
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 'கொலை' என்ற ஒருமை மாறி, நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
நாம் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருக்கிறோமா அல்லது தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்று மக்கள் நினைக்கும் அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரட்டைக் கொலைகள் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கூலிப்படையை ஏவியவர்களைக் கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு சமூகவலைதள பதிவில் ”Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?
‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது. காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.






