விளையாட்டு

புள்ளிப் பட்டியலில் இன்னும் முன்னேறுமா தமிழ் தலைவாஸ்..? - சூடுபிடிக்கும் Pro Kabaddi சீசன் 8!

எப்போதுமே கடைசி இரண்டு இடங்களிலேயே அந்த அணியைப் பார்த்து பழகியிருந்த ரசிகர்களுக்கு, இந்த ஆண்டு புதிதாக இருக்கிறது.

புள்ளிப் பட்டியலில் இன்னும் முன்னேறுமா தமிழ் தலைவாஸ்..? - சூடுபிடிக்கும் Pro Kabaddi சீசன் 8!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ப்ரோ கபடி சீசன் 8 தொடர் பெங்களூரில் நடந்து வருகிறது. 2 ஆண்டுகள் நடக்காமல் இருந்த இந்த தொடர் மீண்டும் வந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தத் தொடரில் முன்பைப் போல் இல்லாமல் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழ் தலைவாஸ். 6 போட்டிகளின் முடிவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது!

இதுநாள்வரை தமிழ் தலைவாஸ் இப்படியொரு நிலையில் இருந்து யாரும் பார்த்ததில்லை. இரண்டு போட்டி மட்டுமே முடிந்த நிலையில்கூட இவ்வளவு டாப் பொசிஷனில் இருந்ததில்லை. எப்போதுமே கடைசி இரண்டு இடங்களிலேயே அந்த அணியைப் பார்த்து பழகியிருந்த ரசிகர்களுக்கு, இந்த ஆண்டு புதிதாக இருக்கிறது.

முன்பு சீனியர் வீரர்களாக எடுத்து வைத்திருந்தபோதும், அவர்களால் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. அஜய் தாக்கூர், ராகுல் சௌத்ரி, மன்ஜித் சில்லர் என சூப்பர் ஸ்டார்களெல்லாம் சொதப்ப, படுதோல்வி அடைந்துகொண்டிருந்தது தமிழ் தலைவாஸ்.

இந்த முறை அவர்கள் அனைவரையும் கழட்டிவிட்டு புதிய அணியாக எடுத்தார்கள். அனுபவ டிஃபண்டர் சுர்ஜித் சிங் கேப்டன் ஆனார். பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு விளையாடிய தமிழக வீரர் பிரபஞ்சன் மீண்டும் தமிழ் தலைவாஸுக்குத் திரும்பினார். சாகர், மோஹித், சாஹில் போன்றவர்கள் அணியின் முக்கிய அங்கமாக மாறினார்கள். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட அஜித்தை எடுக்காமல், புனேரி பால்டன் அணிக்காகக் கலக்கிய இளம் வீரர் மஞ்சித்தை பெரும் தொகை கொடுத்து எடுத்தனர். ஒரு புதுமையான அணியை உருவாக்கினார் பயிற்சியாளர் உதயகுமார்.

அந்த அணி இப்போது நல்ல முடிவுகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. எதிர்பார்த்ததைப் போலவே மஞ்சித் அணியின் முன்னணி ரெய்டராகக் கலக்கிக்கொண்டிருக்கிறார். பிரபஞ்சன் பெரிதாக சோபிக்காதபோதும் மாற்று வீரராக அஜிங்க்யா பவார் தேவையான நேரத்தில் புள்ளிகள் எடுத்துக்கொடுக்கிறார். இருந்தாலும், ரெய்டிங் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது. அதையெல்லாம், டிஃபண்டர்கள் சரிகட்டி விடுகிறார்கள்.

கேப்டன் சுர்ஜித், சாகர், மோஹித், சாஹில் அடங்கிய கூட்டணி சிறப்பாக செயல்பட்டுவருகிறது. சாஹில் மட்டும் அவ்வப்போது சொதப்பினாலும், மற்றவர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பைக் கொடுக்கிறார்கள். இருக்கும் ஒரே பிரச்னை என்னவெனில், முதல் பாதியில் சிறப்பாக விளையாடி நல்ல முன்னிலை பெறும் அணி, இரண்டாவது பாதியில் கொஞ்சம் சொதப்பிவிடுகிறது. இதனால், பல போட்டிகளில் வெற்றியைத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் அப்படித்தான், கடைசி 3 நிமிடங்களில் ஐந்தும் புள்ளிகளுக்கும் மேல் வாரி வழங்கினார்கள். வெற்றி பெற்றிருக்கவேண்டிய போட்டியை டை செய்தனர். யு மும்பா, தபாங் டெல்லி அணிகளுடனான போட்டிகளுமே டையில்தான் முடிந்தது.

டெல்லியுடனான போட்டியை டை செய்ததெல்லாம் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம். பெங்களூரு புல்ஸ் அணியோடு மட்டும்தான் தோற்றிருக்கிறது. புனேரி பால்டன்ஸ், யு.பி.யோத்தா இரண்டு அணிகளையும் வீழ்த்தியிருக்கிறது நம் அணி. 6 போட்டிகளில், 2 வெற்றி, 3 டை, 1 தோல்வி என 19 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது தமிழ் தலைவாஸ். வியாழன் இரவு நடக்கும் போட்டியில் மூன்றாவது இடத்திலிருக்கும் பாட்னா பைரேட்ஸ் அணியோடு மோதுகிறது தமிழ் தலைவாஸ். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் இன்னும் முன்னேறும்.

banner

Related Stories

Related Stories