தமிழ்நாடு

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

மக்களை மறந்துவிட்டு, நாற்காலியையே நினைத்துக் கொண்டிருக்கும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் திருவிழா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வழியாக நடந்தது.

இந்த கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு : -

முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே! வணக்கம்!

வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல் உலகம் - என்று போற்றப்படுகின்ற குமரி முனையில் நடைபெறக் கூடிய கழகத்தின் முப்பெரும் விழாவில் காணொலிக் காட்சி மூலமாகப் பங்கெடுக்கக் கூடிய வாய்ப்பை வழங்கிய மாவட்டச் செயலாளர்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ் ஆகிய இருவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா காலமாக இல்லாமல் இருக்குமானால், நானே நேரில் அங்கு வந்து உங்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருப்பேன். ஆனால் அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருந்தாலும் முப்பெரும் விழாவை நடத்தும் கடமையில் இருந்து நாம் நழுவவில்லை. காணொலிக் காட்சி மூலமாக நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

எமர்ஜென்சி காலமாக இருந்தாலும் - கொரோனா காலமாக இருந்தாலும் - கழகப் பணிகளிலோ, மக்கள் பணிகளிலோ கழகம் என்றைக்கும் பின் வாங்கியது இல்லை என்பதற்கு உதாரணம் தான், இந்தக் காணொலிக் காட்சி முப்பெரும் விழா ஆகும்!

கொரோனா கால கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு முதலில் முப்பெரும் விழாவை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தினோம்; கானொலிக் காட்சி மூலமாகவும் பல்வேறு தொலைக்காட்சிகள் மூலமாகவும் அதனை ஒளிபரப்பினோம்!

அதைப் பார்த்து கரூர் மாவட்டக் கழகம் முப்பெரும் விழாவை நடத்தியது. இன்று கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் நடத்துகிறோம்! இதே வாரத்தில் கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் நடத்துகின்றன. இப்படி அனைத்து மாவட்டங்களிலும் நடத்த இருக்கிறோம்.

பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது - விழாக்கள் நடத்தக் கூடாது - கிராம சபைக்கூட்டங்கள் நடத்தக்கூடாது - என்று எந்தத் தடை போட்டாலும் அந்தக் கூட்டங்களை எப்படியாவது நடத்திக் காட்டும் கூட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் பட்டாளம் என்பதை நிரூபித்து வருகிறோம்.

திராவிட இயக்கத்தின் தொடக்க காலம் முதல் இயக்கத்துக்கு வலிமையான அடித்தளம் அமைத்த பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சொல்லலாம். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதுமே குமரி பகுதியில் கோட்டாறு என்ற ஊரில் சுயமரியாதை வாசகசாலை தொடங்கப்பட்டது. வைக்கம் சென்று போராடி பெரியார் அவர்கள், குமரி வட்டாரத்தில் உள்ள சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டத்திலும் பங்கெடுத்தார்கள். ஆதரித்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

குமரி மாவட்டமானது இன்றைக்குத் தமிழ்நாட்டுடன் இருந்தாலும் 1956-க்கு முன்னதாக திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்து இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தென் எல்லையில் போராட்டம் நடந்தபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்தப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்தார்கள்.

இந்தப் போராட்டத்தை நடத்திய அமைப்பின் பெயர்: திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் என்பதாகும். காங்கிரஸ் என்று இன்னொரு கட்சிப் பெயர் இருப்பதால் கழகம் கலந்து கொள்ளக் கூடாது என்பது அல்ல, கழகம் இப்போராட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ளும் என்று சொன்னார்கள்.

தென் எல்லையில் நடந்த போராட்டத்தை ஆதரித்து சித்தூர் தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தென் எல்லைப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக நாகர்கோவிலுக்கே அண்ணா அவர்கள் வருகை தந்தார்கள். தொடர் மறியல் போராட்டத்தில் இறங்கியது தி.மு.க.

