தமிழ்நாடு

கோவை சிறு,குறு தொழில் முனைவோருக்கு நடப்பு வங்கிக் கணக்கு மூலம் கடன் வழங்கவேண்டும் - திமுக MLA வேண்டுகோள்!

கோவையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு, வங்கிகள் மூலம், அவர்களின் வங்கி பரிவர்த்தனைக்கு தகுந்தாற்போல், ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை பிணையம் இல்லா கடன்கள் வழங்கப்பட வேண்டும்.

கோவை சிறு,குறு தொழில் முனைவோருக்கு நடப்பு வங்கிக் கணக்கு மூலம் கடன் வழங்கவேண்டும் - திமுக MLA வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள், தங்களது வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு டிசம்பர் 2020 வரை கால நீட்டிப்பு அவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் நகரமான கோவையில், பல்லாயிரக் கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளன. ஏற்கனவே நலிவடைந்து, சிரமப்படுகிற, கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்தும், ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை முழுமையாக செயல்படவில்லை. இதனால், எந்த வித உற்பத்தி மற்றும் வருமானம் இன்றி, தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத மிகவும் மோசமான நிலைக்கு தொழில் முனைவோர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கோவையில், தற்பொழுது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில், ஏற்கனவே கிரெடிட் (CC) அல்லது ஓவர் டிராப்ட் (OD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கடன் அளவில் இருந்து 20 சதவிகிதம் அதிகரித்து தற்போது வங்கிகளால் கடன் வழங்கப்படுகிறது.

ஆனால் வங்கிகளில் நடப்பு கணக்கு மட்டுமே வைத்திருக்கும், இதுவரை எந்த விதமான வங்கிக்கடனும் வாங்காத தொழில் முனைவோர்களுக்கு இதுவரை எந்தவிதமான கடனும் வழங்கப்படவில்லை.

கோவை சிறு,குறு தொழில் முனைவோருக்கு நடப்பு வங்கிக் கணக்கு மூலம் கடன் வழங்கவேண்டும் - திமுக MLA வேண்டுகோள்!

எனவே கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்கள், தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற வேண்டிய நிலையில் இருப்பதால், வட்டி அதிகமாக இருந்தாலும் கூட கடன் பெற தனியார் நிதி நிறுவனங்களையே நாடவேண்டியுள்ளது.

இதனால் தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல், தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலை உருவாகிறது.

எனவே நடப்பு கணக்கு மட்டுமே வைத்திருக்கும் தொழில் முனைவோர்களுக்கு, அவர்கள் பரிவர்த்தனை செய்யும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் மூலம் அவர்களின் வங்கி பரிவர்த்தனைக்கு தகுந்தாற்போல், ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை பிணையம் இல்லா கடன்கள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் கடந்த 19. 6. 2020 அன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில், வங்கித் துறையினர் மற்றும் கோவை தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் உடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், கோவிட் -19 காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் கடன் வழங்குவது குறித்த அரசின் அறிவிப்புகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்ற காரணத்தைக் கூறி நடைமுறையில் பல வங்கிகள் இந்த அறிவிப்பை செயல்படுத்தவில்லை. வங்கிகள் கடன் வழங்குவதில் தற்போது வரை தாமதம் செய்வதால் தொழில் முனைவோர்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில் தாமதம் ஆகிறது. இந்த அறிவிப்பை , வங்கிகள் கண்டிப்பாக செயல்படுத்த தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

கோவை சிறு,குறு தொழில் முனைவோருக்கு நடப்பு வங்கிக் கணக்கு மூலம் கடன் வழங்கவேண்டும் - திமுக MLA வேண்டுகோள்!

மேலும் , தற்போதுவரை, தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை இயல்பாக நடத்த இயலாத நிலையில் இருப்பதால், தங்களது வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே இந்த பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு , கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் , தங்களது வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு டிசம்பர் 2020 வரை கால நீட்டிப்பு அவகாசம் வழங்கி, இந்த தொழிற்சாலைகளை கடுமையான சரிவிலிருந்து மீட்கும்படி கேட்டுக் கொள்கிறேன் .

மேலும் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யாமல், அதை அசலுடன் சேர்த்து, நிலுவைத் தொகையை அதிகப்படுத்துவதால் மேலும் கடன் சுமை அதிகரிக்கும். ஆகவே கடனுக்கான வட்டியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.

கோவையில் உள்ள தொழில்முனைவோர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து, நிறைவேற்றி அவர்களுக்கு உதவிடுமாறும், மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தாங்கள் பரிந்துரை செய்யுமாறும் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு : மேற்காணும் கோரிக்கைளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு தமிழக சிறு , குறு தொழில் துறை அமைச்சர் அவர்களுக்கும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories