ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி முதலில் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா தொற்று காரணமாகப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவின் பெயரிலேயே இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ம் தேதிவரை உலக கோப்பை டி.20 போட்டிகள் நடைபெறுகிறது. ஐ.பி.எல் தொடர் முடிந்த உடனே அந்தந்த நாட்டு வீரர்கள் துபாயிலிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகிறார்கள். இங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும்.
இந்நிலையில் டி.20 உலக கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. அதன் படி கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.6 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கு தலா ரூ.3 கோடியும் வழங்கப்பட உள்ளது. மேலும் உலக கோப்பை டி.20 போட்டிக்கு மட்டும் ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது.
அதேபோல் சூப்பர் 12 சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும். இதற்காக ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் அணிகளுக்கு இவ்வளவு தொகையா என கிரிக்கெட் ரசிகர்கள் விழுந்து பார்க்கும் அளவிற்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே உலக கோப்பை டி.20 போட்டி தொடங்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நவம்பர் மாதம் வரை பெரிய விருந்து காத்துக்கொண்டிருக்கிறது.