தமிழ்நாடு

“அண்ணன் என்ன.. தம்பி என்ன..?” - பழிக்குப் பழியாக ரவுடி வெட்டிக்கொலை : திருச்சியில் நடந்த கொடூரச் சம்பவம்!

திருச்சியில் பிரபல ரவுடி தொழில் போட்டி காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அண்ணன் என்ன.. தம்பி என்ன..?” - பழிக்குப் பழியாக ரவுடி வெட்டிக்கொலை : திருச்சியில் நடந்த கொடூரச் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. அண்ணன் தம்பி இருவரும் பன்றி வளர்த்து ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது டெல்டா மாவட்டங்களில் தாதாக்களாக வலம் வந்துள்ளனர்.

பன்றி ஏற்றுமதியின் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வருமானத்தைப் பிரித்துக்கொள்வதில் அண்ணன் பன்னி பெரியசாமிக்கும், தம்பி பன்னி சேகருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், இருவரும் தனித்தனியாக பிரிந்து தொழில் செய்து வந்துள்ளனர்.

இதனால் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே தொழில் போட்டி நிலவி வந்துள்ளது. பெரியசாமியின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி பார்வதி, மகன் சிலம்பரன் ஆகியோர் அந்த தொழிலை செய்து வந்ததோடு, பிரபல ரவுடியாக வலம் வந்திருக்கிறார் சிலம்பரசன்.

பின்னர் பன்றி ஏற்றுமதி தொழில் கொடிகட்டிப் பறந்த பன்னி சேகர், அ.தி.மு.க கட்சியில் ஐக்கியமாகி அரசியல்வாதியாக வலம் வந்திருக்கிறார். அவரது பின்புலத்தினால் சேகரின் மனைவி திருச்சி மாநகராட்சியின் 29 வார்டு கவுன்சிலராக இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

“அண்ணன் என்ன.. தம்பி என்ன..?” - பழிக்குப் பழியாக ரவுடி வெட்டிக்கொலை : திருச்சியில் நடந்த கொடூரச் சம்பவம்!
சிலம்பரசன்

மேலும், உள்ளூரில் பணம் வட்டிக்கு விடுவது, கேபிள் டி.வி காண்ட்ராக்ட் எடுத்து நடத்துவது என பன்னி சேகர், கேபிள் சேகராக வளர்ச்சி அடைந்திருக்கிறார். அ.தி.மு.கவினரின் பின்புலத்தினால் கந்துவட்டி, ரவுடியிசம் என அராஜகத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறார் சேகர்.

ஆனாலும், பன்றி ஏற்றுமதி தொழிலில் பன்னி பெரியசாமியின் மகன் சிலம்பரசனுக்கும், கேபிள் சேகருக்கும் இடையே தொழில்போட்டி நீடித்து வந்திருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கடந்த 2011ம் ஆண்டு கேபிள் சேகரை வெட்டிக் கொலை செய்தார்.

இவ்வழக்கில் தொடர்புடைய பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரன்,மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த பரத்குமார், சதாம் உசேன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கேபிள் சேகரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் முத்துகுமார், அவரது தொழில்களை எடுத்து நடத்தி வந்ததோடு, பிரபல ரவுடியாக வலம் வந்திருக்கிறார்.

“அண்ணன் என்ன.. தம்பி என்ன..?” - பழிக்குப் பழியாக ரவுடி வெட்டிக்கொலை : திருச்சியில் நடந்த கொடூரச் சம்பவம்!

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த ரவுடி சிலம்பரசன் கந்துவட்டி தொழில் மற்றும் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, ரவுடி சிலம்பரசனை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சிலம்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், கேபிள் சேகர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக இந்தக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிய வருகின்றது. சிலம்பரசனுக்கு பல்வேறு பகுதிகளில் தொழில் போட்டி இருப்பதால், அதில் ஏற்பட்ட மோதலில் இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories