
ஐபிஎல் தொடரில் கடந்த 17 ஆண்டுகளாக கோப்பை எதுவும் வெல்லாவிட்டாலும், மிகப்பெரிய அணியாக வலம் வந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இருப்பினும் 2025ம் ஆண்டில் மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர். வரும் ஆண்டுகளிலும் ஆர்சிபி அணியே கோப்பையை வெல்லும் என ஆணித்தரமாக நம்புகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக ஆர்சிபி அணி விற்பனையாகிறது என வதந்திகள் சுற்றிய வண்ணம் இருந்தது. இதனைத் தொடர்ந்து தான் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் 16,706 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆதித்ய பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்புதான் இதனை வாங்கியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் இல்லாத வகையில் மிகப்பெரிய விற்பனையான இது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விற்பனைத்தொகையான 1.63 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் 15,300 கோடி ரூபாய் என்ற விற்பனைச் சாதனையை முறியடித்துள்ளது. ஆர்சிபி-யை வாங்க ரஞ்சன் பாய் தலைமையிலான குழு மற்றும் EQT-பிரேம்ஜி இன்வெஸ்ட் கூட்டணி உட்பட பலரும் கடும் ஆர்வம் காட்டினாலும் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவில்லை.

பிர்லா, ப்ளிட்ஸர், பிளாக்ஸ்டோன் டிஓஐ கூட்டமைப்பு அணியை வாங்கியது இவர்களது வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது உலகின் அதிக லாபகரமான விளையாட்டு சொத்தாக கருதப்படுகிறது.
ஆர்சிபி அணியின் புதிய நிர்வாகத்தின் கீழ், ஆர்யமான் விக்ரம் பிர்லா தலைவராகவும், சத்யன் கஜ்வானி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்பார்கள் என கூறப்படுகிறது. உரிமையாளர்கள் குழுவில் போல்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டேவிட் ப்ளிட்ஸ் மற்றும் BXPE-ன் தலைமை நிர்வாக அதிகாரி விரால் படேல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்சிபி அணியை வாங்கியது குறித்து ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளில், ஐபிஎல் தொடர் அதிக மதிப்புடன் உலகளாவிய விளையாட்டு சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆர்சிபி மூலம் குளோபல் ஸ்போர்ட்ஸ் தளத்தில் எங்களின் பாரம்பரியத்தையும் நீட்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரின் பாரம்பரிய அணிகளில் ஒன்றான ஆர்சிபி-யை விஜய் மல்லையாவின் யுனைடெட் ப்ரூவரீஸ் குழுமம் ஆரம்பத்தில் இந்திய மதிப்பில் ரூ.1,043 கோடிக்கு வாங்கியது. இந்த விற்பனை தொகை அசல் விலையிலிருந்து 1,360% என்ற மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
நிதி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 2016-ல் மல்லையா வெளியேறும் வரை, அவர் அணியின் முக்கிய நபராகத் திகழ்ந்தார். பின்னர், பிரிட்டிஷின் டியாகோ, யுனைடெட் ஸ்பிரிட்ஸை கையகப்படுத்தியதால் ஆர்சிபி உரிமையும் அதற்குச் சென்றது.

டியாகோ நிர்வாகத்தின் கீழ், ஆர்சிபி மகளிர் அணி 2024-ல் தனது முதல் மகளிர் பிரீமியர் லீக் (WPL) பட்டத்தையும், ஆண்கள் அணி 2025-ல் தனது முதல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பட்டத்தையும் வென்றன. இதனைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் அணி இரண்டாவது WPL பட்டத்தையும் வென்றுள்ளது.
ஆர்சிபி அணியின் தற்போதைய புதிய உரிமையாளர்கள், ஐபிஎல் மற்றும் WPL என இரு தொடர்களிலும் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஒரு அணியைப் பெறுகின்றனர். பெங்களூரு இருப்பிடம் மற்றும் வலுவான பிராண்ட் காரணமாக RCB, ஐபிஎல்-லின் மிகவும் மதிப்புமிக்க அணியாகக் கருதப்படுகிறது.
இருந்தாலும், 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள சிஎஸ்கே அணியும், 5 முறை கோப்பைகளை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்குப் பிறகு தான் ஆர்சிபி அணி என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மிகப்பெரும் விவாதம் நடந்துகொண்டேதான் உள்ளது.






