
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், “குதிரை பேரம்” மூலம் த.வெ.க அரசு ஆட்சி அமைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அல்லது த.வெ.க அமைச்சர்கள் நேரடியாக பதிலளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பின்னர் முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையும் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்து “அரசியல் நாகரிகத்தை மீறியது” என பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து த.வெ.க அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் திமுக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக அரியலூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: “அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குதிரை பேர அரசியல் செய்து ஆட்சி அமைத்த த.வெ.க அரசு, தற்போது திமுக மீது குற்றச்சாட்டு சுமத்தி மக்களிடம் அனுதாபம் தேட முயற்சிக்கிறது.
த.வெ.கவின் அலட்சியம், அகங்காரம், அதிகார வெறி காரணமாக கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். அப்போதும் வருத்தம் தெரிவிக்காமல் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு சுமத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பினர். தேர்தலுக்கு முன்பும், தேர்தல் காலத்திலும் திமுக தங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். இப்போதும் அதையே செய்கிறார்கள்.
பொய் குற்றச்சாட்டுகளை கூறினால் நாங்கள் அமைதியாக இருப்போம் என்று நினைத்து தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்கள். த.வெ.க ஆட்சி அமைக்கக் கூடாது என்று திமுக ஒருபோதும் நினைக்கவில்லை. திமுக – அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தி என்று பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. த.வெ.க அரசு குதிரை பேரம் நடத்தியதாக சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.

தங்களை தூய அரசியல் சக்தி என்று கூறியவர்கள், அதிகாரத்திற்காக அதிமுகவை உடைக்கும் வேலையில் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் முதலமைச்சர் விஜய் சந்தித்தது அரசியல் நாகரிகம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அதிலும் சந்தேகம் எழுகிறது. சி.வி.சண்முகத்தை மட்டும் சந்தித்தால் விமர்சனம் வரும் என்பதால், அனைவரையும் சந்தித்தாரோ என்ற கேள்வி எழுகிறது.
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அரசுக்கு ஆதரவு அளித்திருப்பது, இது குதிரை பேரம் என்பதையே வெளிப்படுத்துகிறது. அரசியல் களம் ஒரே மாதிரி இருக்காது. அமைச்சர் பதவி கிடைத்தவுடன் ஆதவ் அர்ஜூனா தமிழ்நாடு தனது காலடியில் வந்துவிட்டது போல நினைக்கிறார். தமிழகம் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஆட்சி அதிகாரம் நிரந்தரமானது அல்ல. சட்டமன்றத்தில் பேசுவதற்கு பதில் இல்லாததால் த.வெ.கவினர் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களது கட்சித் தலைவரும் வீட்டிற்கு சென்று சமூக வலைதளத்தில் பதில் அளிக்கிறார். நேரடியாக பதிலளிக்க அவர்களிடம் நேர்மை இல்லை.
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆதவ் அர்ஜூனா தனது வார்த்தைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். பாஜக செய்கிற அரசியலையே விஜய் செய்ய முயற்சிக்கிறார். இதனால் எதிர்ப்பை சம்பாதிக்கும் நிலை உருவாகும். தமிழ்நாட்டின் அடிப்படை கொள்கை மாநில சுயாட்சிதான். அதை த.வெ.க அரசு காப்பதா என்பது வரும் காலத்தில் தெரியும்.”என தெரிவித்துள்ளார்.