1954-ஆம் ஆண்டு நடந்த தென் எல்லை விடுதலைப் போராட்ட மறியலில் கைதான 900 பேரில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் 110 பேர் ஆவர். தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த மதியழகன் அவர்களை நாகர்கோவிலில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் சென்று பேசுவதற்கு உத்தரவிட்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
stalin 

இதேபோல் செங்கோட்டை வட்டாரத்திலும் தினந்தோறும் மறியல் போராட்டம் நடத்தியது தி.மு.க. இந்தப் போராட்டத்தில் கைதானவர்கள் நான்கைந்து வாரங்கள் சிறைத் தண்டனை பெற்றார்கள் என்பது வரலாறு. திரு.நேசமணி அவர்கள் கைதான போது அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"தென் எல்லைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் என்ன செய்ய வேண்டும் என முடிவெடுக்க நாகர்கோவில் மாவட்டச் செயலாளரான ஜான் அவர்களுக்கு முழு அதிகாரம் தருகிறேன்" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். ஏராளமானவர் உயிரைக் கொடுத்துப் பெற்ற உரிமையின் காரணமாக, 1956-ஆம் ஆண்டு இந்த கன்னியாகுமரி மாவட்டம் உருவானது.

கன்னியாகுமரி மாவட்டம் உருவானாலும், அம்மாவட்ட மக்களுக்கு ஒரு குறை இருந்தது. இந்த தென் எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்துக்கு சலுகைகள், உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தவர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

1974-ஆம் ஆண்டு தென் எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கு நிதி உதவி செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போல, மொழிப்போராட்டத் தியாகிகளைப் போல, குமரி மாவட்ட தென் எல்லைத் தியாகிகளுக்கும் தரப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.

புதுக்கடை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்துக்கு தலா 2000 நிதி உதவியும் – மாற்றுத் திறனாளிகள் 25 பேர்களுக்கு தலா 500 ரூபாயும் - 82 தியாகிகளுக்கு "தியாகச்செம்மல்" விருதும் வழங்கியவர், முதலமைச்சர் கலைஞர் அவர்கள். சிறை சென்ற தியாகிகளுக்கு மாதம் 75 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்கள்.

1996-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மீண்டும் முதல்வராக வந்தபோது, மேலும் சில தியாகிகளுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு மொத்தம் 142 தியாகிகளுக்கு உதவி செய்யும் பட்டியலை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அங்கீகரித்து நிதி உதவி செய்ய உத்தரவிட்டார்கள்.

கட்சி எல்லைகளைப் பார்க்காமல், தமிழுக்கு – தமிழர்க்கு - தமிழ்நாட்டுக்கு உழைத்தவர்கள், போராடியவர்கள், தியாகம் செய்தவர் யாராக இருந்தாலும் கழகம் அவர்களைப் போற்றும் என்பதற்கு உதாரணம் தான்; தென் எல்லை போராட்டத் தியாகிகள் குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் என்பதை குமரி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தலைநகர் சென்னையில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது வள்ளுவர் கோட்டம். குமரி முனையில் வான் தொடும் வகையில் காட்சி அளிக்கிறது, வள்ளுவர் சிலை.

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

2000-ஆம் ஆண்டில் ஆண்டின் முதல் நாள் குமரி முனையில் 133 அடியில் வள்ளுவருக்குச் சிலை வைத்த நாளில் முதலமைச்சர் கலைஞர் அடைந்த மகிழ்ச்சியை வாழ்நாளில் வேறு எப்போதாவது அடைந்திருப்பாரா எனத் தெரியவில்லை. தன்னுடைய மாபெரும் கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பெருமைப்பட்டார்கள். இப்படி ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளாகக் கனவு கண்டார். இப்படி ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று தவம் இருப்பதாகவும் சொன்னார். 1975-ஆம் ஆண்டே இப்படி ஒரு சிலை அமைக்க முதலமைச்சர் கலைஞர் அறிவிப்புச் செய்தாலும்

2000-ஆம் ஆண்டு சனவரி 1 அன்றுதான், அய்யன் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதனால்தான், "சிலையைத் திறக்கும் பொத்தானை அழுத்திய போது, எனது விரல் மரத்துப் போய்விட்டது" என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பேசினார்கள். அந்த அளவுக்கு அவர் உணர்ச்சி மயமாக ஆனார்கள். அத்தகைய குமரியில் இன்று "கழக முப்பெரும் விழா" நடப்பது பொருத்தமானது!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெறும் போதெல்லாம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளன. அதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து அதிக அளவில் வெற்றி பெற்று வருகின்றன.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்ய போதிய துறைமுக வசதி இல்லாததால், மீனவர்கள் பிற மாநிலங்களிலும் சவுதி, கத்தார், ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் சென்று மீன்பிடிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளால் அவர்கள் அவதியடைந்து வந்தனர். அதனை உணர்ந்து, சொந்த மாவட்டத்திலேயே மீன்பிடித் தொழிலை மேற் கொள்வதற்காக குளச்சல், தேங்காய்பட்டினம் பகுதிகளில் அரசு சார்பில் மீன்பிடித் துறைமுகங்கள் 2009-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது துணை முதல்வராக இருந்த நானே அதனை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தேன்.

