
2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் சின்னச்சாமி மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இத் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 30-ம் தேதி ராஜஸ்தானுடன் மோத உள்ளது.
இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3ம் தேதி தனது சொந்த மைதானமான சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில், வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே சார்பில் மெகா ரசிகர்கள் திருவிழா நடத்தப்பட உள்ளது. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை எந்த ஐபிஎல் அணியும் நடத்தியதில்லை.
தோனிக்கு இதுதான் கடைசி சீசன் என கூறப்படும் நிலையில், சிஎஸ்கே-வின் முன்னாள் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன், பிராவோ மற்றும் முரளி விஜய் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் இசை ஜாம்வான், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சி நாளை (மார்ச் 22) மாலை நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 15ம் தேதியே தொடங்கி முடிவடைந்துவிட்டது. தொடக்கத்தில் டிக்கெட் விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால், சில நாட்களில் டிக்கெட் விற்பனை வழக்கம்போல் ஜோராக நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தோனி தற்போதைய அணி வீரர்களுடன் சேர்ந்து முன்னாள் வீரர்கள் அணியை எதிர்கொள்வாரா என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனை மீண்டும் ஒரு சிஎஸ்கே ரீ யூனியன் தான் என ரசிகர்கள் அன்போடு சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.






