தமிழகத்தில் இன்று மேலும் 5,337 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 82 ஆயிரத்து 928 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அதிகபட்சமாக இன்று சென்னையில் 989 பேருக்கும், அதற்கடுத்தபடியாக கோவையில் 595 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, திருப்பூரில் 369, சேலத்தில் 291, கடலூரில் 233, செங்கல்பட்டில் 231, திருவள்ளூரில் 230, காஞ்சியில் 209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதுவரை மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,52,674 ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்று பாதிப்பை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
அதன்படி, இன்று ஒரே நாளில் 5,406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரையில் 4,97,377 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். மேலும், 76 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,947 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 46,350 இருக்கிறது. தமிழகம் முழுவதும் இதுகாறும் 64 லட்சத்து 36 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.