தி.மு.க

ஹாத்ரஸ் சம்பவத்தை எதிர்த்து நாளை தி.மு.க மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

உ.பி அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். ராகுல் காந்தியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஹாத்ரஸ் சம்பவத்தை எதிர்த்து நாளை தி.மு.க மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"உத்தரப்பிரதேசத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாளை (அக்டோபர்-5) மாலை 5:30 மணியளவில், கிண்டி ராஜீவ் காந்தி சிலையில் இருந்து நான் தொடங்கி வைக்க, கழகத்தின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் கையில் ஒளியேந்தி பேரணியாக அணிவகுக்க இருக்கிறது தி.மு.க. மகளிரணி; மகளிரணியினர் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகள் மாபெரும் கொடூரங்களாக நடக்கின்றன. சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி, மக்களின் ஆட்சி என்பது மறைந்து அராஜகத்தின் ஆட்சி, சர்வாதிகாரத்தின் ஆட்சி, எதேச்சதிகாரத்தின் ஆட்சி தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடக்கிறது என்பதையே அங்கிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.

ஒரு பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிர் போகும் அளவுக்குச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். தன்னை குதறியவர்கள் யார் என்பதையும் அப்பெண் மரணவாக்குமூலமாகக் கொடுத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த சூழலில் அப்பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்திருக்க வேண்டிய உ.பி.பாஜக அரசு, எதிர்மறையாக நடந்து கொண்டுள்ளது.

அப்பெண்ணின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவரது பெற்றோருக்குத் தெரியாமல் அவசர அவசரமாக உடல் எரியூட்டப்பட்டுள்ளது. பெண்ணின் தந்தை கடத்திச் செல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல் எரியூட்டப்பட்ட பிறகு பேட்டியளித்த காவல்துறை அதிகாரி, அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று பேட்டி அளித்துள்ளார். குற்றவாளிகளைக் காப்பாற்ற இதைவிடப் பெரிய காரியம் எதுவும் செய்யவேண்டியதில்லை. கண்துடைப்புக்காகச் சிலரைக் கைது செய்துவிட்டு, அவர்கள் தப்பிக்கும் பாதையையும் உ.பி.காவல்துறை செய்து கொடுத்துள்ளது.

இந்நிகழ்வு உ.பி.எல்லையைத் தாண்டி இந்தியா முழுவதும் ஏராளமான கோபத்தையும் கொந்தளிப்பையும் கிளப்பி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்களையும், பிரியங்கா காந்தி அவர்களையும் அனுமதிக்காமல் உ.பி.காவல் துறையினர் தடுத்துள்ளார்கள்.

அதைவிட அராஜகமாக, ராகுல்காந்தியின் நெஞ்சைப் பிடித்து ஒரு காவல்துறை அதிகாரி தள்ளுகிறார். அவர் விழும் காட்சி, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே இழுக்கு ஆகும். ராகுலும், பிரியங்காவும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். திரு. ராகுல்காந்தி அவர்களுக்கே இந்தக் கதி என்றால் சாமானியரின் நிலைமை என்ன என்று அப்போதே அறிக்கை மூலமாகக் கேள்வி கேட்டிருந்தேன்.இதற்குப் பொறுப்பேற்று உ.பி. முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கையில் சொல்லி இருந்தேன்.

நாடு முழுவதும் ஏற்பட்ட அதிர்வலைகளைப் பார்த்துப் பணிந்த அரசு, ராகுல், பிரியங்கா உள்பட ஐந்து பேர் மட்டும் போகலாம் என்று அனுமதி வழங்கியது. ஆனால் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கியதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் தொண்டர்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பிரியங்காவை போலீஸ் அதிகாரி பலப்பிரயோகம் செய்து தள்ளி இருக்கிறார். இவை அனைத்தும் அவர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமையும், மனித உரிமையும் காற்றில் பறக்கும் காரியங்களாக உள்ளன.

இவை அனைத்துக்கும் உ.பி. முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். உள்துறையைக் கையில் வைத்திருக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும். உ.பி. பெண் மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவே முறையானதாக இருக்கும். ராகுல், பிரியங்கா மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். ராகுல் மீதான அவமதிப்பு நிகழ்வுகள் நாடாளுமன்ற உரிமைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இத்தலைகுனிவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே சிறுபான்மையினர், பெண்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் பாதுகாப்பு என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேள்விக்குறியாகி வருகிறது. ஊடகங்களும் பாதுகாப்பின்மையை உணர்கின்றன. இதனைச் சரிசெய்து, அனைவர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இதனை வலியுறுத்தி தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கிய பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி.

உத்தரப்பிரதேசத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாளை (அக்டோபர்-5) மாலை 5:30 மணியளவில், கிண்டி ராஜீவ்காந்தி சிலையில் இருந்து நான் தொடங்கி வைக்க, கழகத்தின் மகளிரணிச் செயலாளர் திருமதி. கனிமொழி அவர்கள் தலைமையில் கையில் ஒளியேந்தி பேரணியாக அணிவகுக்க இருக்கிறது தி.மு.க. மகளிரணி; இதில் மகளிரணியினர் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

உத்தரப்பிரதேச அரசு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். ராகுல் காந்தியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இதனைச் செய்ய மத்திய அரசு, உ.பி. அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குத் தமிழக ஆளுநர் எடுத்துச் சொல்லவேண்டும். அதற்காகவே இந்தப் பேரணி. நாம் ஏற்றும் ஒளி, தவறுகளை எரிக்கட்டும். இந்தியா முழுவதும் போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்றட்டும்!

banner

Related Stories

Related Stories