விளையாட்டு

நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் அசத்தல்... ஆனாலும் தோற்ற சன்ரைசர்ஸ் - காரணம் இதுதான்!

தமிழக வீரர்களான நடராஜனும் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்துவீசியிருந்த போதும் சன்ரைசர்ஸின் பேட்டிங் ஏமாற்றங்களால் தோல்வி உறுதியானது.

நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் அசத்தல்... ஆனாலும் தோற்ற சன்ரைசர்ஸ் - காரணம் இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது. தமிழக வீரர்களான நடராஜனும் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்துவீசியிருந்த போதும் சன்ரைசர்ஸின் பேட்டிங் ஏமாற்றங்களால் தோல்வி உறுதியானது.

இந்த போட்டியில் லக்னோ அணியே முதலில் பேட் செய்திருந்தது. சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் மிகச்சிப்பாக பந்துவீசி லக்னோவை முழுமையாக கட்டுப்படுத்தியது. குறிப்பாக, தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் பவர்ப்ளேயில் பாராட்டும் வகையில் வீசியிருந்தார். முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் 3 ஓவர்களை வீசியிருந்தார். இந்த 3 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையுமே வீழ்த்தியிருந்தார். டீகாக் இடது கை பேட்டராக இருந்ததால் வாஷிங்டன் சுந்தரை இரண்டாவது ஓவரிலேயே வில்லியம்சன் அழைத்திருந்தார். அணியின் தேவையை உணர்ந்து கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் பொருட்டு வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக வீசினார். இடது கை பேட்டர்களுக்கு ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன் டெலிவரிக்களாக மிடில் & லெக் ஸ்டம்ப்பை நோக்கி வீசினார். ஷாட் ஆட இடம் கிடைக்காமல் டீகாக், எவின் லீவிஸ் இருவருமே திணறினர். இன்சைட் அவுட்டாக பந்தின் திசைக்கு எதிராக கவர்ஸில் அடிக்க முயன்று டீகாக் அவுட் ஆனார். எவின் லீவிஸ் ஸ்வீப் மட்டுமே ஆட முயன்று அதுவும் முடியாமல் lbw ஆகி வெளியேறினார். ஆக, பவர்ப்ளேயில் வாஷிங்டன் எக்கானமிக்கலாக வீசியதோடு மட்டுமல்லாமல் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தார்.

வாஷிங்டன் சுந்தர் பவர்ப்ளேயில் சிறப்பாக வீசியிருக்க, நடராஜன் மிடில் ஓவர்களிலும் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசினார். குறிப்பாக, ஒரே ஓவரில் செட்டில் ஆகி அரைசதத்தை கடந்திருந்த கே.எல்.ராகுலின் விக்கெட்டையும் க்ரூணால் பாண்ட்யாவின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். யார்க்கர் வீச நினைத்த பெரும்பாலான சமயங்களில் யார்க்கர்களை மிகச்சரியாக வீசியிருந்தார்.

வாஷிங்டன் சுந்தருக்கும் நடராஜனுக்கும் இடையில் மற்ற பௌலர்கள் அவ்வளவு சிறப்பாக வீசியிருக்கவில்லை. புவனேஷ்வர் குமார் மட்டுமே கட்டுக்கோப்பாக வீசினார். செஃப்பர்டு, உம்ரான் மாலிக், அப்துல் சமத் போன்றோர் ரொம்பவே சுமாராக வீசியிருந்தனர். இவர்கள் வாஷிங்டன் ஏற்படுத்திக் கொடுத்த நல்ல தொடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கோட்டைவிட்டனர். இதனால், ராகுல் அரைசதம் அடித்தார். தீபக் ஹீடா அரைசதம் அடித்தார். லக்னோ அணியின் ஸ்கோரும் சராசரியை விட அதிகமாக உயர்ந்தது. கடைசியில் ஆயுஷ் பதோனியும் தன் பங்குக்கு வேலையை காட்ட லக்னோவின் ஸ்கோர் 169 ஆனது.

சேஸிங் என்பதாலும் ஓரளவுக்கு சுமாரான டார்கெட்தான் என்பதாலும் சன்ரைசர்ஸ் அணி பெருத்த நம்பிக்கையோடு களமிறங்கினர். ஆனால், ஆவேஷ் கான் சன்ரைசர்ஸின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் குலைத்து தோல்விக்கு சிவப்பு கம்பளம் விரித்தார். கேப்டன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா என அணியின் ஓப்பனர்கள் இருவரையும் பவர்ப்ளேக்குள்ளேயே பெவிலியனுக்கு அனுப்பினார். அங்கேயே சன்ரைசர்ஸ் கொஞ்சம் தடுமாற தொடங்கியது. ஆனாலும், ராகுல் திரிபாதியும் நிக்கோலஸ் பூரனும் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்கும் வேலைகளில் ஈடுபட்டனர். அட்டகாசமாக ஆடி அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் திரிபாதி 44 ரன்களில் க்ரூணால் பாண்ட்யாவின் ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். க்ரூணால் பாண்ட்யாவும் இரண்டு இடது கை பேட்டர்கள் இருந்த சமயத்தில் கூட மிகச்சிறப்பாக வீசியிருந்தார். வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பூரனும் வாஷிங்டன் சுந்தரும் க்ரீஸில் இருந்ததால் இது சாத்தியமாகும் சூழல் இருந்தது. பூரன் இயல்பிலேயே அதிரடியாக அடித்து வெளுக்கக்கூடியவர். வாஷிங்டன் சுந்தர் கடந்த போட்டியில் வெறியாட்டம் ஆடியிருந்தார். அதனால் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அப்போதுதான் மீண்டும் ஆவேஷ் கான் உள்ளே வந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை தூக்கினார். முதலில் பூரனை ஒரு ஃபுல் டாஸில் கேட்ச் ஆக்க, பின்பு அப்துல் சமத்தையும் ஒரு நல்ல யார்க்கர் லெந்த் டெலிவரியில் எட்ஜ் ஆக்கினார். ஆவேஷ் கான் மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தவர், இறுதியில் மிகச்சிறப்பாக மீண்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி முடித்தும் வைத்தார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹோல்டர் இந்த கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

சன்ரைசர்ஸ் கடந்த சீசனில் எப்படி சொதப்பியதோ அப்படியே இந்த சீசனிலும் சொதப்பிக் கொண்டிருக்கிறது. இரண்டு போட்டிகள் மட்டுமே முடிந்திருக்கிறது. அந்த அணி சீக்கிரமே சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories