
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல், 01.01.2026 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) ரிப்பன் கட்டட அலுவலகத்தில் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில், கணக்கெடுப்பு பணி நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (19.12.2025) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களிலும் (பெருநகர சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில்), மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் தங்கள் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் / தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்களது பெயர்களை சேர்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் நிரந்தர இடமாற்ற பதிவுகள், இறந்தோர் மற்றும் ஆட்சேபனை தொடர்பான பெயர் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்றத் தொகுதிகளிலேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் தங்கள் பெயரை அந்த பகுதியிலும்/ தொகுதியிலும் சேர்க்கவோ (அ) மாற்றவோ விருப்பப்பட்டால் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.

மேலும் இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் போது அதனை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் சமர்ப்பிக்கலாம். மேலும் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், தங்களுடைய பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
சென்னை மாவட்டத்தில் 3,718 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் தற்போது புதிதாக 361 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 192 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் 27.10.2025 அன்றைய தேதியில் 19,62,245 ஆண் வாக்காளர்களும், 20,41,144 பெண் வாக்காளர்களும் மற்றும் 1,305 இதர வாக்காளர்களும் என மொத்தம் 40,04,694 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
தற்போது நடைபெற்று முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 2026ன்படி, சென்னை மாவட்டத்தில் 12,47,690 ஆண் வாக்காளர்களும், 13,31,243 பெண் வாக்காளர்களும் மற்றும் 743 இதர வாக்காளர்களும் என மொத்தம் 25,79,676 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மேலும் 1,56,555 இறந்த வாக்காளர்கள், 12,22,164 இடம்பெயர்ந்தோர், 27,328 Absent, 199 இதர இன வாக்காளர்கள் மற்றும் 18,772 இரட்டை பதிவு வாக்காளர்கள் என மொத்தம் 14,25,018 வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சட்டமன்றத் தொகுதி வாரியாக கீழ்க்கண்டவாறு உள்ளது.







