தமிழ்நாடு

மதுரையில் அமையும் நூலகத்தால் தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர்.. தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு!

மதுரையில் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்!

மதுரையில் அமையும் நூலகத்தால் தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர்.. தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதைப் போல மதுரையில் அமையப்போகும் நூலகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுகள் என உயர்நீதிமன்ற மதுரை கிள நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை, எம்.கே.புரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அ.தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு நகரங்களில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் மற்றும் காட்சியகங்கள் அமைக்கப்படும் என கடந்த 2017-18ல் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. துறை சார்பில் அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் மற்றும் காட்சியகங்கள் அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்.” எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். பொது நூலகத்துறை இயக்குநர் தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 8 சிறப்பு நூலகங்கள் அமைக்க முடிவு செய்து, தற்போது 7 சிறப்பு நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன என்றும், தமிழ் இசை, நடனம் ஆகியவைக்கு தஞ்சையிலும், நாட்டுப்புற கலை நூலகம் மதுரையிலும், தமிழ் மருத்துவ நூலகம் நெல்லையிலும், பழங்குடி கலாச்சார நூலகம் நீலகிரியிலும், கணிதம் மற்றும் அறிவியல் நூலகம் திருச்சியிலும், அச்சுக்கலை நூலகம் சென்னையிலும், வானியல் நூலகம் கோவையிலும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கீழடியில் தொடர்ந்து அகழாய்வு நடப்பதால் பழமை நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது எனக் கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.

அப்போது நீதிபதிகள், “புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர். குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன்தரும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதைப்போல மதுரையில் அமையப்போகும் நூலகம் இருக்கும். தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுகள்” எனத் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories