தமிழ்நாடு

சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகளை மீட்க தி.மு.க கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் - தி.க தீர்மானம்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியை வெற்றி பெறச் செய்ய ஆயத்தப் பணிகளை இப்பொழுதே தொடங்கிடவேண்டும் என திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகளை மீட்க தி.மு.க கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் - தி.க தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து சமூகநீதிக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், வேளாண் சட்டங்கள், சமஸ்கிருத ஒளிபரப்பு, தேசிய கல்விக் கொள்கை 2019 - இவற்றை எதிர்த்தும், எழுவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணி வெற்றி பெறுவதற்கான ஆயத்தப் பணிகளை உடனே தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் இன்று (12.12.2020) நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1 இரங்கல் தீர்மானம்

தீர்மானம் எண்: 2

மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு நீக்கப்பட வேண்டும்

மருத்துவப் படிப்பில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் படிப்பில், மாநிலங்களில் இருந்து அகில இந்திய தொகுப்பிற்கு பெறப்படும் இடங்களில், பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்படுவதை எதிர்த்து, திராவிடர் கழகம், தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் அ.தி.மு.க அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றமும் இட ஒதுக்கீடு தருவதில் எந்த தடையும் இல்லை என்று தெளிவாக தீர்ப்பளித்த பிறகும், இந்த கல்வி ஆண்டில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு தர முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இட ஒதுக்கீடு குறித்து குழு அமைக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பையும் மத்திய அரசு புறம் தள்ளி, வரும் ஆண்டிலும் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு இல்லாமல் ‘நீட்' தேர்வு நடத்துகிறது.

இத்தகைய சமூக அநீதியை இழைத்திடும் மத்திய அரசின் போக்கை தலைமை செயற்குழு கண்டிப்பதோடு, இனி அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவப் படிப்பு இடங்கள் தருவதை நிறுத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக அரசை தலைமை செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 3  

நீட்’ மற்றும் ‘நெக்ஸ்ட்’  தேர்வை நிரந்தரமாக நீக்குக!

‘நீட்' தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடும் மசோதா பிரச்சினையில், மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வஞ்சகம் செய்துள்ளன. மேலும் இது மாநில உரிமையைப் பறிக்கும் செயலாகும். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த நீட் தேர்வு மற்றும் மருத்துவர் தகுதிக்கான நெக்ஸ்ட் தேர்வையும் நிரந்தரமாக ஒழித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ‘நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும் என இம்மாநாடு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 4  

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உயர்கல்விக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை ரத்து செய்ததற்குக் கண்டனம்

60 லட்சம் தாழ்த்தப்பட்ட  மாணவர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.,) உயர்கல்விக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை ரத்து செய்துள்ள மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான போக்கைக் கண்டிப்பதுடன் - அந்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற்று, ஏற்கெனவே இருந்து வந்த நிலை தொடரப்படவேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை

2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கணக்குதான் எடுக்கப்படும்; ஓபிசி உள்ளிட்ட அனைத்து ஜாதிவாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஓபிசி பிரிவினர்க்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு குறித்தும், கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட நல திட்டங்களுக்கும் ஓபிசி பிரிவினரின் எண்ணிக்கை அவசியமாகிறது. மேலும், உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இது குறித்தும் புள்ளி விவரங்கள் தேவைப்படுகின்றன.

எனவே,  ஜாதியைப் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படையாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கான உண்மைப்  புள்ளி விவரமும் வெளியில் வராமலும் பார்த்துக் கொள்வது - அதன் இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரத்த குரல் கொடுக்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கக் கூடாது; ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தலைமைச் செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 6  

தேசிய கல்விக் கொள்கையைக் கைவிடுக!

தேசிய கல்விக் கொள்கை-2019 என்பது ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் அடிப்படையிலும், குலக்கல்வித் திணிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு இவற்றை நோக்கமாகக் கொண்டும் இருப்பதால், இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை இச்செயற் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு

சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம் மக்களின் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் அமைந்த கமிட்டி நவம்பர் 2006 இல் மத்திய அரசிடம் அளித்தது. ஆனால், இன்றுவரை அந்த அறிக்கையின் பரிந்துரைகளான, அரசுத்துறையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட  எதனையும் இன்றுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரை விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8

மாநிலத்தில் உள்ள மத்திய அரசு / பொதுத்துறை நிறுவனங்களில் குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கு அந்தந்த மாநில மக்களுக்கு முழு உரிமை

தமிழ்நாட்டில் படித்துப் பட்டம் பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. இது மிக மோசமான சமுகக் கொந்தளிப்பை தென் மாநிலங்களில் உருவாக்கி வருகிறது.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பதவிகளுக்கான தேர்வு அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும்  நடத்தப்பட வேண்டும்.

அதிகாரி பதவிகளுக்கான தேர்வுகள், அகில இந்திய அளவில் என்றில்லாமல், மண்டல வாரியாக (தென் மாநிலங்கள் உள்ளடக்கிய தென் மண்டலம்) என்ற வகையில் தேர்வுகள் இருப்பதுதான் அந்தந்த மாநிலத்தில் உள்ள கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்பினை உருவாக்க முடியும். ஒரு மாநிலத்தில் பணியாற்றும் அனைவரும் அந்த மாநில அரசின் அலுவல் மொழியை தெரிந்திருப்பது கட்டாயம் என்பதையும் உறுதிப்படுத்துவது அவசியமும் தேவையும் ஆகும்.

இதற்கு ஏற்ற வகையில் உரிய சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என இத்தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.

பிற மாநிலத்தவரின் எல்லையற்ற ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மகாராட்டிரம், ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளது போல தமிழ்நாட்டிலும் 80 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்படும் வகையில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 9

தனியார்த் துறைகளிலும் தேவை இடஒதுக்கீடு

தாராளமயம், தனியார் மயம், உலகமயம் (LPG) என்பதற்கான பொருளாதாரக் கொள்கைகளும், செயல்பாடுகளும் விரிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கல்வி மற்றும் சமூகநீதியின் அடிப்படையில், தனியார்த் துறை சார்ந்தும் இடஒதுக்கீடு தேவை என்பது முன்னிலும் அதிகமான அளவில் அவசியமாகிவிட்டது.

தற்போதைய ஆட்சியில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, தனியார்த் துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை மத்திய / மாநில அரசுகள் நிறைவேற்றிட தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 10

நீதித்துறையில் சமூக நீதி தேவை

உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும், நீதிபதிகள் பெரும்பான்மையாக உயர்ஜாதியினராகவே உள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையோர், பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த ஒரு அமைப்பில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாத இத்தகைய போக்கு சமூக  அநீதி ஆகும்.

இதனை மத்திய அரசு உணர்ந்து இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் உரிய சட்டம் இயற்றிட தலைமை செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 11

உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் சட்டத்தை ரத்து செய்க!

சமூக நீதிக் கோட்பாட்டையே கேலிக்கூத்தாக்கும் வகையில் மத்திய அரசு பார்ப்பன - உயர்ஜாதியினர்க்கு 10% இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை நிறைவேற்றி அதனை அனைத்து மத்திய அரசின் துறைகளிலும் அமல்படுத்த வேகம் காட்டுகிறது.

மத்திய அரசின் அனைத்துத் துறைகளின் உயர்பதவிகளிலும் 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள பார்ப்பன- உயர்ஜாதியினருக்கு இத்தகைய இட ஒதுக்கீடு என்பது சட்ட விரோதமான செயலேயாகும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு, பல அமைப்புகளால் தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை  இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 12

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தருக!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற பரிந்துரையை மாற்றி தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். அரசு பள்ளிகளுக்கான சலுகைகள், கொள்கைகள், பாடத்திட்டம், நடைமுறை அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.  இப்பள்ளிகளிலும், சமூகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களுக்கும் தற்போது நீட் தேர்வின் காரணமாக மருத்துவப் படிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை அளிக்கவேண்டும் என்றும்  இத்தலைமை செயற்குழு தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 13

நீதிமன்றங்களிலும் மற்றும் சட்டமன்றம், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான உள்ஒதுக்கீடோடு இடஒதுக்கீடு  சட்டத் திருத்தம் நிறைவேற்றுக!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதி உட்பட 63 நீதிபதிகளில் 13 நீதிபதிகள் பெண்கள் என்பது சமூக நீதி வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இது சமூக நீதி மண்; பெரியார் மண் என்பதற்கு சான்றாகும். தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாக பெண்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேறி வருவதன் ஓர் அடையாளம் தான் பெண் நீதிபதிகள் இந்த எண்ணிக்கையில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு உள்ளது என்பதை எவரும் மறந்திடக் கூடாது.

