
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026 (Special Intensive Revision - 2026)க்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (19.12.2025) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் (பெருநகர சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில்) மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத புதிய வாக்காளர்கள் மற்றும் 01.01.2026 மைய நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக வரும் 20.12.2025 மற்றும் 21.12.2025 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இருநாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இம்முகாம்களில், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் / தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்களது பெயர்களை சேர்க்கலாம். வாக்காளர் பட்டியலில் நிரந்தர இடமாற்ற பதிவுகள், இறந்தோர் மற்றும் ஆட்சேபனை தொடர்பான பெயர் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும்;
சட்டமன்றத் தொகுதிகளிலேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் தங்கள் பெயரை சேர்க்கவோ (அ) மாற்றவோ விருப்பப்பட்டால் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடமும் சமர்ப்பிக்கலாம். மேலும் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், தங்களுடைய பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.






