கமும் தந்துள்ளார். புராணிகர்கள் மொழியில் சொன்னால், தமிழ்நாட்டின் சாபக்கேடோ என்னவோ; இங்கு தாய்மொழி, தமிழ் கேட்டு தமிழர்கள் பலரே தணல் வீழ் புழுவாய்த் துடிக்கின்றனர்!

‘ஒன்றியம்’ - எனக் கூறுவது பிரிவினைவாதம் எனப் புதுப்புது பொழிப்புரை எழுதுகின்றனர்! தி.மு.கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அது எது செய்தாலும், அதனைப் பிரிவினைவாதத்தோடு ஒப்பிடுவது என்பது, எதிரிகள் பல ஆண்டுகளாக எடுத்திடும் முனைமுறிந்த ஆயுதம்தான்! கழகம் மாநில சுயாட்சி முழக்கத்தை முன்வைத்த போதும் இதுபோன்ற குரல்கள் பல திக்கிலும் எதிரொலித்தன! கழகம் முன்னிறுத்துவது தனியாட்சி அல்ல; தன்னாட்சிதான்! அதுதான் மாநில சுயாட்சி எனப் பல்வேறு கட்டங்களில் விளக்கமளித்த பின்னும் ஏற்க மறுத்தனர்!

‘நீங்கள் ஏற்கனவே திராவிட நாடு கேட்டவர்கள். பிரிவினை கேட்டவர்கள். ஆகவே உங்களுடைய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு உங்களைச் சந்தேகிக்கிறோம்’ - என எதிரணியினர் கூறியபோது, "போர், போர் என்று அலைந்து அசோகன் களம் பல கண்டான். அவனுடைய கரியின் கால்பட்டு ஆயிரக்கணக்கானோர் பிணமாயினர். பிணக்குவியலைக் கண்டான் - தான், இனிமேல் போர் புரியமாட்டேன், புத்தன் வழிசெல்வேன் என்று கூறியபோது, உன்னுடைய பழைய வரலாறு- போர் வரலாறு - ஆகவே ஒப்புக் கொள்ளமாட்டோம் - என்று கூறியிருந்தால் இன்றைய இந்தியக் கொடியிலே அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டிருக்காது" - என்று அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அளித்த பதில், மாநில சுயாட்சிக்கு எதிராக வாதாடிய எதிரணியினரின் பொறி கலங்க வைத்தது! அன்று ‘மாநில சுயாட்சி’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒலித்த குரல் இன்று, இந்திய ஒன்றியத்தின் பலப் பகுதிகளிலும் ஒலிக்கிறது! பிரிவினைக் குரலாக அல்ல; உரிமைக்குரலாக! இன்றும் அதேபோல, ‘ஒன்றியம்’ எனும்சொல் பிரிவினைக் குரலாக பல கொத்தடிமைகள் காதில் ஒலிக்கிறது.

ஏதோ, அது ஒரு சமூகக் குற்றம் போல பலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குச் சரியான பதிலை சாட்டையடியாக நமது இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தந்துள்ளார்.‘ஒன்றியம்’ என்ற அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் கோலோச்சுகிறது; அதற்காகத்தான் நாங்கள் அதனைப் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் -பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்; எனப் பசுமரத்து ஆணி போன்ற பதிலைப் பதிவு செய்தார்! அந்தப் பதிவு, பல பைந்தமிழ்ப் பாவலர்கள், பாவாணர்கள், அறிஞர்கள் நெஞ்சங்களில் பால்வார்த்த பதிவாக அமைந்தது! ‘ஒன்றியம்’ - என்ற சொல்லை இதுவரை பயன்படுத்தினீர்களா? இப்போது பயன்படுத்துவது பல உள்நோக்கங்களைக் கற்பிக்கின்றது’ என்று விதண்டாவாதம் செய்பவர்களும் உண்டு! இதுபோன்ற வேரறுக்க வேண்டிய வாதங்கள் பலவற்றைப் பல ஆண்டு காலமாக எதிர்கொண்டு - அதன் விலா எலும்புகளை முறித்து வீறு கொண்டு எழுந்து நிற்பதுதான் திராவிட இயக்கம்!

தி.மு.கழகம் ஆட்சி பீடம் ஏறும் வரை, இன்றைய மாவட்டங்கள் ‘ஜில்லா’க்களாகத்தான் இருந்தன! மாவட்டங்களாக அதனை மாற்றிய போது, "இது என்ன; மாவட்டமா - மாவு ஆட்டமா?" எனக் கேலி புரிந்த கேடுமனம் படைத்தவர்களும் உண்டு! இன்று என்ன நிலை? அதே போன்று ‘கலெக்டர்’ மாவட்ட ஆட்சித் தலைவரானார், ‘சபாநாயகர்’ அவைத் தலைவரானார், ‘கணம்’ - மாண்புமிகுவானது,‘பஞ்சாயத்து யூனியன்’, உள்ளாட்சி ஒன்றியமானது, ‘மராமத்துத் துறை’ பொதுப்பணித் துறையானது. இப்படி அடுக்கிக் கொண்டே போகும் அளவு, அளவற்ற மாற்றங்கள் உருவானது கழக ஆட்சிக் காலங்களில்! ஏன், தமிழக அரசின் இலச்சினையில் இருந்த‘சத்யமேவ ஜெயதே’ எனும் சொல்லே‘வாய்மையே வெல்லும்’ என மாற்றிப் பொறிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றையும் ஏற்படுத்திய காலங்களில் தி.மு.கழக அரசு சந்தித்த ஏளனங்கள், ஏகடியங்கள்; ஏராளம்! ஏராளம்! அதனை எல்லாம் எதிர்கொண்டுதான் தி.மு.கழகம், அதன் இலட்சியக் கொடியை ஏற்றிப் போற்றிப் பாதுகாத்து வருகிறது.

சென்னை மாகாணத்துக்கு‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய ‘சென்னை மாகாண அசெம்பிளியில்’ கழகம் வைத்தபோது, இலக்கியத்தில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் உள்ளதா? - எனக் கேட்டவர்களும் உண்டு! ‘இமிழ் கடல் வரப்பில் தமிழகம்’ - என சிலப்பதிகாரக் காதையில் இருப்பதை எடுத்துக் காட்டி கலைஞர் பேசியது உண்டு. கேட்டவர்கள் சுருண்டு விட்ட காட்சிகளும் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. இவைகளெல்லாம் இன்பத் தமிழ் காத்து, இனியதோர் தமிழகம் உருவாக்கிட திராவிட இயக்கத்தினர் நடத்திக் காட்டிய மாற்றங்கள்! அந்த மாற்றங்களின் தொடர்ச்சியைத்தான் தமிழகச் சட்டமன்றம் இன்று கண்டு கொண்டிருக்கிறது.

‘ஒன்றியம்’ என்பது தவறான சொல் அல்ல; ‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது’என்பதுதான் அதனுடைய பொருள்.‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை! அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காக அதை நாங்கள் பயன்படுத்துகிறோம்; பயன்படுத்துவோம்; பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்!- என இன்றைய முதல்வர் சட்டமன்றத்தில் முழங்கியுள்ளார்!‘பயன்படுத்துகிறோம்’ என்பதில் தீர்மானமும், ‘பயன்படுத்துவோம்’என்பதில் தீர்க்கமும், ‘பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்’ என்பதில் திடமும் எதிரொலித்தது. முதல்வர் அறிவித்த இந்த முப்பரிமாண முடிவில்; பெரியார் - அண்ணா - கலைஞர் ஆகியோர் காட்சி தந்தனர். அதன் விளைவில் எழுந்ததுதான்; "நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா. அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர்; கலைஞரின் தொடர்ச்சி நான்" எனும் உரம்மிகு சொற்றொடர்! எழுக தமிழகம்! அடிமை முறிச்சீட்டு அழித்தொழித்து ஆர்ப்பரித்து மீண்டும் வீறுகொள்ளட்டும் தமிழகம்!

banner

Related Stories

Related Stories