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

* ஆரல்வாய்மொழி வட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து உப்புநீர் அதிகரிப்பதைத் தடுத்திட மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீரைப் பெறுகின்ற வகையில் ஆரால்வாய்மொழி பகுதியில் "பொய்கை அணை திட்டம்" உருவாக்கப்பட்டது.

* வில்லுகுறி பகுதியில் மலைகளில் இருந்து வரும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் மாம்பழத்துறையாறு அணை அமைக்கப்பட்டது. துணை முதல்வராக இருந்தபோது நான் வந்து அதனைத் திறந்து வைத்தேன்.

* குமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது நெடுநாள் கோரிக்கை. கடலோரமாக கட்டடம் அமைப்பதற்கு மத்திய அரசின் சட்டத்தால் தடை இருந்தது. ஆனால் மத்திய அரசுடன் போராடி மணிமண்டபம் அமைக்கக் காரணமாக இருந்தவர், முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

* கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்தோடு இணைக்கப் போராடியவர்களில் முன்நின்ற மார்ஷல் நேசமணி அவர்களைப் போற்றும் வகையில், நாகர்கோயில் வேப்பமூடு சந்திப்பில் மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தில் முக்கியப் பங்காற்றியவர் களில் ஒருவரான பொதுவுடைமை வீரர் ஜீவானந்தம் அவர்களது தியாகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் நாகர்கோயிலில் ஜீவா மணி மண்டபம் அமைக்கப் பட்டது.

* புத்தேரி மேம்பாலம் அமைத்தோம்.

* தாமிரபரணியின் குறுக்கே எஸ்டி மாங்காடு பகுதியில் விரிவான பாலம் அமைத்துக் கொடுத்தோம்.

* ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் மையம் அமைத்துத் தந்தோம்.

* 1989-ஆம் ஆண்டு பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டு இன்று வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

* சுதந்திரம் பெற்ற பின் மின்சாரம் கண்டிராத தச்சமலை, பிராமலை, தோட்ட மலை, முடவன் பொற்றை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலையோரக் கிராமங்களுக்கு சுமார் 750 புதிய மின் கம்பங்கள் நட்டு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது.

- இப்படி பல்வேறு நலத்திட்டப்பணிகளை குமரி மாவட்டத்தில் செய்து கொடுத்த ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஆனால் இன்றைய நிலைமை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இது ஆட்சி அல்ல; தமிழகத்தின் வீழ்ச்சி! அதைத்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் முழுக்க முழுக்க ஊழல் அரசாங்கம் தான் நடந்து கொண்டு வருகிறது. ஊழல்வாதிகளுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் இது. எதிலும் கொள்ளையடிப்பது மட்டும் தான் அவர்களது நோக்கம். இருக்கும் கொஞ்ச காலமும் முடிந்தவரை சுருட்டிவிட்டு தப்பி ஓட நினைப்பவர்கள்தான் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

கொரோனாவை வைத்தே கொள்ளையடிக்கிறார்கள் என்றால் பாலம் கட்டுவதில், சாலைகள் போடுவதில் அடிக்க மாட்டார்களா? ‘ஒன் அண்ட் ஒன்லி கரப்ஷன்தான்’ இந்த கவர்ன்மெண்ட். அதனால் இவர்களிடம் கோரிக்கை வைத்து எதையும் செய்ய வைக்க முடியாது. விரைவில் கோட்டையை விட்டு வெளியேறுங்கள் என்பதுதான் அவர்களிடம் நாட்டு மக்கள் வைக்கின்ற ஒரே கோரிக்கையாக இருக்கிறது.

மத்திய அரசாங்கம் கொண்டுவரும் மூன்று வேளாண்சட்டங்களை எதிர்த்து இந்தத் தமிழக அரசு எதுவும் செய்யாது என்பதால்தான் மூன்று சட்டங்களுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றச் சொன்னோம். கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. கிராம சபைகள் மக்களவைக்கு இணையானவை என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது.

எங்களுக்கு எது வேண்டும்? எங்களுக்கு எது வேண்டாம்? - என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்தந்தக் கிராமங்களுக்கு உள்ளது. அந்தந்த அடிப்படையில்தான் தீர்மானம் நிறைவேற்றச் சொன்னோம். ஆனால் கிராமசபைக் கூட்டத்தையே கலைத்துவிட்டார்கள். கிராம சபைத் தீர்மானம் என்பது தி.மு.க. வெற்றி பெற்ற உள்ளாட்சிகளில் மட்டுமல்ல, அனைத்து கிராமசபைகளிலும்தான் தீர்மானம் நிறைவேற்றச் சொன்னோம்.

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

அரசியல் பிரச்சினை அல்ல, கட்சிப் பிரச்சினை அல்ல, தி.மு.க. பிரச்சினை அல்ல. இது விவசாயிகள் பிரச்சினை. அனைவருக்கும் பொதுவான பிரச்சினை. எனவே தி.மு.க.வின் உள்ளாட்சித் தலைவர்கள் மட்டுமல்ல; அ.தி.மு.க.வின் உள்ளாட்சித் தலைவர்களுக்கும் இது சரியானதாகப்பட்டது. அவர்களும் சில ஊர்களில் - பொதுப்பிரச்சினை தானே - என்ற அடிப்படையில் தீர்மானம் போடத் தயாராகி விட்டார்கள். இதனால் தான் கிராமசபைக் கூட்டத்தையே மொத்தமாகக் கலைத்துவிட்டார்கள்.

தமிழ்நாடு முழுவதும் தீர்மானம் போட்டுவிட்டால் - இதைப் பார்த்து இந்தியா முழுவதும் தீர்மானம் போடத் தொடங்கினால் என்ன ஆகும் என்று மத்திய மாநில அரசுகள் பயந்துவிட்டன. இதுதான் காந்தியடிகளின் தனிநபர் சத்தியாகிரகம் ஆகும். ஒவ்வொரு தனிநபராக தீர்மானித்து களத்தில் இறங்கினால் ஒட்டுமொத்த தமிழகமும் அதே போல் செயலாற்றத் தொடங்கும். அதனால்தான் பயந்தார்கள். முதலமைச்சருக்கு நேர்மையும் நெஞ்சுரமும் இருந்தால், அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்களை விட்டு வேளாண் சட்டங்களை ஆதரித்து தீர்மானம் போடுங்கள் என்று சொல்லத் தயாரா? நான் சவால் விடுகிறேன்.

கொரோனாவைக் காரணம் காட்டி கூட்டத்தை ரத்து செய்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்கிறார்கள். எது எடப்பாடியின் உண்மையான முகம்? கிராம சபைக் கூட்டம் நடந்தால் கொரோனா பரவும் என்று அரசு சொல்கிறது. கிராம சபைக் கூட்டம் நடத்தலாம் என்று அறிவித்தபோது நாட்டில் கொரோனா இருப்பது தமிழக அரசுக்குத் தெரியாதா?

கிராம சபைக் கூட்டதுக்கு தடை போட்டது, விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம். கிராமங்களுக்குச் செய்யும் துரோகம். அண்ணல் காந்திக்குச் செய்யும் துரோகம்! ஜனநாயகத்துக்குச் செய்யும் துரோகம்! இந்தியாவின் எதிர்காலத்துக்குச் செய்யும் துரோகம்! இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும் -மாநிலத்தை ஆளும் ஆட்சியாக இருந்தாலும், அவை விவசாயிகளை மதிக்கவில்லை; விவசாயத்தையும் மதிக்கவில்லை.

"ஏழைத் தாயின் மகன் நான்" என்கிறார் பிரதமர் மோடி. "நானும் விவசாயிதான்" என்கிறார் பழனிசாமி. ஆனால் இவர்கள் இருவரும் ஏழைகளையும் காப்பாற்றவில்லை. விவசாயிகளையும் காப்பாற்றவில்லை. இவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை, கார்ப்பரேட்டுகளுக்காகத் தான் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த வேளாண் சட்டம் எவ்வளவு மோசமானது என்பதை அனைவரும் பொதுமக்களுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

*விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு குறைந்த பட்ச அடக்கவிலையை இந்தச் சட்டங்கள் சொல்லவே இல்லை!

