விளையாட்டு

ஆர்.சி.பி 2.0 - கோலி, டூப்ளெஸ்சிஸின் துணையின்றி வென்ற அதிசய RCB!

கோலி & டூப்ளெஸ்சிஸின் பங்களிப்பு இல்லாமலேயே பெங்களூரு அணி ஒரு சேஸிங்கை நன்றாக திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்தி வெற்றிகரமாக முடிப்பதெல்லாம் மாமாங்கத்திற்கு ஒரு முறை நடக்கும் அரிதான நிகழ்வு.

ஆர்.சி.பி 2.0 - கோலி, டூப்ளெஸ்சிஸின் துணையின்றி வென்ற அதிசய RCB!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. குறைவான ஸ்கோராகவே இருந்தாலும் கடைசி ஓவர் வரை சென்று பரபரப்பான போட்டியாகவே முடிந்திருந்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

பெங்களூருவின் இந்த வெற்றி கொஞ்சம் அதிசயிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அந்த அணி எப்போதுமே ஒன்றிரண்டு பிரதான வீரர்களை மட்டுமே நம்பியிருக்கும் அணி. அவர்கள் முதுகில் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்த அணி. நம்பியிருக்கும் அந்த ஒன்றிரண்டு வீரர்கள் சொதப்பிவிட்டால் பெங்களூரு அணி போராட்டமேயின்றி வீழ்ந்துவிடும்.

கடந்த சீசன் வரைக்குமே இதுதான் நிலைமை. பெங்களூரு அணியின் கேப்டனான கோலியையும் டீவில்லியர்ஸையும் மட்டுமே பெங்களூரு அணி பெரிதாக நம்பியிருந்தது. இவர்கள் இருவரும் பெர்ஃபார்ம் செய்தால் பெங்களூரு வெல்லும். இவர்கள் இருவரும் சொதப்பினால் பெங்களூரு தோற்கும். கோலிக்கு மேல் வரிசையிலும் பெரிதாக யாரும் ஸ்கோர் செய்யமாட்டார்கள். டீவில்லியர்ஸுக்கு கீழ் வரிசையிலும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யமாட்டார்கள். இதுதான் அந்த அணியின் பலம் மற்றும் பலவீனமும் கூட.

கடந்த சீசனில் மேக்ஸ்வெல்லை பெங்களூரு ஏலத்தில் எடுத்திருந்தது. அவர் இந்த நிலைமையை கொஞ்சம் மாற்றியிருந்தார். ஓப்பனிங்கில் தேவ்தத் படிக்கல் ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தார். ஆனாலும் பெங்களூருவின் அச்சாணி என்பது கோலியையும் ஏபிடியையும் மையமாக வைத்தே சுழன்று கொண்டிருந்தது. முழுமையாக அந்த சார்பு தன்மையிலிருந்து பெங்களூரு அணியால் விடுபட முடியவில்லை.

இப்படியான சூழலில்தான் பெங்களூரு அணி ஆடி வென்றிருக்கும் நேற்றைய போட்டி புதிய நம்பிக்கைகளை படரச் செய்திருக்கிறது. இந்த சீசனிலேயே ஏபிடி இல்லை. மேக்ஸ்வெல் இன்னமும் இந்தியா வந்து சேரவில்லை. அணியில் இப்போது இருக்கும் கேப்டனான டூப்ளெஸ்சிஸ் 5 ரன்களிலும் முன்னாள் கேப்டன் கோலி 12 ரன்களிலும் அவுட் ஆகிவிட்டனர். ஆனாலும், பெங்களூரு அணி போட்டியை வென்றிருக்கிறது. இதுதான் அதிசயம்...அற்புதம்!

கடந்த போட்டியிலேயே பார்த்திருப்போம். டூப்ளெஸ்சிஸும் கோலியுமே அடித்து வெளுத்திருப்பார்கள். இந்த சீசனில் இவர்களை மையமாக வைத்தே ஆர்சிபி சுழலப்போகிறது என்பதற்கான அறிமுக டீசர் அது. ஆனால், அடுத்த போட்டியிலேயே அதாவது கொல்கத்தாவிற்கு எதிரான நேற்றைய போட்டியிலேயே அந்த இரண்டு முக்கிய வீரர்களும் மோசமாக ஆடுகின்றனர். கோலி அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 17-3 மூன்றாவது ஓவரிலேயே ஆட்டம் இருந்தது. பழைய பெங்களூருவாக இருந்திருந்தால் பெங்களூருவின் தோல்வி இங்கேயே உறுதி செய்யப்பட்டிருக்கும். அவர்களின் குறைந்தபட்ச ரெக்கார்டான 49 ரன்னுக்குள்ளேயே சுருண்டு இன்னொரு புதிய ரெக்கார்டை செட் செய்திருப்பார்கள். ஆனால், இது புதிய ஆர்சிபி. ஆர்சிபி 2.0 என எடுத்துக்கொள்ளலாம். இதில் முக்கியமான வீரர்களை கடந்து மற்ற வீரர்களும் பெர்ஃபார்ம் செய்தார்கள். டேவிட் வில்லி மற்றும் ரூதர்போர்டு இருவரும் நின்று மேற்கொண்டு வேகமாக விக்கெட் விழாமல் தடுத்து நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 9 ஓவர்களுக்கு விக்கெட்டே விடாமல் நின்று 45 ரன்களை எடுத்திருந்தனர். ஓவருக்கு 5 ரன்கள் என்ற விகிதத்தில்தான் அடித்திருக்கிறார்கள் என்பதில் பிரச்சனையில்லை. ஏனெனில், டார்கெட்டே 129 தான் என்பதால் ரன்ரேட்டை பற்றி கவலைப்படாமல் ஆடுவதற்கான சௌகர்யம் பெங்களூருவிற்கு இருந்தது. வேகமாக சரிந்த விக்கெட்டுகள்தான் பிரச்சனையாக இருந்தது. அதைதான் டேவிட் வில்லி-ரூதர்போர்டு கூட்டணி முதன்மை பிரச்சனையாக கொண்டு ஆடி சாதித்தது. இவர்கள் விக்கெட்டை காத்து ஆடி நெருக்கடியான சூழலை சரி செய்துவிட்டு செல்ல, இவர்களுக்கு பிறகு வந்த ஷபாஷ் அஹமதுவும் தினேஷ் கார்த்திக்கும் ரன்ரேட்டிற்காக ஆடி கடைசிக்கட்ட ஓவர்களில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தனர்

கோலி & டூப்ளெஸ்சிஸின் பங்களிப்பு இல்லாமலேயே பெங்களூரு அணி ஒரு சேஸிங்கை நன்றாக திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்தி வெற்றிகரமாக முடிப்பதெல்லாம் மாமாங்கத்திற்கு ஒரு முறை நடக்கும் அரிதான நிகழ்வு. அது இந்த சீசனின் தொடக்கத்திலேயே நடந்திருப்பது பெங்களூருவிற்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இது அரிதாக நடந்தது என்பதை தாண்டி சீராக நடக்கும் விஷயமாக மாற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

banner

Related Stories

Related Stories