தமிழ்நாடு

"மோடியும் அமித்ஷாவும் அம்பானி அதானிக்கு மட்டுமே உதவி செய்கிறார்கள்” : தூத்துக்குடியில் ராகுல் பேச்சு!

“ஆர்.எஸ்எ.ஸ் மற்றும் பா.ஜ.கவை கேள்வி கேட்பவர்களின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. நீதித்துறை, ஊடகம் என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் நுழைந்துவிட்டது.” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

"மோடியும் அமித்ஷாவும் அம்பானி அதானிக்கு மட்டுமே உதவி செய்கிறார்கள்” : தூத்துக்குடியில் ராகுல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே தமிழகம் வந்த அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ராகுல் காந்தி எம்.பி., நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். இன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

பின்னர், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “ஒரு தேசம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்புகள் மற்றும் பல அரசியல் சாசன அமைப்புகளால் ஆனது. இந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்படும்போதுதான் தேசம் சமநிலையுடன் இருக்கும். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்புகளின் மீது மத்திய அரசு திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. நாட்டின் அரசியல் சாசன அமைப்புகள் அனைத்தையும் பா.ஜ.க சீரழித்து வருகிறது.

இந்தியா பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஆனால், இன்று மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. அதனால், என்னை பா.ஜ.கவால் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு மூலமாக அச்சுறுத்த முடியாது. காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் எம்.எல்.ஏ.,க்களை விலை கொடுத்து வாங்குகிறது பா.ஜ.க. அதிகார பலம், பண பலத்தால் எம்.எல்.ஏக்களை கட்சி மாற வைக்கிறது பா.ஜ.க. பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறது பா.ஜ.க.

"மோடியும் அமித்ஷாவும் அம்பானி அதானிக்கு மட்டுமே உதவி செய்கிறார்கள்” : தூத்துக்குடியில் ராகுல் பேச்சு!

மதச்சார்பின்மை நம் அரசியல் சாசனத்தின் அடிநாதம் மட்டுமல்ல. அது தேசத்தின் கலாச்சாரம். பா.ஜ.க அரசு மதச்சார்பின்மையை சிதைத்துவிட்டது. விவசாயிகள் போராட்டம், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ.க அரசு நெரிக்கிறது என்றார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை கேள்வி கேட்பவர்களின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. நீதித்துறை, ஊடகம் என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் நுழைந்துவிட்டது.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, பிரதமர் நாட்டுக்கு பயனற்றவராக இருப்பதாக விமர்சித்தார்.

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “நீங்கள் பிரதமர் மோடி பயனற்றவராக இருக்கிறார் என்று கூறினீர்கள். நான் அதில் சிறு திருத்தம் செய்ய விரும்புகிறேன். இங்கே ஒவ்வொரு மனிதரும் யாரேனும் ஒருவருக்கு உதவியாகத்தான் இருக்கிறோம். நான் விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்றால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்நாட்டில் அம்பானி, அதானி ஆகிய இருவருக்கு உதவியாக இருக்கிறார்கள். நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையில் அவர்கள் இருக்கிறார்கள்” என்றார்.

banner

Related Stories

Related Stories