
நாம் மிகச் சாதாரணமாக நீதித்துறையைப் பற்றி விமர்சனம் செய்துவிட்டால், 'லோகமே கெட்டுப் போச்சு' என்று சொல்பவர்கள், இந்திய நீதித்துறை குறித்து என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடத்தைப் பார்த்தும் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
‘புதிய தேசியக் கல்விக் கொள்கை' என்ற பெயரால் NCERT பல்வேறு சர்ச்சைக்குரிய பாடங்களைச் சேர்த்து வருகிறது. ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான, மற்றவர்கள் மீது வெறுப்பைத் திணிக்கும் விதமான பாடப்பகுதிகள் பலதும் சேர்க்கப்படுகின்றன. இந்த நிலையில், ‘நீதித்துறையில் ஊழல்' என்ற பாடப்பகுதி 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது மட்டுமல்ல, நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட பகிரங்கமான மிரட்டல் ஆகும்.
நீதித்துறை குறித்து சர்ச்சைக் கருத்து இடம்பெற்றுள்ள என்.சி.இ.ஆர்.டி 8-ஆம் வகுப்பு பாடத்திற்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்தானே தவிர, ஒன்றிய பா.ஜ.க. அரசு அல்ல. 'சர்ச்சைக் கருத்து இடம்பெற்ற பாடப்பகுதியைத் தயாரித்தவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது?' என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
”பாடப்பகுதியைத் தயாரித்தவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வேறு சட்டங்களின் அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்பது குறித்து ஒன்றிய கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், NCERT தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். பாடப் புத்தகத்தைத் தயாரித்தவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு போட்டுள்ளது. வழக்கை மார்ச் 11 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மாட்டிக் கொண்ட பா.ஜ.க. அரசு மன்னிப்புக் கேட்டது. ஆனால் ஒன்றிய அரசின் மன்னிப்பை ஏற்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். 'நீதித்துறையின் மீதான சர்ச்சைக் கருத்து திட்டமிட்ட செயல்' என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை சார்பில் மன்னிப்பு கோரி உள்ளதாக ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ”NCERT அறிக்கையில் அப்படி மன்னிப்பு என்ற எந்த வரிகளும் இல்லை. தங்களது செயலை நியாயப்படுத்தி உள்ளது” என்று கண்டனம் தெரிவித்தனர். ‘வெறும் மன்னிப்பை ஏற்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. 'இந்தப் பாடத்தின்மூலம் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எத்தகைய செய்தியைத் தெரிவிக்கின்றனர்?' என்று கேள்வி எழுப்பினார்கள் நீதிபதிகள்.
”நீதித்துறையின் கண்ணியத்தை திட்டமிட்டுச் சிதைக்கும் வகையில் பாடப்பகுதி திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்றம் தெரிவித்தது. ‘இதனை ஒரு சாதாரண தவறாகக் கருத முடியாது' என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. “பாடப் புத்தகம் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல; சமூகத்தின் அனைவரின் பார்வைக்கும் செல்லும். இந்தக் கருத்து அடுத்த தலைமுறைக்கு அப்படியே எடுத்துச் செல்லப்படும். நீதிமன்றத்துக்கு
அவமதிப்பு ஏற்பட்ட பின்னர் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது” என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.

நீதித்துறையை பகிரங்கமாக மிரட்டுவது புதிதல்ல.நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் 'கொலிஜியம்' முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் தேர்வு ஆணையத்தைக் கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு. இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்திய நீதித்துறை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் 2018 ஆம் ஆண்டு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள். நீதித்துறையை துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் வழக்கமாகக் குறை சொல்லி வந்தார்.
பா.ஜ.க.வின் தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது பா.ஜ.க.வை கோபப்படுத்தியது. மாநில அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் சட்டத்தை குடியரசுத் தலைவரும், ஆளுநரும் உரிய காலக்கெடுவுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். இப்படி தொடர்ந்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் ஒன்றிய பா.ஜ.க. அரசை கோபம் கொள்ள வைத்தது. பா.ஜ.க. அரசும் தனது கோபத்தை திருப்பிக் காட்டியது.
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் அதிகாரம், உச்சநீதிமன்ற நீதிபதியிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்தியாவின் 52 ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்புவகித்து கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றுள்ளார் மாண்பமை பி.ஆர்.கவாய் அவர்கள். நீதியரசர் கவாய் மீது டெல்லி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் (71) என்பவர், காலணியை வீசினார். "சனாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது” என தொடர்ந்து கத்தி கூச்சல் போட்டுள்ளார் அந்த வழக்கறிஞர். அவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கேட்டால், 'அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என்று தலைமை நீதிபதியே சொல்லிவிட்டார்' என்றார்கள். “அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்ப வில்லை” என்று வெளிப்படையாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றம் சாட்டினார்.

இப்போது ‘நீதித்துறையில் ஊழல்' என்று பாடம் எழுத வைக்கிறார்கள். இது பகிரங்கமான மிரட்டல் ஆகும். மிகமிக அவமானகரமான நிகழ்வு ஆகும். ஒன்றிய பா.ஜ.க. அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்.






