தமிழ்நாடு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் : பெண்களை தடுத்து காவல்துறை அராஜகம்!

வேளாண் சட்டங்களை திருப்பப் பெறவேண்டும், பெண்களுக்கு விவசாயி என அங்கீகாரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் : பெண்களை தடுத்து காவல்துறை அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடும் குளிரில் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 54 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையிலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இருப்பினும் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் எந்த சமரசத்தையும் ஏற்கமுடியாது என்று தொடர்ந்து திண்ணமாக இருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே உச்சநீதிமன்றம் இச்சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, 4 பேர் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து, மத்திய அரசோடும் விவசாயிகளோடும் பேச்சுவார்த்தை நடத்தி, 2 மாதத்திற்குள் அறிக்கை தரும்படி உத்தரவிட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் : பெண்களை தடுத்து காவல்துறை அராஜகம்!

4 பேர் கொண்ட குழுவில் உள்ள உறுப்பினர்கள் கடந்த காலத்தில் வேளாண் சட்டங்களுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துப் பேசியவர்கள் என்பதால், போராட்டத்தை திசைமாற்றும் உத்தியே இது எனக் கூறி விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த அறைகூவல் விடுத்திருக்கிறது.

இந்தியாவில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளோரில் 42% க்கும் அதிகமானோர் பெண்களாக இருக்கின்றனர். இருப்பினும் பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்காத நிலையில், பெண்கள் ஏன் போராட்டக்களத்தில் இருக்கின்றனர் என்றும் அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் முன்னாள் தலைமை நீதிபதி குறிப்பிட்டது கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.

தமிழக அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பினரும் முன்னாள் தலைமை நீதிபதிக்கு தங்களது கண்டத்தைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜனவரி 18ம் நாளை பெண் விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற டெல்லி விவசாயிகள் அறைகூவலின்படி நாடு முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் : பெண்களை தடுத்து காவல்துறை அராஜகம்!

அதன் ஒருபகுதியாக, சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தமிழக அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலை 11 மணிக்கு சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து பேரணியாக சென்றபோதே போலிஸார் அவர்களை தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.

இதனையடுத்து பெண்கள் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் போலிஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும் பல இடங்களில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பெண்களை வரவிடாமல் காவல்துறை தடுத்து நிறுத்தியதாக பெண்கள் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories