
ஒன்றியத்தில் பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், ஏழை எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு எதிரான கொள்கைகளையே தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.
குறிப்பாக, சர்வதேச அளவில் மத்திய ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், முன்கூட்டியே பொருளாதார திட்டமிடல் மற்றும் எரிபொருள் விலை கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய மோடி அரசு தவறிவிட்டது. இந்த நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியிருப்பது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தும் என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
விவசாயிகளும் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. டீசல் விலை உயர்வால் டிராக்டர், மோட்டார் பம்ப், விவசாய இயந்திரங்கள் இயக்கும் செலவு அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவும் உயர்ந்துள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

“போர் சூழ்நிலையை காரணம் காட்டி பொதுமக்கள் மீது சுமை ஏற்றுவது எளிது. ஆனால் அதற்கு முன்பே திட்டமிட்டு மக்களை பாதுகாக்கும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்காதது ஒன்றிய அரசின் தோல்வி” என எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் ஒன்றிய அரசு, சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி சிந்திக்கவில்லை” என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வலுத்து வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள பதிவில், “மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.






