விளையாட்டு

"விராட் கோலியிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை" - HONGKONG-க்கு எதிரான போட்டி குறித்து சூர்யகுமார் கருத்து !

விராட் கோலி எனது ஆட்டத்துக்கு தலைவணங்குவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

"விராட் கோலியிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை" - HONGKONG-க்கு எதிரான போட்டி குறித்து சூர்யகுமார் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹாங்காங் அணிக்கு எதிராக புதன்கிழமை நடந்த ஆசிய கோப்பை போட்டியில் மிகச் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் ஆடி ஆட்ட நாயகன் விருது வென்றார் இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். 24 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய அவர், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவதற்கு வழிவகுத்தார். சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய போது இந்திய அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருதது. ஓவருக்கு சுமார் 7 ரன்கள் விகிதத்தில் தான் இந்திய அணி அப்போது ஆடிக்கொண்டிருந்தது. அதனால் ஒரு மிகப்பெரிய பூஸ்ட் தேவைப்பட்டது. அதை இந்திய அணிக்குக் கொடுத்தார் சூர்யா. அவரும் விராட் கோலியும் சேர்ந்து அடுத்த 7 ஓவர்களில் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 192 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ரோஹித் அண்ட் கோ.

இந்திய இன்னிங்ஸின் இறுதி ஓவரில் 26 ரன்கள் விளாசி மிரள வைத்தார் சூர்யகுமார் யாதவ். அந்த இன்னிங்ஸ் முடிந்ததும், சூர்யகுமார் யாதவுக்கு தலை வணங்கினார் விராட். யாரும் எதிர்பாராமல் செய்யப்பட்ட அந்த மரியாதை பலருக்கும் வியப்பாக இருந்தது. இது பற்றி போட்டிக்குப் பின்பான பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யகுமார் யாதவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் இப்படியொரு விஷயத்தைப் பார்த்ததே இல்லை என்று கூறினார்.

"விராட் கோலியிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை" - HONGKONG-க்கு எதிரான போட்டி குறித்து சூர்யகுமார் கருத்து !

"அது ஒரு மிகவும் அற்புதமான தருணம். அப்படியொரு விஷயத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்னிங்ஸ் முடிந்ததும் அவரைப் பார்த்தேன். அங்கேயே நின்றிருந்தார். 'ஏன் அவர் போகாமல் நின்றுகொண்டிருக்கிறார்' என யோசித்தேன். அதன்பிறகு அவரிடம் சென்று சீக்கிரம் போவோம் என்று கூறினேன். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர். அவரோடு பேட்டிங் செய்வதை நான் மிகவும் ரசித்தேன். அதை அவரிடமும் கூறினேன்" என்று கூறினார் சூர்யகுமார் யாதவ்.

சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய போது இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் குறைவாக இருந்தது. அப்போது விராட் கோலி உடன் தான் கொண்ட உரையாடல் பற்றியும் கூறியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

"விராட் கோலியிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை" - HONGKONG-க்கு எதிரான போட்டி குறித்து சூர்யகுமார் கருத்து !

"அந்த சூழ்நிலையில் நான் களமிறங்கி வேகமாக ஆடவேண்டி இருந்தது. ஏனெனில் அந்த ஆடுகளம் பெரிதாக பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கவில்லை. அப்போது விராட் கோலியிடம் பேசினேன். 'உன்னை நீ வெளிப்படுத்து. வழக்கமாக எப்படி ஆடுவாயோ அது போலவே ஆடு' என்று கோலி கூறினார். நானும் எப்படி பேட்டிங் செய்யவேண்டும் என்ற என் திட்டத்தில் மிகவும் தெளிவாக இருந்தேன். அதனால் பேட்டிங் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறினார் சூர்யகுமார் யாதவ்.

கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆனார் சூர்யகுமார் யாதவ். 2022 ஐபிஎல் தொடருக்குப் பின்பு மீண்டும் சர்வதேச அரங்குக்குத் திரும்பிய சூர்யகுமார் யாதவ் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஜூலை மாதம் நடந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது மிகவும் சிறப்பாக விளையாடிய அவர், ஒரு சர்வதேச டி20 போட்டியில் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் ஆனார்.

banner

Related Stories

Related Stories