41 உயிர்களை காவுகொண்ட கரூர் பெரும் துயரம் நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவிக்காமல், த.வெ.கவினர் தொடர்ந்து அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இந்நிலையில், தவெக தரப்பிலும், விஜய் தரப்பிலும் எழுப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வீடியோக்களை பகிர்ந்து கரூர் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் 2000 செருப்புகளுக்கு மேல் கிடந்தன. ஒரு காலி தண்ணீர் பாட்டிலையாவது, யாராவது பார்த்தீர்களா? வந்தவர்களுக்கு தேவையான தண்ணீர், பிஸ்கட் வசதிகள் எதுவும் செய்துக் கொடுக்கவில்லை.
கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் நின்றது 19 நிமிடம். அவர் பேசியது 10 நிமிடம். இந்த 10 நிமிடத்திற்காக இத்தனை உயிர்கள் பலியாகி இருக்கிறது. அங்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல அது கட்டுப்பாடற்ற கூட்டம். அந்த கட்டுப்பாடற்ற கூட்டத்தால் பெருந்துயர சம்பவம் நடந்துள்ளது.
விஜய் அவர்களிடம் ஏன் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தீர்கள்.. பரப்புரை நடக்கும் இடத்திற்கு 500 மீட்டருக்கு முன்பாகவே விளக்கை அணைத்து ஸ்க்ரீன் போட்டு வண்டிக்குள்ளேயே ஏன் இருந்தீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும்.
ரவுண்டானா, உழவர்சந்தை பகுதிகள் மிகவும் சிறிய அளவிலான இடங்கள் என்பதால் அங்கு விஜயின் பரப்புரைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கூட்டத்திற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடத்தை தேர்வு செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரின் கடமை.
நெரிசல் காரணமாக ஜெனரேட்டர் அறைத் தடுப்புகளை த.வெ.க.வினர் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றதால், ஜெனரேட்டர் மின்சாரம் மட்டுமே தடைபட்டது. பரப்புரை இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் வாகனத்தை நிறுத்தும்படி காவல்துறை அறிவுறுத்தியும், மக்கள் கூட்டத்திற்குள் விஜயின் வாகனம் ஏன்?.
விஷமத்தனமாக வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். கரூரில் துயர சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடியது கட்டுப்பாடற்ற கூட்டம். 7 மணி நேரம் தாமதமாக வந்த விஜய், குறித்த நேரத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்தால் கரூரில் துயர சம்பவம் நடைபெற்றிருக்காது.
இவ்வாறு செந்தில் பாலாஜி விளக்கியுள்ளார்.