விஜய் தனது ரசிகர்களின் அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்ததன் விளைவே கரூரில் நடைபெற்ற அநியாய மரணங்கள் என கலை இலக்கியவாதிகள், சமூகச் செயல்பாட்டார்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய "சாலையில் காட்சிதரும் - ரோடு ஷோ நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 4 1பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றாம்.
விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம்.
கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.
விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும்கட்டுக்கதையை ஏற்கத்தக்கதல்ல.
தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.20205 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது.
கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன.
எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம்.
விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளை தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும்.
வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.