சொன்ன இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு வராதது யார் தவறா? அவரை சொன்ன நேரத்துக்கு வர வேண்டாம் என்று யாராவது தடுத்தார்களா? தடுத்து வைத்திருந்தார்களா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு :-
நடிகர் விஜய்யின் பொறுப்பற்ற தன்மை காரணமாக 41 உயிர்கள் பலியானது. அதனை மறைக்க பல்வேறு வதந்திகளை ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதில் முக்கியமானது மின்சாரத்தை துண்டித்தார்கள் என்பது ஆகும்.
"மின்சாரம் துண்டிக்கப்படவில்லை"என்று மின் வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி சொல்லி இருக்கிறார். "விஜய் பிரச்சாரத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. விஜய் வருவதற்கு முன்பு டிரான்ஸ்பார்மரிலும், மரத்திலும் சிலர் ஏறியதால் மின்சாரத்தை துண்டித்து, காவல் துறை மூலம் அவர்களை கீழே இறக்கியது மின் விநியோகம் செய்யப்பட்டது”என்று விளக்கம் அளித்துள்ளார்.
காவலர்கள் இல்லை, போலீஸ் பாதுகாப்பு முறையாகச் செய்யப்படவில்லை என்பது அடுத்ததாகச் சொல்லப்படுவது ஆகும். விஜய் பேச ஆரம்பித்த போது சிறப்பான காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறி நன்றி தெரிவித்தார். காவல்துறை சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை என்றால் விஜய் அப்படி சொல்லி இருப்பாரா?
கரூரில் விஜய் வருகைக்கு 10 ஆயிரம் பேரை எதிர்பார்ப்பதாகச்சொல்லி அனுமதி பெறப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன்கொடுத்த விண்ணப்பத்தில் 10 ஆயிரம் தொண்டர்கள்தான் வருவார்கள் என்று எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் பிரச்சாரக்கூட்டத்திற்கு சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூரில் ஏற்கனவே கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு SP-1, ADSP-2, டிஎஸ்பி-4 மற்றும் இன்ஸ்பெக்டர்கள்- 17 பேர் உட்பட சுமார் 500 காவலர்கள் கொல்லப்பட்டனர். பொதுவாக பொதுக்கூட்டத்துக்கு 50 பேருக்கு ஒரு காவலர் என்று நிறுத்தப்படுவார்கள். கரூர் நிகழ்ச்சிக்கு 20 பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் நிறுத்தப்பட்டார்கள்.
விண்ணப்பத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டனர். ஆனால் அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் 12 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் காலை 11 மணி முதல் கூட்டம்கூடியது. ஆனால் இரவு 7.10 மணிக்குத்தான் விஜய் வந்தார். முப்பது நிமிடத்தில்கடக்க வேண்டிய தூரத்தை இரண்டு மணி நேரம் தாமதம் ஆகும் வகையில் மெதுவாகக் கடந்தார் விஜய். இது கூட்டத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பரப்புரை கூட்டம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் என்ற இடம், கரூர் - ஈரோடு சாலையில் அமைந்துள்ளது. அவர்கள் கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக கேட்ட உழவர் சந்தை மற்றும் லைட்ஹவுஸ் ரவுண்டானா என்ற இரண்டு இடங்களும் இதைவிட குறுகலான இடங்கள் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. லைட் ஹவுஸ் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. அமராவதி பாலமும் இருக்கிறது. விஜய் கட்சி கேட்ட இடத்தை கொடுத்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாகி இருக்கும்.
வரவேற்பு கொடுத்த இடத்தில் இருந்து அவரது ரசிகர்கள், தொடர்ந்து வாகனத்தை பின் தொடர்ந்து வந்ததால் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. பேச வேண்டிய இடத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் இருப்பதால், பிரச்சார இடத்துக்கு முன்பே வாகனத்தை நிறுத்தி பேசும் படி போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அந்த அறிவுறுத்தலை விஜய் தரப்பு ஏற்கவில்லை.
நீண்ட நேர காத்திருப்பு, போதுமான தண்ணீர் தர மறுத்தது, இயற்கை உபாதைகளுக்கு கூட பொதுமக்களை வெளியில் செல்ல அனுமதிக்காமல் கயிறு வைத்து கட்டி இருப்பதுதான் மூச்சுத்திணறலுக்கு காரணம் ஆகும்.
சொன்ன இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு வராதது யார் தவறா? அவரை சொன்ன நேரத்துக்கு வர வேண்டாம் என்று யாராவது தடுத்தார்களா? தடுத்து வைத்திருந்தார்களா? குறிப்பிட்ட இடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறது முன்கூட்டியே பஸ் மீது ஏறி வந்திருந்தால் ஆங்காங்கே விஜயை பார்த்தவர்கள் கலைந்துச் சென்று இருப்பார்களே? அப்படி கலைந்து விடக் கூடாது என்பதுதானே அவரது திட்டம். திட்டம் போட்டு சாகடித்து விட்டார்கள்.
திருச்சியில் இருந்து கரூர் வரை விஜய் வாகனத்தை தொடர்ந்து செல்லுமாறு சில மாவட்ட ரசிகர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர்கள்தான் தொடர்ந்து போக்குவரத்தை நிறுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நிகழ்ச்சி நடந்த இடம் கரூராக இருந்தாலும் இங்கு மற்ற மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் அழைத்து வர உள்ளனர்.
உயிரிழந்தோர் பட்டியலில் திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியன மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். அப்படியானால் திட்டமிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் கூட்டத்தை அதிகரித்து காட்ட. வெளியூர்க்காரர்கள் எத்தனை மணிக்கு சாப்பிட்டார்களோ தெரியவில்லை?
சொன்ன நேரத்துக்கு வரவிடாமல் தி.மு.க. தடுக்கவில்லை. இதுபோன்ற கோரச் சம்பவம் நடந்த பிறகு கரூரை விட்டு அவரை யாரும் விரட்டவில்லை. அவர் இருந்திருக்க வேண்டியதுதானே? ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லாதது யார் குற்றம்?
அத்தகைய சூழலை உருவாக்கிவிட்டு, அடுத்தவர் மீது பழிபோடுவது உயிர்பலியைப் போலவே கொடூரம் ஆனது. பொய் முகத்தால் பிணவாடையை அமுக்க முடியாது.” எனத் தெரிவித்துள்ளது.