
கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் அதிகரித்து வரும் வேளையில் மங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து நோய்த்தொற்று அறிகுறியுள்ள நபர் ஒருவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து நேற்று கர்நாடகாவின் மங்களூருவுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான காய்ச்சல் இருந்ததால் அவரை அரசு வென்லாக் மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் மருத்துவப் பணியாளர்கள் அனுமதித்துள்ளனர்.

இப்படி இருக்கையில், நேற்று இரவு மருத்துவமனையில் இருந்த செவிலியர்களிடம் தனக்கு கொரோனா தொற்று இல்லை என வாதிட்டதோடு, தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, திடீரென நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றிருக்கிறார். இதுதொடர்பாக தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தப்பியோடிய நபர் குறித்து போலிஸிடம் புகாரளித்துள்ளனர்.
அதனடிப்படையில் மங்களூரு கடலோர பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா அறிகுறியுடைய அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த நபர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அதிகாரி சிக்கந்தர் பாட்சா, “வைரஸ் அறிகுறி இருப்பவர்களை குறைந்தபட்சம் 24 மணிநேரமாவது மருத்துவக் கண்காணிப்பில் வைத்து பரிசோதனை நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். மருத்துவமனையில் இருந்து தப்பியோடியவர் குறித்து போலிஸிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.








