தமிழ்நாடு

“N95 மாஸ்க்கே இல்லை; கொரோனாவை ஒழிப்பது எப்படி?" - தமிழக சுகாதாரத்துறைக்கு ஒரு மருத்துவரின் கடிதம்!

கொரோனா பாதிக்கப்பட்ட நபரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு N95 சிறப்பு மாஸ்க் கொடுக்காதது தொடர்பாக இளம் மருத்துவர் அரவிந்தராஜ், தமிழக சுகாதாரத்துறையைச் சாடியுள்ளார்.

“N95 மாஸ்க்கே இல்லை; கொரோனாவை ஒழிப்பது எப்படி?" - தமிழக சுகாதாரத்துறைக்கு ஒரு மருத்துவரின் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது.

ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த தமிழகத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 20க்கும் மேற்பட்டோரும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

“N95 மாஸ்க்கே இல்லை; கொரோனாவை ஒழிப்பது எப்படி?" - தமிழக சுகாதாரத்துறைக்கு ஒரு மருத்துவரின் கடிதம்!

இந்நிலையில், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா பாதிக்கப்பட்ட நபரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு N95 சிறப்பு மாஸ்க் கொடுக்காதது தெரியவந்துள்ளது. இதனால், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என எண்ணி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இளம் மருத்துவர் அரவிந்தராஜ், சுகாதாரத்துறையைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அது பின்வருமாறு :

ஒரு மருத்துவனின் கடிதம்

பெறுநர்,

மதிப்பிற்க்குரிய தமிழக சுகாதாரத்துறை

வணக்கம்.

தற்போது கொரோனா வைரஸ் தமிழகத்தில் தன்னுடைய கிருமித்தொற்றை பெருமளவு பரப்பிக்கொண்டிருக்கிறது. நேற்று முதல் அலைபேசியில் யாரையேனும் அழைக்க நேர்ந்தால் அடுத்த 45 வினாடிகளுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா குறித்த பாதுகாப்பு வழிமுறைகள் ஆங்கிலத்தில் காதினில் ஒலிக்கிறது.

தமிழில் இருந்திருத்தால் கடைக்கோடி தமிழனையும் சென்றிருக்கும். இருந்தாலும், மிக்க மகிழ்ச்சி. அருமை. வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு செய்யும் செயல்படும் அரசு மருத்துவர்களின் நலனில் ஏன் அக்கறை கொள்ளவில்லை என்பது எனக்கு இப்போது வரை புரியவில்லை.

ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதித்த இரண்டு மருத்துவர்களையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்கள். ஆனால் N95 எனப்படும் சிறப்பு மாஸ்க் அவர்களுக்கு கொடுத்திருந்தால் இந்த தனிமைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏன் வரப்போகிறது?

இந்தியாவின் முதல் கொரோனா தொற்று பாதித்த மாத்திரத்தில் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் N95 சிறப்பு மாஸ்க் கிடைக்க வழிசெய்திட அரசுக்கு எத்தனை நேரமாகி விடப்போகிறது? மருத்துவரின் பணி பிணி நீக்குவதே. பிணி நீக்கும் பொழுதில் அவரின் உயிர் நீங்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்த சுகாதாரத்துறை இதை கவனிக்கத் தவறுவது ஏன் ?

“N95 மாஸ்க்கே இல்லை; கொரோனாவை ஒழிப்பது எப்படி?" - தமிழக சுகாதாரத்துறைக்கு ஒரு மருத்துவரின் கடிதம்!

பொதுமக்களை விட எண்ணற்ற மடங்கு கொரோனா பாதிக்கும் அபாயம் கொண்டவர்கள் அவர்களை அனுதினமும் சந்திக்கும் மருத்துவர்களே. ஏதேனும் கலவரம் என்றபோது அதைத் தீர்க்கப் போராடும் இராணுவம் மற்றும் காவல்துறைக்கு தலைக்கவசம், லத்தி, துப்பாக்கி என அனைத்தையும் வழங்கும் அரசு தற்போது இவ்வுலகில் மிகப்பெரிய கலவரமாக கருதப்படும் கொரோனாவை நீக்கப் போராடும் வெள்ளையுடை அணிந்த மருத்துவ இராணுவத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தயங்குவது ஏன்?

