தமிழ்நாடு

தடுப்பூசி பற்றாக்குறையால் மக்களை காவு கொடுக்கப் போகிறதா எடப்பாடி பழனிசாமியின் காபந்து அரசு? #CoronaCrisis

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் மையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் திரும்பி செல்லும் நிலைதான் உள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறையால் மக்களை காவு கொடுக்கப் போகிறதா எடப்பாடி பழனிசாமியின் காபந்து அரசு? #CoronaCrisis
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தடுப்பூசி பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டியதால் மக்களின் உயிரை பலி கொடுக்கும் காபந்து அரசாக தமிழக அரசு மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால் மார்ச் மாதத்துக்கு பிறகு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 6 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட்டது. இதை தொடர்ந்து விழித்துக் கொண்ட சுகாதாரத்துறைசார்பில் வேகமாக களப்பணியாற்றி கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகுதான் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது.

அப்போதைய சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ வல்லுனர்கள், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் அவ்வபோது ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை சார்பிலும் முதல்வரின் கவனத்துக்கு செல்லப்பட்டு எடுத்த நடவடிக்கையின் விளைவாக கொரோனா பாதிப்பை ஓரளவுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.

தடுப்பூசி பற்றாக்குறையால் மக்களை காவு கொடுக்கப் போகிறதா எடப்பாடி பழனிசாமியின் காபந்து அரசு? #CoronaCrisis

2வது அலையில் பாதிப்பு அதிகம்!

ஆனாலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழல்தான் இருந்தது. இருப்பினும் அதனால் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை காட்டிலும் 2வது அலையில் பாதிப்பும் அதிகமாக உள்ளது. கடந்த 19 நாளில் மட்டும் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, அதிகபட்சமாக 10 ஆயிரம் பேர் வரை நேற்று முன்தினம் பாதித்துள்ளனர். இது, முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட உச்சபட்சம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பை போன்று, உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்தனர். கடந்த ஏப்ரல் 1ம் தேதி 19 பேர் ஆக இருந்த நிலையில், கடந்த 10ம் தேதி 23 பேர், 11 ம்தேதி 24 பேர், 14ம் தேதி 25 பேர், 15ம் தேதி 29 பேர், 16ம் தேதி 33 பேர், 17ம் தேதி 39 பேர், 18ம் தேதி 42 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால், உயிரிழப்புகளும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றால் தடுப்பூசி போடுவது என்பது மிக அவசியம். ஆனால், தடுப்பூசி போதுமான அளவு மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெற காபந்து அரசு முயற்சிக்கவில்லை. தமிழகத்தில் தற்போது 3864 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை வரை 46.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், முதல் முறை 40.64 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாவது முறை 6.05 லட்சம் பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறை!

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ள சூழலில் பொதுமக்கள் பலர் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர். இதனால், 45 வயதுக்கு மேற்பட்ட பலரும் தற்போது தடுப்பூசி போட மருத்துவமனைகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது.

இதனால், தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் மக்கள் தடுப்பு மருந்துகள் பற்றாக்குறையால் திருப்பி அனுப்பபடுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் 11 மாவட்டங்களில் பல கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் உள்ள ஆரம்பசு காதார நிலையங்களில் தடுப்பூசி இல்லை.

கோவையில் பல தடுப்பூசி முகாம்களில் மருந்துகள் இல்லை. மதுரையிலும் அதேநிலை நீடிப்பதால் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு மருத்துவமனை, தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி ஸ்டாக் இல்லை. இதேபோன்றுதான் மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால், காசு கொடுத்தாவது ஊசி போட வேண்டும் என்பதற்காக கொரோனாவுக்கு பயந்து பலர் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால், தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் இரண்டாவது முறை தடுப்பூசி போட வந்தவர்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்களை அடுத்த வாரம் வருமாறு மருத்துவமனை நிர்வாகங்களே தெரிவித்துள்து.

தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்!

ஆனால், 8.5 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி இருப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வருகிறார். அப்படியிருக்கும் பட்சத்தில் மாவட்டங்களில் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தச் சூழலில், தடுப்பூசி வாங்குவது தொடர்பாக என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது, யாரிடம் போய் பேசுவது என்பது தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், உயர் அதிகாரிகளாலும் தன்னிச்சையான முடிவெடுக்கவும் முடியவில்லை. அவர்கள் முதல்வரையும் சந்திக்க முடியாத நிலை உள்ளது. ஒரு பக்கம் அதிகாரிகள் பேச்சை கேட்பதா, இல்லை முதல்வர், அமைச்சர் பேச்சை கேட்பதா என்ற குழப்பமும் ஒரு சில அதிகாரிகளுக்கு உள்ளது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக பல மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான சூழலில் தடுப்பூசி போடாமல் இருந்தால் கொரோனா உயிரிழப்பை எப்படி தடுக்க முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற பெருந்தொற்று காலக்கட்டத்தில் காபந்து அரசின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பை தடுக்க முடியாமல் அதிகாரிகள் தடுமாறி வருகின்றனர்.

தடுப்பூசி பற்றாக்குறையால் மக்களை காவு கொடுக்கப் போகிறதா எடப்பாடி பழனிசாமியின் காபந்து அரசு? #CoronaCrisis

இதனால், மக்களின் உயிரை காவு கொடுக்கும் அரசாக காபந்து அரசு மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், தற்போது 6 லட்சம் டோஸ் தமிழகம் வந்துள்ளது. இந்த டோஸ் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் 6 லட்சம் டோஸ் என்பது போதாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 1.50 கோடிக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை டோஸ் போட வேண்டியுள்ளது. இதனால், கூடுதலாக தடுப்பூசி வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியாத நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories