மு.க.ஸ்டாலின்

"குடிமராமத்து என்ற பெயரில் மணல் கொள்ளை; ஊழல் பணத்தை அள்ளும் எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

"இந்த ஊழல் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உண்டு." என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

"குடிமராமத்து என்ற பெயரில் மணல் கொள்ளை; ஊழல் பணத்தை அள்ளும் எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மு.க.ஸ்டாலின் ஆகிய நான் வீட்டுக்கு விளக்காவேன்; நாட்டுக்கு தொண்டனாவேன்; மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்; மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்; மே மாதம் முதல் இதனை நேரடியாக உணர்வீர்கள்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (27-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் – படப்பை - கரசங்காலில் நடைபெற்ற, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் நிறைவாக தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம்:

மானம் அவன் கேட்ட தாலாட்டு, மரணம் அவன் ஆடிய விளையாட்டு - என்று உறுதி எடுத்துக்கொண்டு 95 ஆண்டுகள் வரை வீரமும் விவேகமும் குறையாமல் வீறு கொண்டு வாழ்ந்த தலைவர் தான் நம்முடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் நம்மை விட்டு கடந்த 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி நம்மை மீழாத்துயரில் ஆழ்த்திவிட்டு பிரிந்து சென்றார்கள்.

அதன்பிறகு உங்கள் கழக உடன்பிறப்புகளின் ஆதரவுடன் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டேன். தலைவர் என்றால் தலைமைத் தொண்டன் என்று தான் பொருள். அப்படித்தான் நான் அன்று முதல் இன்று வரை செயல்பட்டு வருகிறேன். இனியும் அப்படித்தான் செயல்படுவேன்.

பல்லாயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் சொன்னேன். இன்று முதல் இந்த ஸ்டாலின் புதிதாக பிறக்கிறேன் என்று சொன்னேன். ''இன்று நீங்கள் பார்க்கும் கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான் புதிதாய் பிறக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மரபணுக்களோடும் நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் இதோ உங்களுக்கு முன்னால் நான் பிறந்திருக்கிறேன்" என்று சொன்னேன்.

நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் எனது கனவுத் திட்டம் தான் உங்களது குறைகளை 100 நாட்களில் தீர்ப்பேன் என்பதாகும். ஆட்சிக்கு வருகிறோம். பல்வேறு திட்டங்களைத் தீட்டுகிறோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கிறோம். இவை எல்லாம் ஒரு பக்கம் நடந்தாலும் - இன்னொரு பக்கத்தில் ஏழை எளிய பாட்டாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் முடிவெடுத்துள்ளேன். உங்களது கோரிக்கை மனுக்களை பரிசீலித்து 100 நாட்களில் தீர்ப்பேன். அண்ணாவின் மீது ஆணையாக- கலைஞர் மீது ஆணையாக இந்த உறுதிமொழியை நான் ஏற்றுள்ளேன்.

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி முடியப் போகிறது. இதுவரை அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியப் போகிறது என்பதால் தினந்தோறும் ஏதோ திட்டம் தொடங்குவதைப் போல நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவற்றுக்கு நிதி ஒதுக்கினார்களா? இல்லை.

"குடிமராமத்து என்ற பெயரில் மணல் கொள்ளை; ஊழல் பணத்தை அள்ளும் எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

அவர்களுக்கு தெரிந்த ஒரே விஷயம் கடன் வாங்குவது. கடன் வாங்குவதில் சாதனை செய்துள்ளது பழனிசாமி அரசு தான். தமிழகத்தின் கடன் தொகை 5 லட்சம் கோடியாக ஆகிவிட்டது. 2001-06 அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அப்போது தமிழகத்தின் கடன் தொகை 57 ஆயிரம் கோடி ரூபாய்! கழக ஆட்சியில் 2006-11 ஆம் ஆண்டில் 44 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு சுமார் 9 ஆயிரம் கோடிதான் கடன் வாங்கப்பட்டது. அதாவது கழக ஆட்சி முடியும் போது இருந்த கடன் தொகை 1 லட்சம் கோடி. இந்த பத்தாண்டு காலத்தில் மொத்தம் 5 லட்சம் கோடியாக ஆக்கிவிட்டார்கள். இப்படி கடன் வாங்கினார்களே தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மையைச் செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. கடன் வாங்கி பணத்தை கஜானாவில் சேர்த்து கொள்ளையடித்துள்ளார்கள். இதுதான் நடந்துள்ளது.

நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான திட்டமிடுதலை இந்த அரசு செய்ததா என்றால் அதுவும் இல்லை. பினாமிகளுக்கு, உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுப்பதற்காக எந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டுமோ அதை மட்டும் செய்துள்ளார்கள். எந்த தரப்பினராவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

விவசாயிகள் வாழ்க்கை மொத்தமும் சீரழிந்துவிட்டது! நெசவாளிகள் நசிந்து போனார்கள்! அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சலுகைகளை இழந்தார்கள்! தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலைகளை இழந்தார்கள்! இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் இல்லை! சிறு குறு தொழில்கள் மொத்தமாக முடங்கிவிட்டது. அந்த தொழில்கள் நடத்தியவர்கள் அதில் இருந்து வெளியேறிவிட்டார்கள். மத்திய தர வர்க்கம் விலைவாசியால் நொந்துவிட்டது! தொழில் நடத்தி வருபர்களை ஜி.எஸ்.டி வரியானது மொத்தமாக அமுக்கிவிட்டது. பெரிய நிறுவனங்களை தொடங்க முன்வருபர்கள், இந்த ஆட்சியாளர்களின் கமிஷன் தொகையைக் கேட்டு பக்கத்து மாநிலத்துக்கு ஓடிப் போய்விடுகிறார்கள்! பெண்களுக்கு சுயமாக தொழில் நடத்த இருந்த அனைத்து வாய்ப்புகளையும் பறித்துவிட்டார்கள். மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்துவிட்டார்கள்! உயர்கல்விகளில் இருந்து தமிழர்களை அப்புறப்படுத்தும் காரியம் மெல்ல ஆரம்பித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையானது ஏழை, எளியவர்கள் கல்வி கற்க தடையாக மாறப் போகிறது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் எந்தத் தரப்பும் நிம்மதியாக இல்லை.

இந்தப் பின்னடைவில் இருந்து தமிழகத்தைச் சரி செய்தாக வேண்டும். இந்த ஊழல் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உண்டு.

தன்னுடைய ஆட்சியின் மாபெரும் சாதனையாக குடிமராமத்துப் பணிகளை பழனிசாமி சொல்கிறார். 'வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆனதால் தான் இது சாத்தியம்' என்று பழனிசாமி தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்கிறார்.

குடிமராமத்து என்ற பெயரால் கொள்ளையடிக்கும் திட்டம் தான் அந்தத் திட்டம். பில் போட்டு பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மண்ணை அள்ளுவதாகச் சொல்லி பணத்தை அள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். குடிமராமத்து என்றால் ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள், பாசனக் கால்வாய்களை முழுக்க தூர்வாரி நீர் வருகைக்கு தயார் படுத்தி வைக்க வேண்டும். இதுவரைக்கும் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் குடிமராமத்து பணிகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது. அப்படிச் சொல்லி கணக்கு எழுதி இருக்கிறார்கள். அதுதான் உண்மை.

"குடிமராமத்து என்ற பெயரில் மணல் கொள்ளை; ஊழல் பணத்தை அள்ளும் எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

குடிமராமத்துப் பணி என்பதற்கு பதிலாக சவுடு மண் கொள்ளை தான் நடந்துள்ளது. இப்படி தூர்வாரும் மண்ணை விவசாயிகளுக்குத் தர வேண்டும். ஆனால் விவசாயிகளுக்குத் தருவது போல போலி பில் போட்டு தனியாருக்கு லாப நோக்கத்தோடு விற்பனை செய்கிறார்கள். குறிப்பிட்ட அளவுக்கு தான் மண் எடுக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி, மண் எடுக்கிறார்கள். முன்பெல்லாம் மண் எடுத்தால், மணல் கொள்ளை நடக்கிறது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். இப்போது யார் மண் எடுத்தாலும், 'குடிமராமத்துப் பணி நடக்கிறது' என்று சொல்லி திருட்டை மறைத்துவிடுகிறார்கள். தூர் வாருவதற்காக மணல் எடுக்கவில்லை, மணல் கொள்ளைக்காக மணல் எடுக்கப்படுகிறது. இதுதான் உண்மை. விவசாயி, விவசாயி என்று சொல்லி இதைத் தான் பழனிசாமி செய்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் கோவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனத்தை தி.மு.க மீது செய்துள்ளார். தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகம் கட்டவிழ்த்துவிடப் பட்டது எனவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள்தான் என்றும் சொல்லி இருக்கிறார் மோடி. எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவர் அப்படி பேசினார்?

பா.ஜ.கவினர் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்திய வன்முறைகளை நான் சொல்லவா? அதற்கு ஒரு நாள் முழுக்க வேண்டும். பழனிசாமி உத்தமர் என்றும், பன்னீர்செல்வம் புனிதர் என்றும் நரேந்திர மோடி சொல்லிக் கொள்ளட்டும். எனக்கு ஆட்சேபணை இல்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பிரதமர் பற்றிய தரம்தான் தாழும். அது பற்றி அவர் தான் கவலைப்பட வேண்டும். அரசியல் ரீதியாக தி.மு.கவை மோடி விமர்சனம் செய்யட்டும்.அதற்கு பதில் தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

அவர் ஆரியத்தை புகுத்த நினைப்பவர். நாங்கள் அதனை திராவிடத்தால் தடுத்துக் கொண்டு இருப்பவர்கள். இந்த மோதல் என்பது காலம் காலமாக நடந்து வரும் மோதல்தான். அதற்காக திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் மோடி பேசுவது, அதுவும் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு பேசுவது கண்டிக்கத்தக்கது.

சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுவை மாநில பாஜகவில் சேரும் சிலரது குற்றப் பின்னணி குறித்து நான் விரிவாக நேற்றைய தினம் பேசி இருக்கிறேன். இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு செக்‌ஷன்களில் தேடப்படும் குற்றவாளிகள் பா.ஜ.கவில் சேருவதையும் அவர்கள் பெயர்களையும் சொன்னேன். அவர்கள் பெயரை மீண்டும் சொல்லி அவர்களது மார்க்கெட் ரேட்டை உயர்த்த நான் விரும்பவில்லை. இத்தகைய நபர்களை கமலாலயத்தில் மாலை போட்டு வரவேற்றுக் கொண்டு இருக்கும் போது, தி.மு.கவை குறை சொல்வதற்கு மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர்கள் எல்லாம் யார் என்று விசாரியுங்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விசாரிக்கச் சொல்லுங்கள். வாய்க்கு வந்த வார்த்தைகளை தி.மு.க மீது பாய்ச்ச வேண்டாம்.

ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான உரிமையை திமுக முற்றிலுமாக இழந்துவிட்டது என்று ஏதோ கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் திமுக பலம் இழந்துவிட்டது என்று சொல்லி இருக்கிறார் மோடி அவர்கள். பிரதமர் மோடி அவர்களே! தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உங்களுக்கு மறந்துவிட்டதா? தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதியில் ஒரே ஒரு தொகுதி நீங்கலாக அனைத்துத் தொகுதிகளிலும் - அதாவது 38 தொகுதிகளிலும் வென்றது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் கட்சி தான் தி.மு.க. இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்று சொன்னால் இப்போது 90 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு இருக்கிறோம். இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையில் இவ்வளவு பெரும்பான்மை உறுப்பினர்களோடு எந்தக் கட்சியும் இருந்தது இல்லை. ஆளும்கட்சிக்கும் எங்களுக்கும் 1.1% தான் வித்தியாசம். எனவே சட்டமன்றத்திலும் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக இருக்கிறது.

"குடிமராமத்து என்ற பெயரில் மணல் கொள்ளை; ஊழல் பணத்தை அள்ளும் எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

இதைத் தெரிந்து கொள்ளாமல் தவறான தகவல்களை மோடி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். மோடி அவர்களே உங்கள் பா.ஜ.கவின் பலம் என்ன என்பதை முதலில் பாருங்கள். 1998 ஆம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் இருந்ததால் மூன்று எம்.பி.கள் வென்ற கட்சி பா.ஜ.க.1999 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்ததால் நான்கு எம்.பி.க்கள் வென்ற கட்சி பா.ஜ.க. 2014 ஆம் ஆண்டு பல கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு கன்னியாகுமரியில் மட்டும் பாஜக வென்றது. இதைத்தவிர மற்ற தேர்தல்கள் அனைத்திலும் தோற்ற கட்சி தான் பாஜக. இன்றைக்கு இருக்கும் சட்டமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினரே இல்லை! தமிழகத்தில் இருந்து எந்த பா.ஜ.க எம்.பி.யும் டெல்லி போகவில்லை. ஆனால் மோடி சொல்கிறார், தி.மு.க பலம் இழந்துவிட்டது என்று. பழனிசாமியோடு சேர்ந்து பழனிசாமியின் கையையும் பன்னீர்செல்வத்தின் கையையும் தூக்கிப் பிடித்ததால் அவர்கள் போலவே பேச ஆரம்பித்துவிட்டீர்களா?

பிரதமர் மோடியாக இருந்தாலும் - முதலமைச்சர் பழனிசாமியாக இருந்தாலும் பேசுவார்கள். செய்யமாட்டார்கள். கழகம் சொன்னதைச் செய்யும். செய்வதைத்தான் சொல்லும்.

மு.க.ஸ்டாலின் ஆகிய நான் வீட்டுக்கு விளக்காவேன்! நாட்டுக்கு தொண்டனாவேன்! மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்! இது அண்ணாவின் மீது ஆணை. கலைஞர் மீது ஆணை! மே மாதம் முதல் இதனை நேரடியாக உணர்வீர்கள்!

கழக ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் யாவும் தீரும். விடைபெறுகிறேன்."

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories