விளையாட்டு

IPL2022 ’தோற்றாலும் மீசையை முறுக்கு’ : பும்ராவின் ஆட்டத்தால் திருப்தியடைந்த மும்பை ரசிகர்கள்.. KKR vs MI

தன்னுடைய ஐ.பி.எல் கரியரின் மிகச்சிறந்த ஸ்பெல்லை பும்ரா வீசியிருந்தார். வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு மெய்டனோடு 5 விக்கெட்டுகளை வீழ்த்திதிருந்தார்.

IPL2022 ’தோற்றாலும் மீசையை முறுக்கு’ : பும்ராவின் ஆட்டத்தால் திருப்தியடைந்த மும்பை ரசிகர்கள்.. KKR vs MI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. மும்பை அணி 166 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறது. ஆனாலும், மும்பை ரசிகர்கள் பெரிதாக கவலையில் இல்லை. பும்ராவின் மிகச்சிறப்பான பெர்ஃபார்மென்ஸை பார்த்த திருப்தியிலேயே ஆறுதல்பட்டிருக்கின்றனர்.

கொல்கத்தா அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. ஓப்பனிங் கூட்டணியாக ரஹானேவும் வெங்கடேஷ் ஐயரும் இறங்கினார்கள். இருவருமே நன்றாக ஆடியிருந்தனர். முதல் விக்கெட்டுக்கு பவர்ப்ளேக்குள்ளாகவே 60 ரன்களை சேர்த்துவிட்டனர். முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 87 ரன்களை எடுத்திருந்தது. ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. இதே வேகத்தில் சென்றால் 200+ ஸ்கோரை எட்டிவிடுவார்கள் என தோன்றியது. ஆனால், அது நடக்கவில்லை. இரண்டாம் பத்து ஓவர்களில் மும்பை அணி 78 ரன்களை மட்டுமே எடுத்தது. 8 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. முதல் 10 ஓவர்களில் ஆடியதற்கு அப்படியே நேர் எதிராக மிக சொதப்பலான ஆட்டத்தை கொல்கத்தா அடுத்த 10 ஓவர்களில் ஆடியிருந்தது. கொல்கத்தாவின் இந்த சரிவிற்கு பும்ராவே காரணம்.

தன்னுடைய ஐ.பி.எல் கரியரின் மிகச்சிறந்த ஸ்பெல்லை பும்ரா வீசியிருந்தார். வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு மெய்டனோடு 5 விக்கெட்டுகளை வீழ்த்திதிருந்தார்.

முதலில் பவர்ப்ளேயில் பும்ரா ஒரு ஓவரை வீசியிருந்தார். அந்த ஓவரின் முதல் பந்தையே ரஹானே பவுண்டரியாக்கியிருப்பார். அந்த ஓவரில் 5 ரன்களை கொடுத்திருப்பார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இந்த ஓவருக்கு பிறகு நீண்ட நேரமாக ரோஹித் சர்மா பும்ராவுக்கு ஓவரே கொடுக்கவில்லை. மீண்டும் டெத் ஓவரில்தான் பும்ராவின் கைக்கு பந்து வந்தது.

15 வது ஓவரை வீசிய பும்ரா இந்த ஓவரில் 4 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். குறிப்பாக முக்கியமான ரஸலின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஒரு யார்க்கரை வீசி ரஸலை தட்டுத்தடுமாற செய்து, அடுத்த பந்தையே ஷார்ட்டாக வீசி லாங் ஆனில் ரஸலை கேட்ச் ஆக வைத்தார். இதே ஓவரில் நிதிஷ் ராணாவையும் ஒரு Unplayable ஷார்ட் டெலிவரியில் எட்ஜ் ஆக்கி கீப்பரிடம் கேட்ச் ஆக்கினார்.

அடுத்ததாக 18 வது ஓவரை பும்ரா வீசியிருந்தார். அதுதான் ஹைலைட்டான ஓவர். அந்த ஓவரில் ஒரு ரன்னை கூட கொடுக்காமல் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். செல்டன் ஜாக்சன், கம்மின்ஸ், நரைன் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மூன்றுமே ஷார்ட் டெலிவரியில் வீழ்த்தபட்டவை. வேகத்தை குறைக்காமல் 145 கி.மீ வேகத்திலேயே தொடர்ந்து யார்க்கர்களையும் ஷார்ட் டெலிவரிக்களையும் வீசி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

IPL2022 ’தோற்றாலும் மீசையை முறுக்கு’ : பும்ராவின் ஆட்டத்தால் திருப்தியடைந்த மும்பை ரசிகர்கள்.. KKR vs MI

கடைசி ஓவரில் எஞ்சியிருந்த ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தால் ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த ஸ்பெல்லாக இந்த ஸ்பெல் மாறியிருக்கும். ஆனால், பும்ராவால் அதை நிகழ்த்த முடியவில்லை. ரிங்கு சிங் இந்த ஓவரில் தன்னை எப்படியோ காப்பாற்றிக் கொண்டார். விக்கெட்டுகள் இல்லாவிடிலும் 5 டாட்களோடு ஒரே ஒரு சிங்கிள் மட்டுமே இந்த ஓவரில் சென்றிருந்தது.

4 ஓவர்களை வீசிய பும்ரா 10 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடைய ஐ.பி.எல் கரியரின் மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இதுதான்.

பும்ரா இந்த சீசனின் தொடக்கத்தில் ரொம்பவே சுமாராக வீசியிருந்தார். எக்கனாமிக்கலாக வீசினாலும் சீனியர் பௌலரிடமிருந்து அணி எதிர்பார்க்கும் விக்கெட்டுகளை அவரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. கடந்த 10 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். கொல்கத்தாவிற்கு எதிராக எல்லாம் ஒரே ஸ்பெல்லில் அப்படியே தலைகீழாக மாறியது. நான்கே ஓவர்களில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை தோற்றாலும் பும்ராவின் இந்த வெறித்தனமான பெர்ஃபார்மென்ஸ் ரசிகர்களை கொஞ்சம் ஆறுதல்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories