விளையாட்டு

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் AI கேமராக்கள்! : பெங்களூருவில் மீண்டும் IPL போட்டிகள் நடைபெறுமா?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலை கண்காணிக்க மைதானம் முழுவதும் 300 முதல் 350 AI கேமராக்களை பொருத்த, RCB அணி கர்நாடக மாநில கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் AI கேமராக்கள்! : பெங்களூருவில் மீண்டும் IPL போட்டிகள் நடைபெறுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக ஐபிஎல் (Indian Premier League) இருந்து வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடருக்கான போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஐபிஎல் தொடரின் 18வது சீசன் 2025ம் ஆண்டு நடைபெற்றது.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 70க்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடைபெற்றது. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி RCB (Royal Challengers Bangalore) அணி, ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் விராட் கோலி RCB அணிக்காக முதல் சீசனில் இருந்தே விளையாடி வருவதால், RCB அணிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அதனால், லட்சக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 2025ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய RCB அணியின் வெற்றிக்கொண்டாட்டம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தின் போது எதிர்பார்த்தைவிட அதிகமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்தியாவில் ஒரு விளையாட்டு அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் நடைபெற்ற மிகப்பெரிய சோக நிகழ்வாக இது அமைந்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் AI கேமராக்கள்! : பெங்களூருவில் மீண்டும் IPL போட்டிகள் நடைபெறுமா?

இதனைத்தொடர்ந்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இன்றுவரை எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளும் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கும் சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளதையொட்டி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு (KSCA), RCB அணி நிர்வாகம் எழுதியுள்ள கடிதத்தில், “சின்னசாமி மைதானத்தில் 300 முதல் 350 எண்ணிக்கையிலான செயற்கை நுண்ணறிவு கேமராக்களைப் பொருத்துவதன்மூலம் கூட்டத்தின் நடமாட்டம், பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் வரிசைகள் மற்றும் பார்வையாளர்கள் நுழைவு, வெளியேறும் இடங்களைக் கண்காணிப்பதோடு, அங்கீகரிக்கப்படாத நுழைவுகளையும் சரியாக கண்காணிக்க உதவும்” என தெரிவித்துள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்களை நிறுவுவதற்கான மொத்த செலவான சுமார் 4.5 கோடி ரூபாயையும் முழுமையாக RCB அணியே ஏற்றுக்கொள்ளும் எனவும் RCB நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் AI கேமராக்கள்! : பெங்களூருவில் மீண்டும் IPL போட்டிகள் நடைபெறுமா?

தற்போது இந்த ஆலோசனைகள் பரிசீலிக்கப்படுமா?, நடப்பு சாம்பியனான RCB அணி சின்னசாமி மைதானத்தில் தனது சொந்த போட்டிகளை விளையாடுமா? என்பது குறித்த இறுதி முடிவு வரும் நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அனுமதி வழங்கப்படாமல் நீடித்தால் RCB அணியின் சொந்த ஊர் போட்டிகளை பெங்களூருக்கு வெளியே, புனே உள்ளிட்ட மற்ற இடங்களில் நடத்துவதற்கான மாற்று வழிகளையும் ஆர்சிபி அணி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இருப்பினும் RCB ரசிகர்கள் விரும்பும் மைதானமாக பெங்களூரு சின்னசாமி மைதானம் இருப்பதால், கர்நாடக கிரிக்கெட் சங்கமும், கர்நாடக மாநில அரசும் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories