
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் நிதி விடுவிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன், அடுத்த மூன்று மாதங்களுக்கான (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்) உரிமைத் தொகையான ரூ. 3,000-ஐ ஒரே தவணையாக இன்று மகளிரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளார்.
மேலும், இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், பொதுமக்களின் கோடைக்காலச் செலவுகளைக் கருத்தில் கொண்டு ரூ. 2,000 சிறப்புத் தொகையையும் சேர்த்து, மொத்தமாக ரூ. 5,000 இன்று பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. காலையிலேயே வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தியைப் பார்த்த பெண்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் நலன் சார்ந்த முதலமைச்சரின் இந்த அதிரடி முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை:-
மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளன. விலைவாசி சுமையில் தவிக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும்.
CPM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் :-
உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு காலையிலேயே பெரும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுத்தி வருகிறது. அந்த இடையூறுகள் அனைத்தையும் முதலமைச்சர் உறுதியுடன் தகர்த்து வருகிறார்.
CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்:-
தேர்தல் நடத்தை விதிகளால் மகளிர் உதவித் தொகை செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக குடும்பத் தலைவிகள் சிரமங்களை சந்திக்கக் கூடாது என்ற உயர்ந்த பொறுப்புணர்வோடும், கோடைக் காலத்தில் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும் என்பதையும் கருத்தில் கொண்டும், சிறப்பு நிதியாக ரூ.2,000/- ஐச் சேர்த்து, குடும்பங்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் வங்கிக் கணக்குகளில் முன்கூட்டியே செலுத்தி அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். முதலமைச்சரின் சமூகநீதி பார்வையும், பாலின சமத்துவத்தை நோக்கிய நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கவை; வரவேற்கத்தக்கவை.
வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்:-
மகளிர் வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் - உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற முதலமைச்சர் அவர்களின் மகத்தான அறிவிப்பை வரவேற்கிறோம்! இது யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பாகும். மக்கள் நல அரசாக, சமூக நீதி அரசாக, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், சுகாதாரக் கட்டமைப்பில் முதல் மாநிலம் என்ற பெருமைகொண்ட அரசாகத் தமிழ்நாடு அரசைத் தலைநிமிரச் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி:-
மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு மூன்று மாதங்களுக்கான தொகையை இம்மாதமே ஒரே தவணையாகவும், அவர்கள் கூடுதல் பலன்பெறும் வகையில் கோடைகால சிறப்பு தொகையாக இரண்டாயிரம் ரூபாயையும், இன்று அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது வெள்ளித்தட்டில் வைத்து வழங்கப்படும் பஞ்சாமிர்தம் ஆகும்.
IUML கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் வெள்ளிக்கிழமை காலை ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இது திராவிட மாடல் நல்லாட்சிக்கு மேலும் ஒரு மகுடம் இணைத்தது போலாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு வரவேற்பு அளிப்பதாக இருக்கிறது!