* விவசாயி என்ன விளைவிக்கலாம், யாருக்கு விற்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குகிறது!

* தரகர்களை ஒழிக்கிறோம் என்று சொல்லி பெரிய வியாபாரிகள், பெரிய கிடங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு விவசாயிகளை அடிமை ஆக்குகிறது!

* இந்திய உணவுக்கழகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் ஆகியவற்றை மூடப் போகிறார்கள்!

* உழவர் சந்தைகளை இனி திறக்க விடமாட்டார்கள்!

* சிறுவிவசாயியும், குறுவிவசாயியும், நடுத்தர விவசாயியும் இந்தியாவில் 95 சதவிகிதம் பேர். யாரிடம் இருக்கிறது குளிர்பதனக் கிடங்கு? இனி குளிர்பதனக் கிடங்கு வைத்திருப்பவர்கள் கையில் விவசாயம் போய்விடும்!

* கரும்பு ஆலைகளுக்கு கரும்பைக் கொடுத்துவிட்டு ஆண்டுக்கணக்கில் பணம் வாங்க முடியாமல் இருக்கும் கரும்பு விவசாயிகளைப் போல அனைவரையும் ஆக்க நினைக்கிறார்கள்!

* கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர கதியில் நிறைவேற்றினார்கள். மூன்று சட்டங்களையும் முறைப்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை.வாக்கெடுப்பு நடத்தவில்லை!

* வேளாண்மை என்பது மாநிலப்பட்டியலில் இருப்பது. மாநில உரிமைகளைப் பறித்து கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைக்கிறது இந்தச் சட்டம்!

* ''நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்'' என்ற மோடி, இருக்கும் வருமானத்தை மட்டுமல்ல, நிலத்தையும் பறிக்கத் திட்டம் போடத் தீட்டியவை தான் இந்த மூன்று சட்டங்களும்!

* இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு உண்டா? கடன் தள்ளுபடி உண்டா? உணவு தானிய மானியம் உண்டா? உர மானியம் உண்டா? பொருட்களைப் பதப்படுத்தி வைக்க நிதிஉதவி உண்டா? விவசாய தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் உண்டா? எதுவும் இல்லை! அதனால் எதிர்க்கிறோம்! இதனை மக்கள் மத்தியில் நீங்கள் விளக்க வேண்டும்.

“கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

புதிய கல்விக் கொள்கை பற்றியும், நீட் தேர்வைப் பற்றியும் இங்கே நாஞ்சில் சம்பத் அவர்கள் உரையாற்றினார்கள். இவை மட்டுமல்ல; அனைத்து வகையிலும் சாமானியர்களுக்கு எதிராக இருக்கிறது மத்திய அரசு. மாநில உரிமையைப் பறிக்கிறார்கள். கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழைப் புறக்கணிக்கிறார்கள். இந்தியைத் திணிக்கிறார்கள். எந்த இழப்பீடுகளும் தருவதில்லை. இவை எதையும் இங்குள்ள எடப்பாடி அரசு தட்டிக் கேட்பது இல்லை. போடு தோப்புக்கரணம் என்றால் - இதோ எண்ணிக்கொள் என்று சொல்லும் ஆட்சியாக இருக்கிறது எடப்பாடி ஆட்சி.

எடப்பாடி ஆட்சியில் எந்தத் தரப்பும் நிம்மதியாக இல்லை. அமைச்சரவையில் இருக்கும் 30 பேர் மட்டும் தான் நிம்மதியாக இருக்கிறார்கள். அவர்களும் கடந்த ஒரு வாரமாக நிம்மதியாக இல்லை. ஜெயலலிதா மரணம் அடைந்து இந்த நான்கு ஆண்டுகளில் ஆட்சியே நடக்கவில்லை. அவர்கள் நாற்காலியைக் காக்கும் போராட்டம்தான் நடக்கிறது. மக்களை மறந்துவிட்டு, நாற்காலியையே நினைத்துக் கொண்டிருக்கும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது. அதில் குமரி மாவட்டமும் தன் பங்கைக் குறைவில்லாமல் செலுத்தட்டும் என்று சொல்லி விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories