33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த தொடரில் இந்தியாவின் முதல் பதக்கத்தை 22 வயதான இந்திய வீராங்கனை மனு பாக்கர் வென்று அசத்தினார். மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.
மேலும், துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர். அதே போல 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷ்ன்ஸ் பிரிவில் இறுதிபோட்டியில், ஸ்வப்னிஸ் குசலே 451.4 புள்ளிகளை எடுத்து 3 ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து இந்தியாவுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு 4-ம் பதக்கம் கிடைத்துள்ளது. காலிறுதியில் பிரிட்டன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, அரையிறுதியில் ஜெர்மனியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி ஸ்பெயின் அணியை சந்தித்தது. இதில் முதல் கோலை ஸ்பெயின் அடித்த நிலையில், இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீட் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.
அதனைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்க முயன்ற ஸ்பெயினின் வாய்ப்புகளை இந்திய அணியின் தடுப்பு சுவர் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாக தடுத்த நிலையில், போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
ஒலிம்பிக்கில் 1980 வரை 8 தங்க பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, 41 ஆண்டுகளுக்கு பின் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வெண்கலம் வென்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த போட்டியோடு இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வுபெறுவதாக அறிவித்த நிலையில், அவரின் கடைசி போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.