விளையாட்டு

“டெத் ஓவரில் சிக்ஸர் மழை.. வியப்பூட்டும் ஃபினிஷிங்” : உலகக்கோப்பை ரேஸில் முந்தும் தினேஷ் கார்த்திக்!

இந்திய அணியை உலகக்கோப்பையை வெல்ல வைக்க வேண்டும். அதில் பெருமைப்பட வகையில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே தினேஷ் கார்த்திக்கின் ஆசை.

“டெத் ஓவரில் சிக்ஸர் மழை.. வியப்பூட்டும் ஃபினிஷிங்” : உலகக்கோப்பை ரேஸில் முந்தும் தினேஷ் கார்த்திக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பெங்களூரு அணிக்கு பெரிதாக எந்த சிரமமுமே ஏற்படவில்லை. ரொம்பவே சுலபமாக வென்றுவிட்டனர். இந்த போட்டியை பொறுத்தவரைக்கும் அதிக கவனத்தை ஈர்த்தது தினேஷ் கார்த்திக் ஆடிய ஆட்டமே. நீண்ட நேரம் க்ரீஸில் நிற்கவில்லை. அதிகமான பந்துகளை எதிர்கொள்ளவில்லை. ஆனாலும், ஆச்சர்யமூட்டும் வகையிலான இன்னிங்ஸை ஆடியிருந்தார்.

பெங்களூரு அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. அந்த அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. சுஜித் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். ரொம்பவே ஏமாற்றமான தொடக்கமாகவே அமைந்திருந்தது. ஆனால், முடிவு அதற்கு எதிர்மாறாக ரொம்பவே பாசிட்டிவ்வாக அதிரடியாக பெங்களூருவிற்கு சாதகமாக முடிந்திருந்தது. அதற்கு காரணம் தினேஷ் கார்த்திக்.

19 வது ஓவரில்தான் க்ரீஸூக்குள்ளேயே வந்தார். ஒன்றரை ஓவர்களுக்குத்தான் க்ரீஸிலேயே நின்றார். ஆனால், அதற்கு முன்பு வீசப்பட்ட 18.3 ஓவர்களில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் ஏற்லடுத்தியதை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். கார்த்திக் தியாகி வீசிய அந்த 19 வது ஓவரின் இறுதி பந்தை மிடி விக்கெட்டில் மிரட்டலான சிக்சராக மாற்றியிருந்தார். ஃபரூக்கி வீசிய கடைசி ஓவரில் மூன்றாவது பந்தில்தான் தினேஷ் கார்த்திக்கிற்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. கடைசி 4 பந்துகளையுமே தினேஷ் கார்த்திக் தான் எதிர்கொண்டிருந்தார். இந்த 4 பந்துகளில் மட்டும் 22 ரன்களை தினேஷ் கார்த்திக் அடித்திருந்தார்.. தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களை அடித்தவர், கடைசி பந்தை பவுண்டரியோடு முடித்தார். மொத்தமாக 8 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்த தினேஷ் கார்த்திக் 30 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 375.

18.2 வது ஓவரில் மேக்ஸ்வெல் அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 159. அடுத்த ஒன்றரை ஓவரில் தினேஷ் கார்த்திக் அடைமழையாக அடித்து ஓய்ந்த பிறகு அணியின் ஸ்கோர் 192. ஒரு சராசரியான ஸ்கோரிலிருந்து சிறப்பான பெரிய ஸ்கோருக்கு அணியை நகர்த்தி சென்றிருந்தார்.

“டெத் ஓவரில் சிக்ஸர் மழை.. வியப்பூட்டும் ஃபினிஷிங்” : உலகக்கோப்பை ரேஸில் முந்தும் தினேஷ் கார்த்திக்!

தினேஷ் கார்த்திக் இந்த சீசன் முழுவதுமே பெங்களூரு அணிக்காக ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக ஆடி வருகிறார். கடைசிக்கட்ட ஓவர்களில் ஈவு இரக்கமின்றி பௌலர்களை அடித்து வெளுக்கிறார். இந்த சீசனில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் பேட்ஸ்மேன்களில் டாப்பில் இருக்கிறார்.

'நான் பேட்டிங் ஆடும்போது ஒரு கட்டத்தில் ரிட்டையர்டு அவுட் ஆகி தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் ஆட வரவைத்து விடலாமா? என்று கூட யோசித்தேன்' என பெங்களூருவின் கேப்டன் டூப்ளெஸ்சிஸ் போட்டி முடிந்த பிறகு பேசியிருந்தார். அந்தளவுக்கு ஒரு ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் தனது தடத்தை பதித்திருக்கிறார்

இந்திய அணிக்காக ஒரு கம்பேக் கொடுக்க வேண்டும். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும். இந்திய அணியை உலகக்கோப்பையை வெல்ல வைக்க வேண்டும். அதில் பெருமைப்பட வகையில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே தினேஷ் கார்த்திக்கின் ஆசை. அந்த ஆசையை நிஜமாக்கும் வகையிலேயே தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஆடி வருகிறார். இந்த இன்னிங்ஸ் ஆசையை நனவாக்கும் அந்த முயற்சியில் கூடுதலாக ஒரு முன்னேற்றத்தை எட்டியிருக்கிறார். தினேஷ் கார்த்திக்கை தாண்டி இந்த சீசனில் பெரிதாக வேறெந்த வீரரும் இவ்வளவு வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்துக் கொடுத்தது போல இல்லை. ஆக, தினேஷ் கார்த்திக்கின் ஆசை விரைவிலேயே நிறைவேறும் என நம்புவோம்.

banner

Related Stories

Related Stories