
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் இன்று (ஆகஸ்ட் 02) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மைக் கிடைக்கும் இடங்களில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். காவிரி நதிநீர், மேகதாது தொடர்பாக அடிப்படைகூட தெரியாமல் பேசுகிறார். நீர்வளத்துறை அமைச்சர் நீரை விட வேகமாக ஓடுகிறார். காவிரி பிரச்சனையில் தவெக-வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பேச வக்கு இல்லாமல் உள்ளனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து தேவையில்லாத கருத்துகளை பேசுகிறார் அமைச்சர் நிர்மல் குமார். கலைஞர் குறித்து பேச துளியும் தகுதியில்லாதவர் அவர்.
முன்பு இருந்த தமிழ்நாடு முதலமைச்சர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களைக் கேட்டு, அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஒன்றிய அரசை சந்திப்பார்கள். ஆனால், இப்போது தவெக அரசோ அதுகுறித்து எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.
காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார் என தகவல்தான் வந்தது. இதுவரை தவெக தரப்பில் வெளிப்படை தன்மையாக இதுகுறித்து பேச முடியாமல் உள்ளனர்.சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின் இன்று வரை காவிரி பிரச்சனை குறித்தும், மேகதாது குறித்தும் இதுவரை வாய் திறக்கவில்லை.
நிர்மல் குமாருக்கு சவால் விடுகிறேன். காங்கிரஸ் கட்சி என்ன பேசியது என்று பொதுவெளியில் சொல்ல வேண்டும். காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ள தவெக விஜய் இது குறித்து விளக்க வேண்டும்.

டி.கே.சிவக்குமார் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை தவெக அரசு ஏன் கூட்டாமல் உள்ளது. மேகதாது அணை குறித்து எதிர்க்கட்சி தலைவர் கூறிய கருத்துக்கு டெல்லிக்கு செல்வோம் அல்லது செல்ல மாட்டோம் என ஒரு பதிலை தெரிவிக்க வேண்டும்.
இந்த அரசு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தது என மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை. கர்நாடகாவிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்வது சரியான முடிவு அல்ல என எங்கள் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதில் முதல்வர் விஜய்க்கு அப்படி என்ன ஈகோ. தான் தோன்றித் தனத்தை சினிமாவில் வைத்து கொள்ள வேண்டும். மக்கள் நலன் முக்கியமே தவிர, ஈகோ முக்கியமல்ல.
மேகதாது அணை கட்டக்கூடிய விஷயத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டுமா வேண்டாமா? அரசின் நிலைப்பாடு என்ன, நீதிமன்றத்தை நாட என்ன முயற்சியை அரசு எடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் ஏன் மனுதாக்கல் செய்யவில்லை. அடுத்த 24 மணி நேரத்திற்குள் விஜய், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் யாரேனும் பதிலளிக்க முடியுமா?
முதலமைச்சர் இந்த விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேடி நாடகம் ஆடுகிறார். மக்கள் பிரச்சனை சரிசெய்யும் முதல்வராக இல்லை.
கலைஞர் குறித்து பேசும் அருகதை தவெக வில் யாருக்கும் கிடையாது. கலைஞர் குறித்து பேசுபவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும். தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் குறித்து அவதூறாக பேசுவதற்கு நிர்மல் குமார் அருகதையற்றவர். எங்கள் வழக்கறிஞர் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டோம். அவதூறாக பேசிய நிர்மல் குமார் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.
உபரிநீரை கர்நாடகா திறந்து விட்டிருக்கிறது. ஜூன் 12-ல் காவிரி நீர் திறந்திருக்க வேண்டும். அது குறித்து பதில் பேச துப்பில்லை.
மேகதாது அணை கட்டுவதை தடுக்க தீர்ப்பாயம் அமைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

காவிரி தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை செய்தார்? என வெளிப்படையாக பேச முடியுமா?
நாகரிகமாக அரசின் நிலைப்பாட்டை நிர்மல் குமார் பேசவேண்டும். திமுக பனங்காட்டு நரி, இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் திமுக அஞ்சாது.
புஸ்ஸி ஆனந்த்-க்கு தீர்ப்பாயம் என்றால் என்னவென்று தெரியுமா?மோசமான அரசையும், அமைச்சரவையும் இதுவரை தமிழ்நாடு பார்த்ததில்லை. கோமாளிகள் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்கின்றனர். தமிழ்நாட்டில் நடந்த விபத்து தான் தவெக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது.
சட்டம் - ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது. விஜய் ஆணவ, அதிகாரை போதை மயக்கத்தில் தெளிந்து தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என பார்க்க வேண்டும். பதிலளிக்க முடியவில்லை என்றால் விவசாயிகளுக்கு நீங்கள் துரோகிகள் என்றுதான் பார்ப்பார்கள்.
மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் அரசிடம் இல்லை. அரசியல் அறிவு இல்லாமல் நீர்வளத்துறை செயலாளரை இந்த நேரத்தில் மாற்றியுள்ளனர். நீர்வளத்துறையின் செயலாளர் கூறிய ஆலோசனைக்கு உரிய மதிப்பளிக்காமல் செயலாளரை மாற்றியுள்ளனர். விஜய்க்கு பிடிக்காத அட்வைஸ் கூறியதால் நீர்வளத்துறை செயலாளரை மாற்றியிருக்கலாம்
திமுக இந்த விவகாரத்தில் தெளிவாக உள்ளது. உச்சநீதிமன்றம் சென்று மேகதாது அமைக்க கூடாது என தீர்ப்பாயம் அமைப்பது தான் ஒரே வழி.
உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ தனக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையிடம் கேட்கிறார் என்றால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சந்தி சிரிக்கிறது என்பது தெரிகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ காவல்துறை பாதுகாப்பு கேட்கிறார் என்றால், முதலமைச்சருக்கு எதுக்கு காவல்துறை இலாகா? என கேள்வி எழுப்பி எழுப்பினார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை வர வேண்டாம் என, மற்றொரு மாநிலம் கூறுகிறது என்றால், இதைவிட அவமானம் தமிழ்நாட்டுக்கு வேறென்ன இருக்கும். இது விஜய் என்ற தனிப்பட்ட மனிதருக்கான பிரச்சனை இல்லை, தமிழ்நாட்டின் மக்களுக்கு நேர்ந்துள்ள அவமானம் என தெரிவித்தார்.