நிச்சயமாக இது உணர்ச்சிப்பெருக்கின் வெளிப்பாடு அல்ல. N95 மாஸ்க் அணிந்தாலும் கிருமித்தொற்று ஏற்படலாம். ஆனால், எனக்கான பாதுகாப்பு ஒன்றுமே என் அரசிடம் இருந்து கிடைக்கவில்லையே என்ற நியாயமான ஆதங்கம் தான் இது. எவராலும் மறுக்க முடியாத ஆதங்கம்.

“N95 மாஸ்க்கே இல்லை; கொரோனாவை ஒழிப்பது எப்படி?" - தமிழக சுகாதாரத்துறைக்கு ஒரு மருத்துவரின் கடிதம்!

நோயாளிகளை மாஸ்க் அணியாமல் அரசு மருத்துவர்கள் இந்த நொடி வரையில் பரிசோதித்த வண்ணம் இருக்கிறார்கள். சொந்த செலவில் வாங்கலாம் என்றால் எங்கும் இல்லை. விற்றுத்தீர்ந்து விட்டதாம். சாதாரண மாஸ்க் கூட இப்போது அரசு மருத்துவமனைகளில் இருப்பு நிலையில் இல்லை என்பது கூடுதல் தகவல்.

கொரோனா என்றல்ல. எத்தனையோ பரவும் கிருமித்தொற்றுகளை மருத்துவர்கள் தோட்டாக்கள் துளைப்பது போல உடலில் தினமும் ஏந்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். கிருமிகள் எங்களை துளைப்பது பிரச்னையன்று. துளைக்கக்கூடாது என்று என் மீது அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லையே என்ற ஒரு சாமானியனின் ஆதங்கம் தான் இது. நிலைமை கட்டுக்குள் அடங்கும் வரை உழைக்க மருத்துவர்கள் தயார்.

பேரிடர் காலங்களில் மக்கள் நலம் மேம்பட மருத்துவக்குழு செய்த செயல்கள் தாங்கள் அறிந்திராத ஒன்றும் இல்லை. பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் என்று கூறியுள்ளீர்கள். தினமும் ஆயிரமாயிரம் மக்கள் புழங்கும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்களை கொஞ்சம் கூர்ந்து கண்டுகொள்ளலாமே!

என்னை கிருமியிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள விடுமுறை வேண்டாம். என் பணி பிணி நீக்குவது என்பதை நன்கு அறிந்தவன். அதைச் செய்ய நான் தயார். மகாபாரதப்போரில் தான் இறப்பேன் என்று தெரிந்தும் சக்கரவியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றான் அபிமன்யு. மகாபாரதம் உண்மையா என்று தெரியவில்லை. உள்ளே சென்ற அபிமன்யு கைகளில் வில் அம்பும், கவசமும் தந்தே அனுப்பினர்.

“N95 மாஸ்க்கே இல்லை; கொரோனாவை ஒழிப்பது எப்படி?" - தமிழக சுகாதாரத்துறைக்கு ஒரு மருத்துவரின் கடிதம்!

மருத்துவ உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் நிறைய மகாபாரதப் போர்களில் பல சிரமமான வியூகங்கள் உள்ளன. வியூகத்தை உடைக்க நாங்கள் தயார். உள்ளே சென்று ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும் தயார். கேட்பது அனைத்தும் N95 என்னும் சிறப்பு கேடயமும், வில் அம்பைப் போல் எப்போதும் உடன் வைத்திருக்க கை சுத்திகரிக்கும் சானிடைஸர்களும் மட்டுமே.

மக்கள் நலம் அவசியம் எனக்கருதி தலைக்கவசம் அணிய ஆணை பிறப்பிக்கும் அரசு, இதையும் செய்தால் சிறப்பு. ஏனென்றால் அரசு மருத்துவர்களும் அரசாங்க சொத்தே. அவர்களைப் பராமரிக்கும் கடமையை அரசாங்கம் செவ்வன செய்தல் வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

நன்றி.”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories