தமிழ்நாடு

“தடுப்பூசியே கிடைக்கவில்லை.. அதற்குள் ‘நன்றி பிரதமர் அவர்களே’ என்ற போஸ்டர் எதற்கு?” : மதுரை MP ஆவேசம் !

'நன்றி பிரதமர் அவர்களே' அஞ்சல் அலுவலகங்கள் முன் எதற்காக இந்த போஸ்டர் என மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தடுப்பூசியே கிடைக்கவில்லை.. அதற்குள் ‘நன்றி பிரதமர் அவர்களே’ என்ற போஸ்டர் எதற்கு?” : மதுரை MP ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒன்றிய அரசு, இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அஞ்சல் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில், அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாய் கொடுத்தற்காக மோடிக்கு நன்றி சொல்லி போஸ்டர் ஒட்ட வேண்டும் என ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேன், தடுப்பூசிகளுக்கு மூன்று விலைகள் வைத்து மாநிலங்களை அல்லாட விட்டதற்காகவா? பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்,

இது குறித்து சு.வெங்கடேசன் எம்பி, தனது ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர் அவர்களே!. இப்படி ஒரு போஸ்டர் ஒட்ட வேண்டுமென்று அஞ்சல் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல் வந்திருக்கிறது. எதற்காம்? எல்லோருக்கும் இலவசமாய் தடுப்பூசி தந்ததற்காகவாம்.

மூன்று விலைகள் வைத்து மாநிலங்களை அல்லாட விட்டதற்கா?... ஒன்றிய அரசு ஒன்று இருக்கும் போது ஒவ்வொரு நாடாய் மாநில அரசுகளை தடுப்பூசி கிடைக்குமா என்று அலைய விட்டதற்கா?... கடும் எதிர்ப்பு வந்த பிறகு தடுப்பூசி கொள்கையை திரும்பப் பெற்று அப்போதும் கூட 25% ஐ தனியாருக்கு ஒதுக்கிய கார்ப்பரேட் பாசத்திற்கா?...

இந்தியாவில் உற்பத்தியான தடுப்பூசிகளை வெளி நாட்டிற்கு அனுப்பி விட்டு இங்கே இந்திய மக்களை தடுப்பூசி கிடைக்காமல் அலை மோத விட்டதற்கா?... தடுப்பூசி பற்றாக்குறை வந்தவுடன் எவ்வளவு தடுப்பூசி இருக்கிறது என்பதை கூட மக்களுக்கு சொல்லக் கூடாது என மாநில அரசுகளுக்கு வாய்ப் பூட்டு போட்டதற்கா?...

“தடுப்பூசியே கிடைக்கவில்லை.. அதற்குள் ‘நன்றி பிரதமர் அவர்களே’ என்ற போஸ்டர் எதற்கு?” : மதுரை MP ஆவேசம் !

உலகில் தடுப்பூசி போட்டவர்கள் விகிதத்தில் 10 வது இடத்துக்கும் கீழே இந்தியா இருப்பதற்கா?… இப்படி எத்தனையோ காரணங்களுக்காக மக்கள் மத்திய அரசை கடுமையாக வசையாடிக் கொண்டிருக்கும் போது அரசாங்க செலவில், அரசு அலுவலகத்தின் முன்னாள் அரசு அதிகாரியே போஸ்டர் ஒட்ட வேண்டுமாம். அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஒரு வாக்கியம் விடுபட்டுப் போயுள்ளது.

“மூன்றாவது அலை வருவதற்குள் இந்த போஸ்டரை ஒட்ட வேண்டும்” என்ற வாக்கியத்தை அடுத்த சுற்றறிக்கையில் சேர்த்துக்கொள்ளவும்" என கேள்வி எழுப்பி, கிண்டல் அடித்தும் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories