சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக 'கேடட்' சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் அல்மாட்டியில் ஓபன் பெண்கள், 12, 10 வயது உட்பட 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 88 நாடுகளில் இருந்து 842 பேர் பங்கேற்றனர்.
கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற இந்த உலக 'கேடட்' சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஷர்வானிகா, கியானா, திவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டின் அரியலூரை சேர்ந்த ஷர்வானிகா, முதல் சுற்றில் கஜகஸ்தானின் அடெலினாவிடம் தோல்வியடைந்தார். பின்னர், அடுத்தடுத்து வந்த சுற்றுகளில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
மேலும் இறுதி போட்டியில் இவரும், மங்கோலியாவின் சின்ஜோரிக், சீனாவின் ஜிஜின் தலா 9.0 புள்ளி பெற்றனர். இருப்பினும் 'டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஷர்வானிகா, முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பிய தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய வீராங்கனை ஷர்வானிகா செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை போன்ற வீரர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். செஸ் விளையாட்டில் இன்னும் நான் மேலே செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். அதுவே தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற காரணமாக உள்ளது. தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுப்பதால்தான் இங்கு விளையாட்டுத்துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் எங்களால் இலக்கை எளிதாக அடைய முடிகிறது. எனவே தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றி.” என்றார்.