தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மகத்தான முன்னெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்தப் இயக்கம் 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து 38 வருவாய் மாவட்டக் கழகங்களிலும், அந்தந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சேர்ந்து ’ஒரணியில் தமிழ்நாடு’ குறித்து அவரவர் பகுதிகளில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து ஓரணியில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்து, திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினர்.
இந்நிலையில், சென்னை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள மீர்சாகிப்பேட்டை - முஸ்துரா பேகம் தெருவில் வீடு வீடாக சென்று ’ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, தி.மு.க.வில் இணைய உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி, பாசிச பாஜக - அடிமை அதிமுகவுக்கு எதிராக தமிழ்நாடு மீண்டும் ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது. ‘ஓரணியில் தமிழ்நாட்டை’ பட்டிதொட்டி எங்கும் சேர்க்கும் ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம். 2026-ல் கழக அணி இருநூறுக்கும் அதிகமான தொகுதிகளில் வென்றதென சரித்திரம் படைப்போம்" என தெரிவித்துள்ளார்.