
முரசொலி தலையங்கம் (19-09-2026)
லண்டனில் இருந்து என்ன கொண்டு வந்தார்?
லண்டனில் இருந்து என்ன கொண்டு வந்தார் விஜய்? அவமானத்தைத்தான் கொண்டு வந்துள்ளார். விஜய்யின் லண்டன் பயணத்தில் நடந்தவைகளைப் பார்த்துத் திட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கிறார்கள் இளைய தலைமுறையினர். இதுவரை அவரை விமர்சித்தும், அவமானப்படுத்தும் வகையிலும் வீடியோ பதிவுகளைப் போட்டு வந்தது தமிழ்நாட்டு மக்கள்தான். லண்டன் பயணத்துக்குப் பிறகு வெளிநாடுவாழ் தமிழர்களும் அதைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.
‘தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறேன்’ என்று சொல்லி விட்டு முதலமைச்சர் விஜய், அரசு முறைப்பயணமாக லண்டன் சென்றார். போனது நடிகர் அஜித்துக்காக மட்டும்தான் என்பதை அந்த நடிகரே சொல்லி விட்டார். ‘நான் அழைத்து வந்துள்ளார். கார் ரேஸ் போட்டியில் எங்களைப் பார்ப்பதற்காக நான் அழைத்து முதலமைச்சர் விஜய் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மிக பிஸியான நேரத்திலும் கார் ரேஸைக் காண வந்த முதலமைச்சர் விஜய்க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அஜித் சொல்லி இருக்கிறார்.
இன்னொன்றையும் அனைத்து ஊடகங்களும் அம்பலப்படுத்தி இருக்கின்றன. இது கார் ரேஸ் மட்டுமல்ல, சினிமா சூட்டிங் என்றும் சொல்லி இருக்கின்றன. ‘‘அஜித்தைப் பொறுத்தவரை அவருடைய கார் ரேஸ் தொடர்பான ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப் போகிறது. விஜய் தற்போது லண்டனில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தது போன்ற காட்சிகளை அந்த ஆவணப்படத்தில் சேர்க்க இருக்கிறார்’’ என்று ஜூனியர் விகடன் (20.9.2026) இதழ் எழுதி இருக்கிறது. லண்டன் போனதன் உண்மையான நோக்கம் இதுதான் என்பதையும் அனைத்து ஊடகங்களும் சொல்லி வருகின்றன. ஆவணப் படத்தில் நடிக்கச் சென்று விட்டு அதனை அரசுமுறைப் பயணமாக மாற்றி ஏமாற்றி இருக்கிறார் விஜய்.
அங்கும் அதே நடிகையை வரவைத்து, அவரோடு வலம் வரும் காட்சிகளும் வீடியோக்களாக வெளியில் பரப்பப்பட்டு வருகிறது.
கார் ரேஸ், நடிகையுடன் லண்டன் பயணம் என்று செய்திகள் வெளியானது. இச்செய்திகள் மூலமாக அவமானம்தான் அதிகம் ஏற்படுகிறது என்பதை அறிந்ததும் அவசர அவசரமாக சில நிறுவனங்களை அழைத்து ‘போட்டோ ஷூட்’ நடத்தி இருக்கிறார் விஜய். இங்கிலாந்து நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும், 12 ஆயிரம் கோடி முதலீடு என்று பீடிகையுடன் இரண்டு புகைப்படங்கள் வெளியானது. தங்கி இருந்த ஹோட்டலில் ஒரு ஸ்கிரீனைக் கட்டி போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.
அந்த நிறுவனங்கள் தொழில் தொடங்குகிறதோ இல்லையோ, இங்கிலாந்து நிறுவனங்களாக இருந்திருக்க வேண்டாமா? அதுவும் இல்லை. இந்திய நிறுவனம், அதுவும் தமிழ்நாட்டில் தொழில் நடத்தி வரும் நிறுவனத்துடன் இங்கிலாந்தில் வைத்து ஒப்பந்தம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையகமாகக் கொண்ட மதர்சன் குழுமத்துக்கு தமிழ்நாட்டிலும் நிறுவனங்கள் இருக்கிறன. அவர்களுடன் ஒப்பந்தம் போடுவதற்கு லண்டனுக்கு எதற்காகச் செல்ல வேண்டும்? பல ஆண்டுகளாக தமிழ்நாட்டுடன் தொடர்புள்ள நிறுவனம் இது. அவர்களை எதற்காக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்?
அதே போல், ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள வில்சன் பவர் நிறுவனம் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே மின்மாற்றி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்து விட்டது. அதையே தான் திரும்பவும் அறிவித்துள்ளார்கள். இன்னொரு முறை கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.
ஏற்கனவே ‘தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு’ என்று சொல்லி சென்னையில் ஒரு கூத்தை அரங்கேற்றினார்கள். 1 லட்சம் கோடி முதலீடு வந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் யார் முதலீடு செய்தது என்பதை இதுவரை சொல்லவில்லை. அந்த முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஊடகங்கள் அழைக்கப்படவில்லை. ரகசியமாக நடந்தது அந்த மாநாடு. முதலீடுகளை ஈர்ப்பதை சினிமா கிளைமாக்ஸ் எடுப்பதைப் போல ரகசியமாக ஏன் செய்ய வேண்டும்?
விஜய்யை நம்பி யாராவது முதலீடு செய்ய வருவார்களா? வரமாட்டார்கள். அவர் ஆட்சிக்கு வந்தது முதல், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிறுவனங்கள் அனைத்தும் ஆந்திராவுக்குச் சென்று விட்டன. கடந்த நான்கு மாதத்தில் ஆந்திராவுக்குச் சென்ற நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்ட பிறகு, தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது அப்படியே முடங்கிவிட்டது. விஜயை சுற்றி இருக்கும் ‘ஆந்திரா லாபி’ மிகச் சரியாக வேலை பார்க்கிறது. இந்த நிலையில் இனி தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சியும் வராது. புதிய நிறுவனங்களும் வராது. இதை மறைக்க நாடகம் ஆடி வருகிறார் விஜய்.
கார் ரேஸுக்காகச் செல்கிறேன் என்றால் சொந்தக் காசு செலவு செய்ய வேண்டும். அரசாங்க காசை எடுக்க வேண்டுமானால் ‘தொழில் முதலீடு ஒப்பந்தம்’ நடந்ததாக ஒரு போட்டோ தேவை. அதற்காக இவை செய்யப்பட்டுள்ளன. அப்பட்டமான, அசிங்கமான மோசடியை பச்சையாகச் செய்துள்ளார் முதலமைச்சர் விஜய். தான் எது செய்தாலும் மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார். அதனால்தான் துணிச்சலாக அசிங்கங்களை அரங்கேற்றுகிறார்.
சென்றது நடிகருக்காக. சென்றது நடிகையுடன். இதற்காக செலவு செய்யப்பட்டது தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம். ஊரான் வீட்டு நெய்யில் தனக்கு ஸ்வீட்.
அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்.






