
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026 (Special Intensive Revision - 2026)க்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (19.12.2025) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் (பெருநகர சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில்) மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்ததாவது,
“19.12.2025 அன்று நிலவரப்படி, மொத்தம் 6,41,14,587 வாக்காளர்களில் 5,43,76,755 வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் S.I.R பணிக்கு பிறகு, 97,37,832 (15.18%) பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் S.I.R பணிக்கு பிறகு, 40.04 லட்சமாக இருந்த சென்னை வாக்காளர்களின் எண்ணிக்கை, 25.79 லட்சமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் S.I.R வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் BLO-க்களை அணுகலாம்.
விடுபட்ட வாக்காளர்களும், புதிய வாக்காளர்களும் டிச.19 முதல் ஜனவரி 18 வரை சிறப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அனைத்து தகுதியான இளம் வாக்காளர்களையும் பதிவு செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்க்கவோ அல்லது தகுதியற்ற பெயர்களை நீக்கவோ கோரிக்கை அல்லது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம்.”