இதேபோல உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நீதிபதிகளில் பெண்கள் மற்றும் ஓபிசி, எஸ்.சி., சிறுபான்மையினர் பிரிவினர்களின் பிரதி நிதித்துவம் இருக்க வேண்டும். அதற்குரிய வகையில் இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றிட வேண்டும்.

இதே போன்று, நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும். அந்த சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்க்கான உள்ஒதுக்கீடு அளித்திடும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். இல்லையேல், உயர்ஜாதி சமூகப் பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு உள் ஒதுக்கீடுடன் கூடிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என தலைமை செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 14

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைக் கைவிடுக!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளையும், அதன்வழி பொது மக்களையும் பெரிதும் பாதிக்கச் செய்யும் என்பதால், அந்த மூன்று சட்டங்களையும் எந்தவித நிபந்தனையுமின்றிக் கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மாநில பட்டியலில் உள்ள விவசாயத் துறை தொடர்பான சட்டங்கள் இயற்றுவதற்குமுன் மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்காமலும், விவசாய சங்கங்களைக் கலந்து ஆலோசிக்காமலும் - கார்ப்பரேட்டுகளின் கைகளில் விவசாயத்தை ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத ஒன்றேயாகும்.

இந்தியா ஒரு விவசாய நாடு என்கிற முறையில், கணிசமான மக்கள் தொகையினர் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்டு இருக்கும்போது - கோடான கோடி விவசாயிகளின் பிரச்சினைக்கு ஓர் அரசுதான் நேரிடையாகப் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, இலாபம் ஒன்றையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கத்தோடு செயல்படும் கார்ப்பரேட்டுகள் அல்ல என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள  சோசலிசம் என்ற சொல்லுக்கான உண்மையான பொருளாகவும் இருக்க முடியும் என்பதையும் மத்திய அரசுக்கு இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாத வேளாண் தொடர்பான மூன்று சட்டங்களையும் கைவிட்டு, குமரிமுதல் - காஷ்மீர்வரை உள்ள கோடானகோடி விவசாயிகளின் நியாயமான உணர்வை மதிக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்வதோடு, விவசாய உற்பத்தி என்பது அத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல; 130 கோடி மக்களின் உணர்வுப்பூர்வமான அடிப்படை உணவுப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொண்டு, இச்சட்டங்களை  உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றும் இச்செயற்குழு மேலும் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 15 (அ)

அரசு - பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பை நிறுத்திடுக!

மக்கள்தொகையில் 00.1 விழுக்காடு அளவில் மட்டுமே பேசப்படுவதாகச் சொல்லப்படும் சமஸ்கிருத மொழியில், அரசு தொலைக்காட்சியான பொதிகையில் நாள்தோறும் 15 நிமிடங்கள் செய்தி ஒளிபரப்புவது - மக்களின் வரிப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். இந்தத் திணிப்பு ஒரு பண்பாட்டுப் படையெடுப்பாகும்!

சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பைக் கேட்க யாருமே இல்லாத நிலையில், சமஸ்கிருதத்தை எந்த வழியிலோ, மக்களிடம் திணிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கதாகும். இது நேரக்கேடும், பொருள் கேடும் மட்டுமே என்பதையும் திட்டவட்டமாக இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் திணிப்பு என்பதோடு இதனையும் இணைத்துப் பார்த்தால், மத்திய அரசின் நோக்கம் எத்தகையது என்பது விளங்கவே செய்யும்.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமே என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கரின் கருத்து என்பதால், (ஆதாரம்: பஞ்ச் ஆஃப் தாட்ஸ்) ஆர்.எஸ்.எஸின் கொள்கை அடிப்படையில்தான் அரசு பணத்தில் இந்த ஏற்பாடு நடக்கிறது. சமஸ்கிருதம், இந்தி திணிப்பது என்பது வெறும் மொழிப் பிரச்சினையல்ல; பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பதால், மத்திய அரசின் இந்தப் போக்கை இச்செயற்குழு முற்றிலும் நிராகரிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்த உணர்வைப் புரிந்துகொண்டு சமஸ்கிருத, இந்தித் திணிப்பை  கைவிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 15 (ஆ)

செம்மொழி தமிழை சிறுமைப்படுத்துவதா?

இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தைப் பரப்பவும், பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத் துறையை ஏற்படுத்தவும் 643 கோடி ரூபாயைச் செலவழிக்கும் மத்திய அரசு, செம்மொழி தமிழுக்கும், செம்மொழி மத்திய அரசு நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் போதிய நிதி ஒதுக்காமலும், முக்கிய பதவிகளை நிரப்பாமலும், பாரதீய பாஷா விஷ்வ வித்யாலயா என்னும் பல்கலைக் கழகத்தோடு இணைத்து செம்மொழி தமிழை அப்பல்கலைக் கழகத்தின் ஒரு துறையாக மாற்றும் மத்திய அரசின் போக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.

சமஸ்கிருதம், இந்தி என்றால் ஊக்குவிப்பதும், தமிழ் என்றால் ஒதுக்கித் தள்ளுவதும் - மத்திய அரசின் இரட்டை அளவுகோலைத்தான் காட்டுகிறது என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்வதோடு இந்த ஓரவஞ்சனையை அறவே கைவிட்டு, செம்மொழி தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்றும் வகையில், தனி நிறுவனமாகவே செயல்பட நிதி உள்பட எல்லா வகையிலும்  ஆக்கமும், ஊக்கமும் தருமாறு மத்திய அரசை திராவிடர் கழகச் செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழக அரசு இப்பிரச்சினையில் கண்டும் காணாமலும் இருப்பது கண்டிக்கத்தக்கதும் - அண்ணாவின் பெயரைச் கட்சியிலும், ஆட்சியிலும் வைத்திருப்பதற்குப் பொருத்தமற்றதும், அர்த்தமற்றதுமாகும் என்றும் இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண்: 15 (இ)

ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு இந்தியில் பதில் அளிப்பதா?

இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அமைச்சர்களும், மத்திய அரசுத் துறையின் அதிகாரிகளும் இந்தியில் பதில் கடிதம் எழுதுவது இந்தி ஆதிக்க வெறி என்பது மட்டுமல்ல - இந்தி தெரியாத - மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளையும்  அவர்களின் தாய்மொழியையும் அவமதிக்கும் செயலே என்பதால், மத்திய அரசின் இந்தப் போக்கை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்திய குடும்ப நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத் துறை நடத்தும் பணியாளர் தேர்வில் இந்திக்கு என்று ஒரு தனித் தேர்வு என்ற முடிவைக் கைவிடவேண்டும் என்றும் இச்செயற்குழு அந்தத் துறையையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 16

ஏழு பேர் விடுதலையும் - ஆளுநரின் அலட்சியமும்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் 28 ஆண்டுகளுக்குமேலாக இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் அவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தும், தமிழக ஆளுநர் அதற்கான அனுமதியை அளிக்காமல், காலவரையற்ற தன்மையில் தாமதம் செய்வது எந்த வகையிலும் நியாயப்படுத்தப்படவே முடியாத ஒன்றாகும்.

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடும் வழக்குரைஞர் செயல்படும் போக்கை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. அவருக்குப் பதிலாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டுக்கு உகந்த முறையில் செயல்படக் கூடிய வழக்குரைஞரை நியமிக்கவேண்டும் என்றும்,

ஏழு பேரை விடுதலை செய்யும் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் அக்கறையும், அழுத்தமும் போதுமானதாக இல்லை என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டுவதோடு, இதற்கு மேலும் காலங்கடத்தாது ஆளுநருக்குத் தேவையான போதுமான அழுத்தத்தைக் கொடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 17

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலும் - நமது கடமையும்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 மே மாத வாக்கில் நடக்கக் கூடும். ஆதலால், இந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையவேண்டியது - தமிழ்நாட்டு மக்களுக்கும், சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்பதற்கும், மாநில உரிமைகளை மீட்பதற்கும், இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு போன்ற பண்பாட்டுப் படையெடுப்புகளை முறியடிப்பதற்கும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும் முறியடிப்பதற்கும் மிகவும் அவசியம் என்பதால், தி.மு.க - அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து வெற்றி பெறச் செய்வதற்கான ஆயத்த அடிப்படைப் பணிகளை இப்பொழுது முதற்கொண்டே மேற்கொள்ள வேண்டுமாய் கழகத் தோழர்களை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இதற்கான பிரச்சாரத் திட்டத்தை வகுத்துச் செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories