தமிழ்நாடு

3 மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்: ரூ.117.65 கோடியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் மொத்தம் ரூ.117.65 கோடி மதிப்பீட்டில் டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

3 மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்: ரூ.117.65 கோடியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (26.02.2026) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, ரெட்டியார்பட்டி கிராமத்தில், ரூ.39.06 கோடி மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தாலுகா, கூரைக்குண்டு கிராமத்தில் ரூ.38.72 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் ஈரோடு மாவட்டம், ஈரோடு தாலுகா, கங்காபுரம் கிராமத்தில் ரூ.39.87 கோடி மதிப்பீட்டிலும், என மூன்று டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், தைவான் நாட்டை சேர்ந்த ADATA டெக்னாலஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான ADATA செமிகண்டக்டர் நிறுவனம், ரூ.931 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் 823 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்கா, உயர்தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் DRAM memory modules and Flash drives உற்பத்தி ஆலை அமைப்பதற்கும் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், EROS GEN AI நிறுவனம் IIT Madras ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள Large Cultural Voice Models (LCVM) திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டார். இத்திட்டத்தை ரூ.3,600 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் சுமார் 1,000 உயர் திறன்மிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சென்னையில் விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்கள்

2000-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை, தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.

தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக, மதுரை மாநகரில் ரூ.314 கோடி மதிப்பீட்டில், 5.34 இலட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் ரூ.403 கோடி மதிப்பீட்டில், 5.58 இலட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும், புதிய டைடல் பூங்காக்கள் நிறுவ முதலமைச்சர் அவர்களால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இவற்றின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 5.57 இலட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவில், 21 தளங்களுடன் கட்டப்பட்ட பட்டாபிராம் டைடல் பூங்கா, முதலமைச்சர் அவர்களால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும், ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 இலட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இவை மட்டுமின்றி, டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி விழுப்புரம் மினி டைடல் பூங்கா 17.02.2024 அன்றும், தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் 23.09.2024 அன்றும், தூத்துக்குடி மினி டைடல் பூங்கா 29.12.2024 அன்றும், திருப்பூர் மினி டைடல் பூங்கா 11.08.2025 அன்றும், வேலூர் மினி டைடல் பூங்கா 05.11.2025 அன்றும், காரைக்குடி மினி டைடல் பூங்கா 31.01.2026 அன்றும் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 01.08.2025 அன்றும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 05.11.2025 அன்றும் முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் அவர்களால் நேற்று (25.02.2026) அடிக்கல் நாட்டப்பட்டது.

இவை மட்டுமின்றி நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இவற்றின் கட்டுமானப்பணிகள் துவங்கப்படவுள்ளன.

திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுதல்

தகவல் தொழிற்நுட்பத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, ரெட்டியார்பட்டி கிராமத்தில், ரூ. 39.06 கோடி மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தாலுகா, கூரைக்குண்டு கிராமத்தில் ரூ. 38.72 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் ஈரோடு மாவட்டம், ஈரோடு தாலுகா, கங்காபுரம் கிராமத்தில் ரூ. 39.87 கோடி மதிப்பீட்டிலும் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இவை ஒவ்வொன்றும் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் தலா 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் அனைத்து அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.

இந்த மினி டைடல் பூங்காக்களின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வசித்துவரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன், அப்பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும்.

ஈரோஸ் மீடியா வேர்ல்ட்

இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 1977-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஈரோஸ் மீடியா வேர்ல்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவான ஈரோஸ் ஜெனரல் AI, ரூ.3,600 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் சுமார் 1,000 உயர் திறன்மிக்க வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் சென்னை, இந்திய தொழில்நுட்ப கழகம் (IITM) ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட Large Cultural Voice Models (LCVM) திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டார்.

ADATA டெக்னாலஜி கோ., லிமிடெட்

தைவான் நாட்டின் நியூ தைபே-யை தலைமையகத்தைக் கொண்ட ADATA டெக்னாலஜி கோ., லிமிடெட் நிறுவனம், DRAM தொகுதிகள், மேசைகணினிகள், மடிக்கணினிகள், கைப்பேசி உபபாகங்கள், சேவையகங்கள் மற்றும் பணிநிலையங்களுக்கான DDR4 மற்றும் DDR5 தகவல் சேமிப்பக தொகுதிகள் போன்ற முக்கிய தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உலகளாவிய நிறுவனம் ஆகும். மேலும், XPG (எக்ஸ்ட்ரீம் செயல்திறன் கியர்) உயர் செயல்திறன் கொண்ட கேமிங் DRAM, SSDகள், கணினி உபபாகங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு முழுவதும் சொந்தமான ADATA செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் ரூ.931 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் 823 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்கா, உயர்தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் DRAM memory modules and Flash drives உற்பத்தி வசதி அமைப்பதற்கு இன்று முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

banner

Related Stories

Related Stories